Skip to main content

“எனது மனைவியையும் மோசமாகப் பேசினார்கள்... பாய்சன் குடிச்சிட்டேன் மச்சான்...” போலீஸ் டார்ச்சரால் டாக்டர் தற்கொலை

Published on 18/11/2020 | Edited on 18/11/2020
hhhh

 

குமரி மாவட்டம் பறக்கை இலந்தைவிளையைச் சேர்ந்த தி.மு.க. மருத்துவரணி மா.து. அமைப்பாளர் சிவராம பெருமாளின் தற்கொலை கன்னியாகுமரியையும் அம்மாவட்ட தி.மு.க.வினரையும் ஒருசேர அதிரவைத்துள்ளது.

 

சிவராமபெருமாள் விஷம் குடிப்பதற்கு சற்றுமுன் தன்னுடைய மைத்துனரிடம் பேசிய ஒரு நிமிட ஆடியோவில், ""நான் சாகப்போறேன் இனி யாரு நெனச்சாலும் என்னைக் காப்பாத்த முடியாது. டி.எஸ்.பி. டார்ச்சரால் நான் சாகப்போறேன். நான் பாய்சன் குடிச்சிட்டேன் மச்சான்''’என கூறியிருக்கிறார். கடிதத்தில்... ""கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் “என்னை தினமும் டார்ச்சருக்கு மேல் டார்ச்சர் செய்தார். "நீ ஏன் இன்னும் சாகவில்லை நீயாகச் சாகவில்லை என்றால் நானே உன்னை சாகடித்துவிடுவேன்' என மிரட்டினார். டி.எஸ்.பி.யோடு சேர்ந்து விஜய் ஆனந்தும் என்னையும் எனது மனைவியையும் மோசமாகப் பேசினார்கள். இவர்களின் மிரட்டலால்தான் சாகிறேன்''’என எழுதியிருந்தார்.

 

எதற்காக டி.எஸ்.பி. பாஸ்கரன் சிவராமபெருமாளை மிரட்டவேண்டும்? மனைவி சீதாவிடம் பேசினோம்... ""ஜூலை 12-ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு நான் கோவிட் டூட்டி முடிச்சிட்டு கணவரோடு சொத்த விளை வழியாக காரில் வந்துகொண்டிருந்தோம். அப்போது எதிரேவந்த வாகனம் லைட் அடிச்சுக் கொடுத்ததால் பதிலுக்கு கணவரும் லைட் அடிச்சுக் கொடுத்து காரின் வேகத்தைக் குறைத்தார். உடனே அந்த வாகனத்திலிருந்து கீழே இறங்கிய வர், "போலீஸ் அதிகாரி வாகனத்துக்கே லைட் அடிக்கிறியா'னு கெட்டவார்த்தை பேசினார். இதற்கு எனது கணவர் எதுவும் பேசாததால் "நான் அரசு மருத்துவர், கோவிட் டூட்டி முடிஞ்சி போறேன்'னு சொன்னதுக்கு என்னையும் "கவர்மெண்ட் டாக்டர் எப்படிப்பட்டவங்கனு தெரியும்'னு கெட்ட வார்த்தையால் மோசமாகத் திட்டியதோடு, கணவரைப் பார்த்து "உனக்கு வச்சிருக்கேன்'னு மிரட்டும் தொனியில் பேசினார்.

 

hhh


  
இதனால் அடுத்தநாள் என் உயரதிகாரிக்கு தகவலைச் சொல்லிவிட்டு நான் கன்னியாகுமரி டி.எஸ்.பி.யிடம் புகார் கொடுக்கப்போனேன். அங்கு சென்றதும் எங்களை மிரட்டியவர்தான் டி.எஸ்.பி. என்பது தெரியவர... அதிர்ச்சியடைந்தேன். “""போலீஸ் மேலயே கம்ப்ளைண்ட் கொடுக்க வாறியா? வா முதலில் உன் புருஷன் மேல கேஸ் போடனும். உன்னையும் தூக்கி உள்ள வைக்கிறேன்''னு மிரட்டினார். இதனால் நான் திரும்பி வந்துட்டேன்''’என்றார்.

 

இந்த விவகாரத்தில் அடிபடும் விஜய்ஆனந்த், கன்னியாகுமரி டி.எஸ்.பி.யிடம் மட்டுமல்ல மாவட்டத்திலுள்ள முக்கிய உயரதிகாரிகளின் நிழலாகவே இருக்கிறார். இவர் குறித்து ஏற்கனவே நக்கீரன் ஆக.29 செப்.1 இதழில் "விபச்சார புரோக்கருக்கு சல்யூட் அடிக்கும் காக்கிகள்'’என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இந்தநிலையில் விஜய்ஆனந்தும் டி.எஸ்.பி.யும் எதற்காக மருத்துவர் சிவராமபெருமாளை மிரட்டினர் என்பது குறித்து கன்னியாகுமரி போலீஸ் சோர்ஸிடம் பேசினோம். ""விஜய் ஆனந்த் பெரிய புரோக்கர். மசாஜ் சென்டரும் வச்சிருக்கார். கன்னியாகுமரியில் அவனே அறை எடுத்துக் கொடுத்து துட்டுள்ள வி.ஐ.பி.களை வரவழைச்சி அழகி களையும் செட் பண்ணிக் கொடுத்திட்டு பிறகு அதை டி.எஸ்.பி.கிட்ட போட்டும் கொடுத்துடுவான்.

 

டி.எஸ்.பி. இதுக்குனு ஒரு டீம் வச்சிருக்கார். அந்த டீம் சம்பந்தப்பட்டவங்களைப் பார்த்துப் பேசி லட்சங்களில் கறந்து விடுவார்கள். மருத்துவர் சிவராமபெருமாளும் கன்னியாகுமரிக்கு மசாஜுக்குச் சென்றதாகவும்... அங்கு இந்த டீமிடம் மாட்டி 10 லகரம் பேசி கடைசியில் 6 லகரத் தில் முடிஞ்சதாம். அதைக் கொடுக்காமல் சிவராமபெருமாள் இழுத்தடித்ததால்தான் டி.எஸ்.பி. மிரட்டி வந்திருக்கிறார்'' என்றனர்.

 

hhh

 

சிவராமபெருமாளின் மைத்துனர், முனைவர் ஜெய்குமார் கூறும்போது... ’’""டி.எஸ்.பி.யைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சி செய்துவருகிறார்கள். "அந்தக் கடிதத்தை சிவராமபெருமாள் எழுதவில்லை, நீதான் எழுதியிருக்கிறாய். ஒரிஜினலைத் தா' என்று சிவராமபெருமாளின் மனைவியை சுசீந்திரம் காவல்நிலைய இன்ஸ்பெக்டா? மீனா, எஸ்.ஐ. ஆறுமுகம் மிரட்டியிருக்கிறார்கள். டி.எஸ்.பி. மீதும் விஜய்ஆனந்த் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். டி.எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தவேண்டும்''’என்றார்.

 

இதுகுறித்து டி.எஸ்.பி. பாஸ்கரனிடம் நாம் கேட்டபோது, “""எனக்கு சிவராமபெருமாள் எப்படி இருப்பார், அவர் யாரென்றுகூட தெரியாது''’என ஒரே போடாகப் போட்டார்.

 

தி.மு.க. மருத்துவரணியைச் சேர்ந்தவர் சிவராம பெருமாள் என்பதால் மு.க.ஸ்டாலின் வரை இந்த விவகாரம் சென்று, கண்டனக் குரல் வெளிப்பட்டது.

 

 

 

 

Next Story

“இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்” - இ.பி.எஸ். ஆதங்கம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Make ADMK win at least this time EPS Fear

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பசிலியான் நசரேத் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்து இன்று (27.03.2024) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “தேசிய கட்சிகளும் சரி, மாநில கட்சிகளும் சரி, இதுவரை மீனவ சமுதாயத்தினருக்கு இதுபோன்று வாய்ப்பு வழங்கியதில்லை. இந்த முறை அ.தி.மு.க. சார்பில் மீனவ சமுதாயத்தை சேர்ந்த பசிலியான் நசரேத்தை வேட்பாளராக நிறுத்தி உள்ளோம். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரையில் ஒரு முறை பா.ஜ.க. வெற்றி பெறுகிறது. அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெறுகிறது. ஆனால் ஒரு முறை கூட அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறவில்லை. எனவே இந்த முறையாவது அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்யுங்கள்.

தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தைக் கூட தி.மு.க. நிறைவேற்றவில்லை. தேர்தல் காலங்களில் ஆசை வார்த்தைகளை கூறி தி.மு.க. மக்களை ஏமாற்றி வருகிறது. நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கொடுப்பதாக கூறி விவசாயிகளை தி.மு.க. அரசு  ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.4 குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் குறைக்கவில்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற மக்களவையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க நமது அ.தி.மு.க. வேட்பாளர் குரல் கொடுப்பார். விலைவாசி உயர்வுக்கு டீசல் விலை உயர்வே காரணம். பெட்ரோல் விலை உயர்வால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.தான். நீட்டை தடுத்து நிறுத்த போராடுவது அ.தி.மு.க.. அதே சமயம் தி.மு.க. ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி என பல கல்லூரிகளை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்தது. மின்சார கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, குப்பைக்கு கூட வரி விதிப்பு என அனைத்திற்கும் வரி போடும் அரசாக தி.மு.க. உள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். சிறுபான்மையின மக்களுக்கு அரணாக அ.தி.மு.க. அரசு இருக்கிறது. கண் இமையை பாதுகாப்பது போல் பாதுகாக்கும். தி.மு.க.வினரை தன் குடும்பம் என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கட்சித் தலைவராக தொண்டரை நிறுத்துவாரா?. வாக்குகளை பெறவே கட்சியினரை தன் குடும்பம் என்று கூறி தி.மு.க.வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். இந்தியாவிலேயே ஜனநாயகம் உள்ள கட்சி அ.தி.மு.க. எனவே சாதாரண தொண்டனும் அ.தி.மு.க.வில் பொறுப்புக்கு வரலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'அப்பாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்' - விஜய் வசந்த் நம்பிக்கை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'I will win by a bigger margin than my father' - Vijay Vasant Hope

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இன்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பாக கன்னியாகுமரியில் போட்டியிடும் விஜய் வசந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''நான் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட என்னுடைய வேட்புமனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன். மீண்டும் வெற்றிபெற்று என்னுடைய மக்கள் பணியை மீண்டும் தொடருவேன் என்று நம்பிக்கையோடு இந்த பயணத்தை தொடர்கிறேன். தேர்தலைப் பொறுத்தவரை 2019ல் எனது தந்தை அதிகபட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த 2024 தேர்தலில் மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

2024 பாராளுமன்றத் தேர்தலை பொறுத்தவரை கன்னியாகுமரி என்பது இயற்கை வளம் சார்ந்த பகுதி. குமரி மாவட்டத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும். இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்த தொகுதியில் நான் எதுவுமே செய்யவில்லை என்று சொல்பவர்கள் ஏதாவது செய்திருக்கிறார்களா? இந்த தொகுதிக்கு இரண்டு ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு செய்து கொண்டு வந்திருக்கிறேன். மெதுவாக நடந்து கொண்டிருந்த ரயில்வே ரெட்டிப்பு பாதையை வேகப்படுத்தியிருக்கிறோம். இப்படி பல விஷயங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் காரணத்திற்காகவும், தேர்தல் நேரம் என்பதாலும் இப்படி குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்'' என்றார்.