Skip to main content

எதிர்ப்பவர்களின் ஓட்டுரிமையை பிடுங்க வேண்டும் என்பதே அவர்களின் லட்சியம் - தயாநிதி மாறன் பேச்சு!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020


நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தற்போது இதனை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. தில்லியில் இந்த போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறையில் இதுவரை 38 பேர் ப  லியாகியுள்ளார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி சிஏஏ சட்டத்தால் தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம் மக்களுக்கு என்ன பிரச்சனை வந்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். இதற்கிடையே திமுக தலைவர் ஸ்டாலினின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தல் கலந்துகொண்ட திமுக எம்பி தயாநிதி மாறன் இந்த குடியுரிமை சட்டம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். 

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " இந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஏன் போராட்டம் நடத்துகிறார்கள் என்று நம்மை பார்த்து கேட்கிறார்கள். இன்னொரு பக்கம் சிலர் எங்கள் வாக்குக்கள் எல்லாம் உங்களுக்கு வேண்டாமா? நீங்கள் எப்போது எங்களுக்கு வாக்கு அளித்தீர்கள் என்று அவர்களிடம் கேட்க தோன்றுகிறது. குடியுரிமை சட்டத்தை பொறுத்த வரையில் முஸ்லிம்களுக்கு இல்லை, மற்றவர்களுக்கு உண்டு என்பதுதான் தற்போதைய நிலை. தற்போது புதிதாக தேசிய மக்கள் தொகை பதிவேடு என்ற ஒன்றை கொண்டு வருகிறார்கள். இதற்காக 4000 கோடி செலவிடப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். கடந்த 2009ம் ஆண்டுக்கு பிறகு 12000 கோடி செலவு செய்து ஆதார் திட்டத்தை கொண்டுவந்தார்கள்.

 

fg

 


தற்போது ஆதார் இருந்தால்தான் ரேஷன் கார்டு, வங்கியில் புதிய கணக்கு உள்ளிட்ட அனைத்தும் தொடங்க முடியும் என்ற நிலையில், தற்போது மக்கள் தொகை கணக்கீட்டை எடுக்க இருப்பதாக கூறியிருக்கிறார்கள். பழைய காலத்தில் சரியான டேட்டா இருக்காது, அதனால் மக்கள் தொகை கணக்கீட்டை ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை எடுத்து வந்தார்கள். தற்போது ஆதாரில் தான் அனைத்து தகவலையும் வைத்திருக்கும் போது பிறகு ஏன் 4000 கோடி செலவு செய்ய வேண்டும். அவர்கள் நினைத்தால் அதை தடுக்கலாம். தற்போது புதிதாக அந்த கணக்கீடு செய்யும் போது 10 கேள்விகளை கேட்க இருக்கிறார்கள். அதில் நீங்கள் கொண்டாடும் பண்டிகைகள் என்ன என்று கேட்டுள்ளார்கள். அதில் முஸ்லிம் பண்டிகைகள் இல்லை. ஏன் என்றால் ரம்ஜான் உள்ளிட்ட முஸ்லிம்களின் பண்டிகளை பிறைகளை பார்த்து வருவதால் நாங்கள் அதில் சேர்க்கவி்ல்லை என்று கூறுகிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

அவர்களின் நோக்கம் எல்லாம் இந்த கணக்கீட்டை எடுத்து அவர்கள் கேட்கும் ஆவணங்களை நம்மால் கொடுக்க முடியவில்லை என்றால், நம்மிடம் இருந்து ஆதாரை பறிக்கவும், பாஸ்போர்ட்டை முடக்கவும் செய்வார்கள். அடுத்து அவர்களுக்கு எதிராக யார் வாக்களிப்பார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் வாக்குரிமையை பறிக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் தற்போது தீவிரமாக இறங்கியுள்ளார்கள். அதற்கான முதல் பணியாகவே இதனை நாம் கருத வேண்டும். இல்லை என்றால் கணினியில் தகவல்கள் இருக்கும் போது மீண்டும் ஒரு முறை கணக்கீடு செய்ய வேண்டிய அவசியம் எதற்காக வந்தது. அவர்களின் ஆணவ போக்கு காரணமாகவே தற்போது கூடுதல் செலவு உள்ளிட்ட மக்கள் விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது" என்றார்.