Skip to main content

பயணி தவறவிட்ட செல்ஃபோனையும் பணத்தையும் மீட்க 80 கி.மீ சென்ற கண்டெக்டர்... கண்ணீரோடு நன்றி தெரிவித்த அபலைப் பெண்!

Published on 16/10/2020 | Edited on 18/10/2020

 

cuddalore women missed phone and rupees in bus conductor found and handover


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகில் உள்ளது நிதிநத்தம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மறைந்த சுந்தரவடிவேல் என்பவரது மனைவி சந்திரா. இவரது கணவர் சுந்தரவடிவேல் சிங்கப்பூரிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குச் செல்வதற்காக விமானத்தில் சென்னை வந்து இறங்கினார். அப்படி வந்தவரை அரசுத் தரப்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ஓட்டலில் தனிமைப்படுத்துதல் என்ற பெயரில் தங்க வைத்தனர். தங்கியிருந்த சிலநாட்களில், அவர் மர்மமான முறையில் ஓட்டல் அறையில் இறந்துகிடந்தார். இறந்துபோன தனது கணவரின் இழப்புக்கு நீதி கேட்டுத் தனது கைக்குழந்தையுடன் சுந்தர வடிவேல் மனைவி சந்திரா போராடி வருகிறார்.

 

இது சம்பந்தமான பிரேதப் பரிசோதனை அறிக்கை, காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் நகல், இறப்புச் சான்றிதழ், இப்படிப் பல்வேறு சான்றிதழ்கள் பெறுவது சம்பந்தமாகச் சென்னைக்கும் ஊருக்கும் சந்திரா குழந்தையோடு அவ்வப்போது சென்று வருகிறார். சமீபத்தில், அப்படிச் சென்னை சென்றுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல கடந்த 5ஆம் தேதி இரவு 9 மணியளவில் திட்டக்குடி செல்லும் அரசு பஸ்சில் (TN.32- 4411) ஏறியுள்ளார். குழந்தையுடன் துணிமணிகள் வைக்கப்பட்ட பேக் மற்றும் செல்ஃபோன் இவைகளுடன் வந்து கொண்டிருந்தார். 

 

பஸ் ஊரை நெருங்கும்போது, இறங்குவதற்குத் தயாராக தன்னுடன் எடுத்துவந்த பேக் மற்றும் பொருட்களைச் சரி பார்த்துள்ளார். அப்போது, அவரது பேக்கில் இருந்த செல்ஃபோனும் பணம் 2,300 ரூபாயும் காணவில்லை. இதனால் பதறிப்போய் கதறி அழுதுள்ளார் சந்திரா. அதைக்கண்ட பஸ் கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகான், என்ன நடந்தது என்று கேட்டபோது, தன்னுடைய செல்ஃபோனையும் பணத்தையும் யாரோ எடுத்துச் சென்றுவிட்டார்கள் என்று கூறியுள்ளார். அப்போது சந்திரா அமர்ந்திருந்த சீட்டுக்குப் பின்புறம் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன் மீது தான் சந்தேகமாக உள்ளது. அவன் சென்னையில் பஸ் ஏறி அரசூர் எனது சொந்த ஊர் என்று கூறி அரசூர் வரை டிக்கெட் எடுத்ததாகவும். ஆனால் அந்த இளைஞன் மேல்மருவத்தூரிலேயே இறங்கி கொண்டதாகவும் ஏன் இங்கேயே இறங்கிறாய் என்று அவனிடம் கேட்டபோது, உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மறுநாள் ஊருக்கு வருவதாகக் கூறினான். 

 

cuddalore women missed phone and rupees in bus conductor found and handover lady
                          கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகான்


அந்த இளைஞன் மீதுதான் சந்தேகமாக உள்ளது. அவனைத் தேடிக் கண்டு பிடிப்பது மிகுந்த சிரமம் என்று கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகான் கூறியுள்ளார். அப்போது, தனது கணவர் சிங்கப்பூரில் இருந்து வந்து ஹயாத் ஓட்டலில் மர்மமான முறையில் இறந்துபோன சம்பவத்தைக் கூறி அழுத சந்திரா, அந்த செல்ஃபோனில் என் கணவர் உயிரோடு இருந்தபோது பேசிய வார்த்தைகளை வீடியோ காட்சிகளாய் பதிவு செய்து அதில் வைத்துள்ளதாகவும், மேலும் அவரது புகைப்படங்களும் அதில் உள்ளன, அவரது ஞாபகார்த்தமாக அதைப் பத்திரமாக பாதுகாத்து வந்தேன். அப்படிப்பட்ட செல்ஃபோனை பறிகொடுத்தது மிகுந்த வேதனையாக உள்ளது. பணம் 2,500 ரூபாய் போனாலும் பரவாயில்லை எனக்கு செல்ஃபோன் கிடைத்தால் போதும் என்று கண்ணீரோடு கூறியுள்ளார்.

 

Ad

 

அப்போது கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகான், அந்தப் பெண் நீங்கள் தானா உங்கள் கணவர் இறந்த பிறகு அப்போது நீங்கள் பேசி வெளியிட்ட வீடியோ காட்சிகளையும் உங்கள் கணவர் இறப்பு சம்பந்தமான உங்கள் பேட்டி படங்களையும் பத்திரிகை மீடியாக்களில் பார்த்துள்ளேன். அந்தப் பெண்ணா நீங்கள் என்று பரிதாபத்தோடு கேட்டுள்ளார். பிறகு பஸ் திட்டக்குடி வந்து சேர்ந்தது. பஸ்ஸில் இருந்து இறங்கிய சந்திரா, ஆட்டோ பிடித்து தனது ஊரான நத்தம் சென்றுவிட்டார். அப்படியே ஊருக்குச் சென்றதும் அங்கிருந்து வேறொரு செல்ஃபோனில் இருந்து, திருடுபோன செல்ஃபோனுக்கு அவ்வப்போது தொடர்பு கொண்டபடியே இருந்துள்ளார். சில நேரம் செல்ஃபோன் அடித்தும் யாரும் எடுத்து பதில் கூறவில்லை. 


மறுநாள் காலை 8 மணியளவில் மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த எண்ணிலிருந்து ஆண்குரல் பேசியுள்ளது. அப்போது சந்திரா அழுதபடியே எனது செல்ஃபோனை மட்டுமாவது என்னிடம் கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அதில் பேசிய அந்த ஆண் குரல் அம்மா கவலை படவேண்டாம், நான் தான் பஸ் கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகான் பேசுகிறேன். உங்கள் செல்ஃபோனை கொண்டு வந்து விட்டேன். கருவேப்பிலங்குறிச்சி வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். 

 

அதன்படி கருவேப்பிலங்குறிச்சி சென்ற சந்திராவிடம் செல்ஃபோனை கொடுத்ததோடு திருடுபோன 2,500 ரூபாய் பணத்தில் 1,300 ரூபாய் பணத்தையும் கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகான் திருப்பிக் கொடுத்துள்ளார். இது எப்படி கிடைத்தது என்று சந்திரா, சையத் தஸ்தகீர் ஷாஜகானிடம் கேட்டபோது, நீ பணத்தையும் செல்ஃபோனையும் பறிகொடுத்துவிட்டு பஸ்ஸில் அழுதபடியே உனது கணவரை இழந்து தவிக்கும் நிலையைக் கூறியது, என் மனதை வருந்தச் செய்தது. நான் பணி முடிந்து பஸ்சை கொண்டுபோய் திட்டக்குடி டிப்போவில் விட்டுவிட்டு அப்படியே தொழுதூர் சென்று அங்கிருந்து ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு, பஸ்ஸில் இருந்து மேல்மருவத்தூரில் இறங்கிய அந்த இளைஞன் என்னிடம் அரசூர் வரை டிக்கெட் எடுத்தான், அதனைக் கருத்தில் கொண்டு எப்படியும் அவனைக் கண்டுபிடித்துவிடுவேன் எனும் நம்பிக்கையில் அரசூர் சென்றேன். 


அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் அந்த இளைஞனின் அடையாளத்தைக் கூறி விசாரித்தேன். முதலில் தயங்கியவர்கள் பிறகு அந்த இளைஞன் வேறொரு பஸ்ஸில் வந்து இறங்கி ஆட்டோவில் தனது ஊரான ஆலப்பாக்கம் சென்றதாகக் கூறியதோடு, அந்த ஆட்டோ டிரைவர் என்னை அந்த ஊருக்கே அழைத்துச் சென்று அந்த இளைஞன் வீட்டை அடையாளம் காட்டினார். சுமார் 80 கி.மீ தூரம் பயணித்து அவரது வீட்டை அடைந்தோம் என்றார்.

 

cuddalore women missed phone and rupees in bus conductor found and handover lady
                                                       மாதிரி படம்

 

அந்த இளைஞனை வீட்டில் இருந்து வரவழைத்து செல்ஃபோனையும் பணத்தையும் கொடுத்துவிடுமாறு கேட்டேன். முதலில் எடுக்கவில்லை என்று மறுத்தவன், நான் போலீசில் புகார் கொடுக்கப்போகிறேன் என்று மிரட்டலாகக் கூறியதும் செல்ஃபோனையும் 1,300 ரூபாய் பணத்தையும் கொடுத்தார். மீதி ஆயிரம் ரூபாய் பணத்தைச் செலவழித்து விட்டதாகக் கூறினான். இதோ உனது செல்ஃபோனும் மீதி பணமும் என்று என்னிடம் கொடுத்தார். 

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகான், “நமது பேருந்தில் வரும் நபர்களுக்கு நாம்தானே சார் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதானே அவர்களுக்கும் ‘நாம் பாதுகாப்பான நடத்துனர், ஓட்டுனர் உள்ள பேருந்துவில் பயணிக்கிறோம்’ எனும் நிம்மதி கிடைக்கும். இதெல்லாம்விட அந்தப் பெண்ணின் உடைமைகளைக் கண்டுபிடித்துக் கொடுத்தது எனக்கு நிம்மதியாகவும் மன நிறைவாகவும் உள்ளது சார்” என்று சகஜமாக நகர்ந்து சென்றார்.

 

Nakkheeran


இதுகுறித்து அப்பெண் நம்மிடம் பேசுகையில், “முன்பின் தெரியாத அந்த கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகானின் சகோதர மனப்பான்மையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதேன். எனது உற்றார் உறவினர்கள் கூட என் கணவர் இறப்புக்கு பிறகு உதவி செய்வதற்குப் பதில் உபத்திரவம் செய்து வருகிறார்கள். ஆனால், நல்ல குணம் படைத்தவர்கள் மற்றும் 'நக்கீரன்' உட்பட பத்திரிகை ஊடகத்தினர் எனக்குப் பெரும் உருதுணையாக இருந்து உதவி செய்து வருகிறார்கள். அதேபோல் எனது நிலையைக் கண்டு மனம் வருந்திய அந்த சகோதரர் கண்டெக்டர் சையத் தஸ்தகீர் ஷாஜகான், தனது செலவில் வாடகைக்கார் எடுத்துச் சென்று எனது பணத்தையும் செல்ஃபோனையும் மீட்டுக் கொண்டுவந்து கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை. கண்ணீருடன் தத்தளிக்கிறேன். அவர் நல்ல மனதுக்கு எந்தக் குறையும் இன்றி நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்துடனும் வாழவேண்டும் என்று கண்ணீர் மல்க இறைவனை வேண்டுகிறேன்.” என்கிறார். கணவர் இழப்புக்கு நீதி கேட்டுப் போராடிவரும் அபலை பெண் சந்திரா.

 

 

 

 

 

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. 

Next Story

பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்;நடந்தது என்ன? - காவல்துறை விளக்கம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
womanincident What happened Police explanation

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ள பக்ரிமாணியம் கிராமத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக ஒரு பெண் வெளியில் கூறியதாகவும், இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த சிலர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த பெண்ணை பலமாக தாக்கியதாகவும் கூறப்பட்டது. இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாகவும் கூறப்பட்டது. இது குறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. ஒருபுறம் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்) மற்றொரு பக்கம் ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் (அனைவரும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்). ஜெயசங்கரின் மகள் ஜெயப்பிரியாவை கிண்டல் செய்ததற்காகவும். ஜெயக்குமாரை தாக்கியதாக அவர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுமாறு கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காகவும் தன்னெழுச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது. கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு (PHC)  அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர், 1. கலைமணி 2. தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5. அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். 

woman incident What happened Police explanation

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், மேற்கண்ட சம்பவம் இரு தரப்பினருக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது என்பதும், சமூகவலைத்தளங்களில் பரவிய ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளது முற்றிலும் தவறான கூற்றாகும். மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி முற்றிலும் பொய்யானது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.