ADVERTISEMENT

தேர்தலில் விளையாடிய பணம்... சீக்ரெட்டை உடைத்த பத்திரிகையாளர் பிரகாஷ்!

02:45 PM Apr 16, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் சில மாதங்களாக அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பெரிய அளவிலான பண பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை நக்கீரன் சிறப்பு செய்தியாளர் பிரகாஷ் அவர்களிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. வரும் மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில வாரங்கள் இருக்கின்றன. பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தின் மீது ஒரு சந்தேகத்தோடே இருக்கிறார்கள். அதற்கு வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு பிடிப்பட்டது மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூட தேர்தல் ஆணையத்தையும் காவல்துறையையும்விட நம்முடைய கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பாதுகாப்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அதிமுக தரப்பிலும் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு இதே போன்றதொரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பொதுமக்களின் அச்சம் என்பது மிகவும் உண்மையானது. காரணம் என்வென்று பார்க்க வேண்டும். இந்தியாவில் எங்கும் தேர்தலுக்குப் பணம் கொடுக்கவில்லை. ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலில் சந்திரபாபு நாயுடுக்கு ஆதரவான இடங்களில் கொஞ்சம் பணம் கொடுத்தார். கர்நாடகாவில் சில இடங்களில் காங்கிரஸ் பணம் கொடுத்தது. இதுதான் அதிகபட்சம் பண விநியோகமாக கருத வேண்டும். இதைத் தாண்டி பெரிய அளவிலான பணப் புழக்கம் எங்கும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுக்க முடியவில்லை. இந்தியாவில் எங்குமே நடக்காத வகையில் வாக்குக்குப் பணம் பெரிய அளவில் கொடுக்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையமே இதைத்தான் கூறுகிறது.

இந்த பண விநியோகத்தை அடிப்படையாக கொண்டே தமிழகத்தில் தேர்தலை முன்பே நடத்தியதாகவும் கூறப்பட்டு வருகிறது, இதில் உண்மை இருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது, அதுவும் ஒரு காரணம். மேற்கு வங்க தேர்தலை எடுத்துக்கொண்டால் கூட அங்கே வாக்குச்சாவடியைக் கைப்பற்றுதல், வன்முறை, துப்பாக்கிச்சூடு என்று நிலைமை இருந்து வருகிறது. அங்கே பணம் கொடுத்தல் என்ற விவாதமே இதுவரை எழுந்ததில்லை. கேரளாவில் எதுவுமே நடக்காது. மிகவும் உஷாராக இருப்பார்கள். அங்கே பண விளையாட்டுக்கள் செல்லுபடியாகாது. படித்தவர்கள் அதிகம் இருக்கக்கூடிய மாநிலம். பாண்டிச்சேரியும் தமிழகத்தைப் போலத்தான். அடுத்தது அஸ்ஸாம். அங்கேயும் வன்முறை நடக்குமே தவிர, வாக்குக்குப் பணம் கொடுக்கப்படவில்லை. பணம் கொடுக்கும் விஷயம் என்பது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நடக்காத ஒன்று. ஆனால் தமிழகத்தில் அதிகம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆர்.கே நகர், திருமங்கலம் இடைத்தேர்தல் என்று இங்கே பணம் கொடுத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

15 ஆயிரம் கோடி வரை பணம் கொடுப்பது என்பது தமிழகத்தில் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. தேர்தல் ஆணையம் பணம் கொடுப்பதை தடுப்பதற்கு மேற்பார்வையாளர் என்று ஒருவரை போடும். அவர் புகார் கொடுத்தால்தான் தேர்தல் ஆணையம் அதில் நடவடிக்கை எடுக்கும். ஆனால் அந்த அதிகாரியுடன் இருப்பவர்கள் யார் என்றால், தமிழக வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார். அதனால்தான் காவல் அதிகாரிகள் கூட தொடர்ந்து 4 ஆண்டுகள் ஒரே இடத்தில் இருந்தால் மாற்றப்படுகிறார்கள். லோக்கலில் கட்சியினருடன் தொடர்பில் இருக்கக் கூடாது என்ற காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் மாறவில்லை. இவர்கள் அந்த மேற்பார்வையாளர் செல்லுமிடம் எங்கும் உடன் செல்வார்கள். அந்த அதிகாரி ஆய்வுக்குச் செல்லும்போது, அதனை முன்கூட்டியே இந்த வருவாய் அதிகாரிகள் கட்சியினருக்கு தெரிவித்துவிடுவார்கள். பணம் கொடுப்படும் நின்றுவிடும். அவர் ஆய்வு செய்துவிட்டு போனவுடன் மீண்டும் பண விநியோகம் நடைபெறும்.

இதையும் தாண்டி இந்த அதிகாரிகள், ரோட்டில் செல்லும் பொதுமக்களிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பணம் இருப்பதாக 900 கோடி ரூபாய் அளவுக்குப் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளார்கள். அது வணிக நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட பணமாகக் கூட இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் பிடிபடாத பணம் எவ்வளவு? அந்தப் பணம் தற்போது எங்கே? 15 ஆயிரம் கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமற்ற ரிப்போர்ட் சொல்கிறது. இதைப் பிடிக்க வேண்டிய தேர்தல் அதிகாரி யார்? அவர்கள் எங்கே கோட்டைவிட்டார்கள் என்ற கேள்வி எழுகிறது. காவலர்கள் என்ன செய்தார்கள் என்ற வினாவும் எழுகிறது. புகார் வந்த இடங்களில் எல்லாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள். அவர்கள் கூறுவது உண்மை என்றால் கீழ்மட்டம் வரை பணம் எப்படி கொடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. இதை தடுக்க வேண்டிய ஆணையம் அமைதியாக இருக்கிறது. இதுதான் தற்போது சிக்கலாக இருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT