Skip to main content

பா.ரஞ்சித் மீதான விமர்சனங்கள்! - படைப்பு ரீதியா பகையுணர்வா?

நடிகர் ரஜினிகாந்த் - இயக்குனர் ரஞ்சித் கூட்டணியில் வெளிவர இருக்கும் இரண்டாவது படம் காலா. மும்பை வாழ் தமிழ் மக்களின்  வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படும் இந்தப் படம் கபாலி ஏற்படுத்திய தாக்கத்தினாலும் நானா படேகர், ஹுமா குரேஷி போன்ற பிரபல ஹிந்தி நடிகர்கள் இடம் பெற்றிருப்பதாலும் இந்திய அளவில் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

 

kaala ranjithமேலும் தற்போது ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக செயல்படும் மோடி தலைமையிலான இந்திய அரசு ஆட்சியில் இருக்கும் சூழலில், ரஞ்சித்தின் அடுத்த படத்திற்கு அவர் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். தன் அரசியல் நிலைப்பாட்டினாலும், சாதி முறையினையும்  அடித்தட்டு மக்கள் மீது அதன் விளைவுகளையும் பற்றி  அடிக்கடி கேள்வி கேட்பதாலும் கபாலி படம் வெளியான நேரத்திலிருந்தே இயக்குனர் ரஞ்சித் படைப்பைத் தாண்டி சாதி ரீதியாகவும் பலவகையான தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் ரஞ்சித்தின் அடையாள அரசியலும், ஒடுக்கப்பட்டவர்களுக்கான சிந்தனையும் வலுவாக இடம் பெற்றிருக்கும் காலா திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தில் பல முரண்பாடான விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியாகியுள்ளன. ’காலா படத்தின் பாடல்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‘ என அதிமுக  அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

குத்து, ராப், ஹிப்-ஹாப், மெலடி வகைகள் என 9 பாடல்கள் உள்ளடங்கியுள்ளது காலாவின் ஆல்பம். மும்பை தாராவி பகுதியை சார்ந்த 'டோப்அடெலிக்ஸ்' (dopeadelicz) என்னும் குழுவினரும் இயக்குனர் ரஞ்சித்தினால் சில மாதங்கள் முன்பு ஒன்று சேர்க்கப்பட்ட  'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' (The Casteless Collective) இசைக் குழுவும் இப்படத்தில் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. சிலர் பாடல்களின்  உயிரோட்டமான ஒலி அமைப்பையும், வரிகளையும்  பாராட்ட, பிறர் பாடல்கள் எதிர்பார்த்த அளவில் பாதியளவு கூட  இல்லை என ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

 

ranjith directs rajnikanth


 

 


மேலும் சிலரோ, 'பாடல்களை விமர்சனம் செய்தால் சாதி வெறியன் என முத்திரை குத்தி விடுவார்கள்' என பகடி செய்து வருகின்றனர். இது, கடந்த சில நாட்களாகவே, அதாவது காலா படத்தின் டீஸர் வெளியான சமயத்தில் இருந்தே வைக்கப்படும் கேலி. எல்லா நகைச்சுவையும் ஒருவித உயர்வு  மனப்பான்மையின் வெளிப்பாடு  என்பது கிரேக்க தத்துவவாதி அரிஸ்டோட்டலின் கூற்று . இது எல்லா இடங்களில் பொருந்தாவிட்டாலும் இங்கே கனகச்சிதமாய் பொருந்தும். ரஞ்சித்தின் கலை முயற்சிகளை அவரவர் மதிப்பீட்டினை அளவுகோலாக வைத்து கேலியோ விமர்சனமோ செய்வது வேறு, அவர் கலைப் படைப்பின் மீதுள்ள தங்கள் மதிப்பீட்டினை காரணம் காட்டி அவரின் சமூக நிலைப்பாட்டையும் அவர் எழுப்பும் எதிர்க்குரலையும் கேலி செய்வது வேறு . 

  pa.ranjith on stageஇங்கே வெளிப்படும் அரிஸ்டாட்டில் கூறும் உயர்வு மனப்பான்மை சாதி தருவது. இந்த நகைச்சுவை தற்கால தமிழ் சூழலில் ரஞ்சித்தின்  முக்கியத்துவத்தையும் அவர் பேசும் அரசியலையும் சிறுமைப்படுத்தும் முயற்சி. தெரிந்தோ தெரியாமலோ தன் கலையையும் அரசியலையும் பிரித்துப்பார்க்க முடியாத ஒரு கட்டத்திற்கு இப்பொழுது ரஞ்சித் வந்துவிட்டார். அவர் சினிமா வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சறுக்கலும் அவர் அரசியல் பேச நினைக்கும் குரலினை நசுக்க பயன்படுத்தப்படும். 

 

 


இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாரை இரண்டாவது முறையாக இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்திற்கு அவரது படைப்புத்திறன் மூலமாக  கிடைத்துள்ளது. தனக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, முடிந்த அளவு ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலை பேசிவரும் அவர், இந்த விமர்சனங்களையும் தன் படங்களின் வெற்றி மூலம் கடந்து, தான் பேச நினைப்பதை தன் கலையின் வாயிலாக பேசி, தான் குரல் கொடுக்க நினைக்கும் மக்களின் குரலாக ஒலிப்பார் என எதிர்பார்ப்போம்.  

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்