ADVERTISEMENT

“வெந்ததைத் தின்பது, வாயில் வந்ததைப் பேசுவது..” - ஆளுநருக்கு கனகராஜ் கண்டனம்

10:59 AM Jan 30, 2024 | tarivazhagan

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கடந்த 28ம் தேதி நாகப்பட்டினம் சென்றார். தொடர்ந்து, கீழ்வேளூர் ஒன்றியம் கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவு இல்லத்துக்குச் சென்றார். அங்கு, கீழ்வெண்மணியில் 1968-ல் நடந்த படுகொலையின்போது, துப்பாக்கி குண்டுபட்டு காயமடைந்து, உயிர் பிழைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தியாகி ஜி.பழனிவேலை சந்தித்தார்.

ADVERTISEMENT

முன்னதாக தியாகி ஜி.பழனிவேல் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “ஆளுநர் என்னைச் சந்திப்பதில் துளியும் விருப்பமில்லை” என்று தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், கீழ்வெண்மணி குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் மாளிகை எக்ஸ் சமூகவலைதளப்பக்கத்தில், “நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதி வாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட" என்று தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக சி.பி.எம். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் நமக்கு அளித்த பேட்டியில், “வெந்ததைத் தின்பது, வாயில் வந்ததைப் பேசுவது என்பதை ஆர்.என்.ரவி தன்னுடைய வழக்கமாக வைத்திருக்கிறார். அவருக்கு தியாகத்தை பற்றியோ உயிர் தியாகங்கள் பற்றியோ எந்த அக்கறையும் கிடையாது. உயிர்களை பறிப்பதை ஒரு தத்துவமாக வைத்திருப்போரின் வழியில் வந்தவருக்கு இது புரியாது.

சி.பி.எம். கட்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் அலுவலகங்கள் உள்ளன. ஆனால், சி.பி.எம். கட்சியின் தலைவர்கள் பலரும், நல்ல வீடுகள் இல்லாமல், வாடகை வீட்டிலோ அல்லது மிகவும் எளிமையான வீட்டில் வசிப்பார்கள். இப்படி எளிமையான வீடுகளில் இருப்பவர்கள் எல்லாம் இணைந்து மாடிவீடு (கட்சி அலுவலகம்) கட்டியிருக்கிறீர்களா என்று கேட்டால், அது எவ்வளவு நகைப்புக்குரியது. தேசத்தின் நலனுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறவர்களைப் பற்றிய மிகவும் அவதூறான பதிவு அது.

வெண்மணியில் நாங்கள் கட்டியிருக்கும் நினைவு இல்லம் என்பது அவர்களின் வரலாற்றை பேசும். தொழிலாளர்களுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் அது வரலாற்றை கற்றுக்கொடுக்கும். அதனைக் கட்டடம் எனப் பார்க்கும் மனிதருக்கும், தங்களின் வாழ்வு சிறப்பதற்காக வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர்களின் நினைவிடம் எனப் பார்ப்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

இந்த நினைவிடத்திற்கு பணம் கொடுத்தவர்கள் எல்லாம் எளிய மக்கள். அவர்கள், தங்கள் உணவுகளில் ஒரு பங்கை குறைத்துக் கொண்டும், தங்கள் பிள்ளைகளின் தேவைகளில் ஒரு பங்கை குறைத்துக் கொண்டும் ரூ. 5 முதல் பல ஆயிரம் ரூபாய் கொடுத்ததன் மூலம் இந்த நினைவிடம் எழுந்து நிற்கிறது.

ஆர்.என். ரவி போன்றவர்களுக்கு சாவர்க்கர் தான் வீரர். ஆனால், எங்களைப் போன்றவர்களுக்கு வெண்மணி தியாகிகள் தான் வீரர்கள், அவர்கள் தான் எங்களுக்கு வழிகாட்டி.

உழுபவர்களுக்கு நிலம் சொந்தம் என கட்சி முடிவு எடுத்தபோது, தன்னிடம் இருந்த நிலத்தை எல்லாம் கொடுத்தவர் நம்பூதிரிபாட். அவர் கட்சியின் பராமரிப்பில் தான் முதலமைச்சராக இருந்தார். இறக்கும் வரையிலும் அப்படித்தான் இருந்தார். இப்படித்தான் தோழர் சுந்தரய்யா இருந்தார். இதையெல்லாம் புரிந்துகொள்வதற்கான குறைந்தபட்ச அறிவும், தியாகம் குறித்தான புரிதலும் அவர்களுக்கு இருக்காது” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT