ADVERTISEMENT

கரோனாவைக் கட்டுப்படுத்தும் கியூபா மாடல்! கரோனாவுக்கு கியூபா தரும் மருந்து?

08:59 PM Mar 26, 2020 | kalaimohan

”நமக்கதெற்கு ஆயுதங்கள்? நம்மிடம்தான் நல்ல மருத்துவர்கள் இருக்கிறார்களே” என்றார் கியூபாவின் முன்னாள் அதிபர் தோழர் பிடல் காஸ்ட்ரோ. கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் உலகின் வல்லரசு நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் வேளையில், எல்லா நாடுகளுக்கும் முன்னுதாரணமாக கியூபா என்ற குட்டிநாடு இருப்பதற்கும், பிடல் காஸ்ட்ரோ சொன்னதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. கரோனா வைரஸின் தாக்கத்தை அந்த நாடு எதிர்கொள்ளும் விதமும், அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் அதற்கான உதாரணங்கள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கியூபாவில் கரொனா வைரஸால் தாக்கப்பட்ட முதல் நபர் கண்டுபிடிக்கப்பட்டது மார்ச் 11-ல். இத்தாலியில் இருந்து கியூபா தலைநகரமான ஹவானாவிற்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் மூன்றுபேருக்கு கரோனா அறிகுறிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் பெட்ரோ கோரி மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டில் அனுமதிக்கப்பட்டு, 24 மணிநேரத்தில் கரோனா தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நொடியே, இத்தாலி சுற்றுலாப்பயணிகள் தங்கியிருந்த விடுதியில் பணிபுரிந்தவர்கள், அவர்கள் பயணத்திற்கு உதவியவர்கள் என ஏழுபேரைக் கண்டுபிடித்து தனிமைப்படுத்தினார்கள் சுகாதார அதிகாரிகள்.

கரோனா தொற்று உலக அச்சுறுத்தலாக மாறியிருந்ததால், மார்ச் 2ந்தேதியே கரோனா கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் கியூபாவில் துரிதப்படுத்தப்பட்டன. சர்வதேச சுகாதார அளவீடுகளின்படி நாட்டின் எல்லா எல்லைப் பகுதிகளும், கடுமையான கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டன. மார்ச் 6ந்தேதி, ’தொற்றுநோயியல் கண்காணிப்பு’ என்ற திட்டத்தை வடிவமைத்து, ஏற்கனவே கரோனா தொற்று உள்ள நாடுகளில் இருந்து வருகிறவர்களைக் கண்காணிக்க, சோதனையிட முடிவுகள் எடுக்கப்பட்டன.


இந்தத் திட்டத்தின் மூலம் கரோனா அறிகுறியுடன் வருகிறவர்களை 14 நாட்கள் ஐசோலேஷன் செண்டரில் வைத்து முழுமையாகக் கண்காணிப்பார்கள். கியூபாவின் ராணுவ மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக மாற்றப்பட்டு விட்டன. நாடு முழுவதும் மூவாயிரத்து நூறு படுக்கைகளும், அதில் அதிதீவிர சிகிச்சைக்கான நூறு படுக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஐசோலேஷன் செண்டர்களை அமைத்து, அதில் நோயாளிகளை அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த நடவடிக்கையும் பொதுமக்கள் கவனத்திற்கு தெரியப்படுத்தப்படும். ஒரு தீவிர வைரஸ் தாக்குதலுக்கு எதிராக நாடு மேற்கொண்டிருக்கும் செயல்பாடுகளை மக்கள் அறியவே இந்த ஏற்பாடு. அரசின் கட்டுப்பாடுகளை ஏற்று மக்களும் நடப்பதால், கியூபாவில் இதுவரை 57 பேர் மட்டுமே கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை தீவிரமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கரோனா தாக்கத்தால் நல்ல முன்னேற்றமடைந்த இத்தாலி, ஸ்பெய்ன் போன்ற நாடுகளே கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்திருக்கின்றன. அமெரிக்காவின் கடுமையான அடக்குமுறைகளைச் சந்தித்திருக்கும் கியூபா நாட்டு அரசால் என்ன செய்துவிட முடியும். இயற்கை, தொழில்நுட்ப மற்றும் சுகாதாரத்தில் ஏற்படும் பேரிடர்களால் உலகின் பல நாடுகளும் இதுபோன்ற சிக்கலைச் சந்திக்கின்றன. இந்தமாதிரி சூழல்களில், முதல் மாதம் நூறு சதவீதமும், அடுத்தடுத்த மாதங்களுக்கு 60 சதவீதமும் ஊதியத்தை அரசு மக்களுக்கு வழங்குகிறது.

கரோனா வைரஸால் பாதிப்படைந்த சீனர்களுக்கு, கியூபாவின் இண்டெர்ஃபெரான் ஆல்ஃபா 2பி (Interferón Alpha 2B) என்ற மருந்தத்தைத்தான் பயன்படுத்தி குணப்படுத்தி இருக்கிறார்கள். கியூபாவின் மரபணு பொறியியல் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மருந்தைக் கொண்டு, ஹெச்.ஐ.வி. வைரல் தொற்று, பாப்பிலோமா வைரஸ், ஹெபடைட்டிஸ் பி, சி, வைரஸ்கள் மற்றும் பலதரப்பட்ட கேன்சர்களைக் குணப்படுத்தலாம். சீனாவில் நல்ல ரிசல்டைக் கொடுத்த இந்த மருந்தை, ஸ்பெயினில் முதல்முதலாக கரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு பயன்படுத்தினார்கள். இது உதவி புரிந்திருந்தாலும், அடுத்தடுத்த சோதனைகளுக்காக காத்திருக்கின்றன உலகநாடுகள். இதற்காகவும், தங்கள் மருத்துவர்களையும், உயிரி தொழில்நுட்ப வல்லுநர்களையும் தொடர்ந்து அனுப்பி வைக்கிறது கியூப அரசு. இத்தாலி அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க, மருத்துவ உதவிகளைச் செய்ய மருத்துவர்கள் குழுவை அனுப்பி வைத்தது அதற்குச் சான்று.


உடலளவில் விலகி இருந்தாலும், உலக அளவில் ஒற்றைச் சமூகமாக ஒருங்கிணைந்து கரோனாவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதை உணர்ந்திருக்கும் கியூப அரசு, இங்கிலாந்தைச் சேர்ந்த கப்பலொன்றை தங்களது நாட்டிற்குள் அனுமதித்திருக்கிறது. அறுநூறுக்கும் மேற்பட்ட பயணிகளைக் கொண்ட இந்தக் கப்பலில், ஐந்து பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மற்ற எந்த நாடுகளும் அச்சத்தால் அவற்றை அனுமதிக்கவில்லை. மனிதாபிமான அடிப்படையிலும், இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டதாலும், அந்தக் கப்பலை அனுமதித்த கியூப அரசு, அதில் இருந்தவர்களுக்கு சிகிச்சையளித்து, அவர்கள் நாடு திரும்புவதற்கான வேலைகளிலும் இறங்கி இருக்கிறது.

இயற்கைப் பேரிடரால் கியூப மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த தருணத்தில், உலக நாடுகளிடம் மன்றாடினார் பிடல் காஸ்ட்ரோ. மருத்துவர்களும், மருந்துகளுமே அவர் கேட்டது. ஆனால், அமெரிக்கா விதித்திருந்த தடைக்கு அஞ்சி எந்த நாடும் உதவ முன்வரவில்லை. அதன்பிறகே, கியூபா முழுவதும் மருத்துவக் கல்லூரிகளை அதிகப்படியாக நிறுவி, மருத்துவக் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாகக் கொடுக்கவேண்டும் என்ற யோசனை பிறந்தது பிடலுக்கு. உலகின் பல நாடுகளைச் சேர்ந்த, குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களும் கியூபாவிற்கு மருத்துவச் சுற்றுலா செல்கிறார்கள்.

கரோனாவை எதிர்த்துக் கட்டுக்குள் கொண்டு வருவதிலும், இந்த கியூபா மாடல் உலகுக்கு முன்மாதிரியாகவே திகழ்கிறது!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT