
சமீபத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி ஒரு பேட்டியில் திமுகவின் கொள்கைகள் குறித்து விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தன்னுடைய கருத்துக்களை சிபிஐ லெனின் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
ஆளுநர் திருந்தவேமாட்டார் என்பதை உணர்த்தும் பேச்சுதான் அது. திராவிடம் என்பது பல நூற்றாண்டுகளாக இங்கு இருந்து வருகிற ஒரு கோட்பாடு. ஆரியத்துக்கு எதிரான கோட்பாடு அது. ஒரு காலத்தில் இந்தியா முழுக்க பேசப்பட்ட மொழி தமிழ். தமிழும் திராவிடமும் வெவ்வேறு அல்ல. சமத்துவம் என்பதுதான் திராவிடத்தின் கொள்கை. மார்க்சியம் தான் திராவிடத்தின் இறுதி இலக்கு. 13 பேரின் உயிரைப் பலி வாங்கிய ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுபவர் இந்த ஆளுநர். கவர்னர் என்றால் வானத்தில் இருந்து குதித்தவரா?
ஆளுநர் பதவியை விட்டுவிட்டு வாருங்கள். வெளியே வந்து பேசுங்கள். அந்தப் போருக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அழிந்துபோன ஒரு தத்துவம் தான் சனாதனம். அதை இன்றும் உயர்த்திப் பேசி வருகிறார் ஆளுநர். மக்களை ஆதிகாலத்துக்கு செல்லச் சொல்கிறார். உங்கள் வீட்டு விசேஷத்திற்கான செலவுகளை அரசின் கணக்கில் எழுதுவீர்களா? தமிழ்நாடு அதை அனுமதிக்காது. ஆட்சியைக் கலைத்து விடுவோம் என்று பாஜக பேசுவதை எல்லாம் இங்கு மக்கள் மதிக்கவே மாட்டார்கள். புத்த மதத்தை அழிப்பதற்காக உருவானது தான் பகவத்கீதை போன்ற நூல்கள். ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும், பெண்களுக்கு எதிராக இருக்கும் பகவத் கீதை புனித நூல் அல்ல.
உத்திரப் பிரதேசத்தில் ஒரு மாவட்டத்தில் மட்டும் 216 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். சட்டம் ஒழுங்கு அங்கே சந்தி சிரிக்கிறது. இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்கின்றனர். என்கவுண்டர் ஆட்சியாக அது இருக்கிறது. மக்களுக்கான ஆட்சியா அது? கர்நாடகாவில் பாஜகவின் ஊழல் தலைவிரித்தாடுகிறது. தமிழ்நாட்டில் ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவனை பாஜகவில் சேர்க்கிறார்கள். இதெல்லாம் ஆளுநரின் கண்ணுக்குத் தெரியவில்லையா? கலவரத்துக்கான அரசியலைத்தான் பாஜக நடத்துகிறது. பாஜகவுக்கும் ஆளுநருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.