Advertisment

OPS - EPS க்கு உற்சாகம் கொடுத்த உயர்நீதிமன்ற உத்தரவு! என்ன செய்ய போகிறார் சசிகலா?

court order on a case about admk internal law change

அதிமுகவுக்கான உரிமைப்போரில் அண்மையில் வெளியாகியிருக்கும் உயர்நீதிமன்ற உத்தரவு சசிகலாவை அப்செட்டாக்கி, ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவருக்கும் உற்சாகம் தந்திருப்பதாக தெரிகிறது.

Advertisment

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக கட்சியின் பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டார் சசிகலா. இது தற்காலிக ஏற்பாடு எனச் சொல்லப்பட்டாலும், அ.தி.மு.க.வின் சட்ட விதிகளின்படி, சசிகலாவின் நியமனம் செல்லாது என்பதைச் சுட்டிக்காட்டி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனு செய்திருந்தார் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி.யான கே.சி. பழனிச்சாமி. ஆனாலும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதலமைச்சராவதற்காக அப்போதைய கவர்னர் வித்யசாகர்ராவை சந்தித்து உரிமையும் கோரினார் சசி. அதனை ஏற்பதில் வித்யாசாகர் காலதாமதம் செய்ய, சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு அவரை 4 ஆண்டுகாலம் சிறையில் தள்ளியது. அப்போது ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்திக்கொண்டிருந்த காரணத்தால், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்றார் சசிகலா.

Advertisment

அதன்பிறகான சில அரசியல் மாற்றங்களுக்கு பிறகு, 2017, செப்டம்பர் 12-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில், பொதுச்செயலாளர் என்ற பதவி ஒழிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற 2 புதிய பதவிகளை உருவாக்கி, பொதுச்செயலாளருக்குரிய அனைத்து அதிகாரங்களும் இந்த பதவிகளுக்கு மாற்றப்பட்டன. இதற்காக அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பொதுக்குழுவின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.சும், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்.சும் நியமிக்கப்பட்டார்கள். அ.தி.மு.க.விலிருந்து சசிகலாவும், தினகரனும் நீக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார் சசிகலா. கே.சி.பழனிச்சாமியும் சட்டத்திருத்தங்களுக்கு எதிராக மனு செய்தார். இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறுக்கிட்டதால், ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். தலைமைக்கே கட்சியின் பெயரையும், பயன்படுத்தும் உரிமையை கொடுத்தது தலைமைத் தேர்தல் ஆணையம். அதேசமயம், சசிகலாவால் தொடரப்பட்ட வழக்குகள் இப்போதுவரை நிலுவையில்தான் உள்ளன.

இந்தநிலையில்தான், திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம் குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், "அ.தி. மு.க.வின் சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளர் பதவியையும் அதற்குரிய அதிகாரங்களையும் மாற்றவோ, புதிய பதவிகளை உருவாக்கவோ பொதுக் குழுவுக்கு அதிகாரமில்லை. ஆனால், கட்சியின் சட்டவிதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவால் அளிக்கப்பட்டிருந்த கட்சி விதிகளின்படி இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டதா என்பதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை. அதனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரங்கள் அளித்து திருத்தம் செய்யப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது தவறானது. ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வதுடன் 2016, டிசம்பர் 5-ல் (ஜெயலலிதா மறைவின்போது) இருந்த அ.தி.மு.க.வின் சட்டவிதிகளை கட்சியினர் கடைப்பிடிக்க உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீது கடந்த 22-ந் தேதி விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு, "அ.தி.மு.க. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்புவரை அ.தி.மு.க. கட்சிதான் ஆட்சியில் இருந்துள்ளது. 2018-க்கு பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் அந்த கட்சி போட்டியிட்டிருக்கிறது. பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியால் அளிக்கப்படும் ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்பதில் தவறில்லை. இதில் ஆட்சேபனை இருந்தால் சிவில் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம்''‘என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சசிகலாவுக்கு எதிராக அரசியல் செய்துவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த உத்தரவு பெரிய பூஸ்ட் என்கிற எடப்பாடி ஆதரவு சீனியர்கள், "கட்சியின் சட்ட விதிகளை முன் வைத்துதான் இந்த விவகாரத்தை பூதாகரமாக்கி வந்தார் சசிகலா. அவரால் தொடரப்பட்ட வழக்கு எதிர்காலத்தில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ்.சிடமுள்ள அதிகாரத்தை பறித்துவிடுமோ என எங்களுக்குக்கூட சந்தேகம் இருந்தது. ஆனால், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். சார்பில் மதுசூதனன் தாக்கல் செய்த ஆவணங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதில் முரண்பாடுகளோ, தவறுகளோ இல்லையென்று தற்போது சென்னை உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கும் நிலையில், எதிர்காலத்திலும் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு தான் கிடைக்கும்' என்கிறார்கள் அழுத்தமான நம்பிக்கையுடன்.

சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியனிடம் கேட்டபோது, "இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், நிர்வாக ரீதியிலான பணிகளை மட்டும்தான் தேர்தல் ஆணையம் செய்யும். ஒரு கட்சியின் முக்கிய பிரதிநிதியாக இருக்கும் ஒருவர் கொடுக்கும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்வது ஆணையத்தின் பணி. அதைத்தான் அ.தி.மு.க. வழக்கில் செய்திருக்கிறது. உள்கட்சி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை. மனுதாரர் விரும்பினால் சிவில் நீதிமன்றத்தை அணுகலாம் என சொல்லியிருக்கிறது. சிவில் நீதிமன்றத்துக்கு வழக்கு வந்தால் அதில் சரியான பரிகாரம் கிடைக்கலாம். அதனால் எங்களுக்கு இது ஆரோக்கியமான தீர்ப்புதான்''‘என்கிறார் உறுதியாக.

சசிகலாவை பொதுச்செயலாளராக நியமித்ததை எதிர்த்து தேர்தல் ஆணையத்திலும் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ள கே.சி.பழனிச்சாமியிடம் இது குறித்து விவாதித்தபோது, "ஒரு கட்சியின் பிரதிநிதி கொடுத்த ஆவணங்களைப் பதிவு செய்துகொள்கிறது ஆணையம். ஆனால், கொடுக்கப்பட்ட ஆவணங்கள், கட்சியின் விதிகளின்படி தவறானது என ஆதாரப்பூர்வமாக ஆணையத்தில் முறையிட்டாலும் அதனை ஆய்வு செய்கிற வேலை அதற்கு கிடையாது. கட்சியின் சின்னம் யாருக்கு என்பதை மட்டும்தான் ஆணையம் முடிவு பண்ணுகிறது. அதேசமயம், கட்சியின் சட்டவிதிகளுக்கு முரணாக ஆவணங்கள் இருந்தால் சிவில் கோர்ட்டில் முறையிட்டு பரிகாரம் தேடுங்கள் என சொல்கிறது நீதிமன்றம்.

என்னுடைய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. நான் கேட்டது கட்சிக்கு டைரக்ஷன் கொடுங்கள் என்பதுதான். அது சிவில் சூட்டில்தான் வருகிறது. அதாவது, சசிகலா -தினகரனுக்கும், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சிஸ்தானி தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் சில உத்தரவை பிறப்பித்திருக்கிறது. குறிப்பாக, 52 முதல் 55 வரையிலான பத்தியில், பொதுச்செயலாளர் என்றோ, ஒருங்கிணைப்பாளர் என்றோ எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அடிப்படை உறுப்பினர்களால்தான் கட்சியின் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற சட்ட விதியை திருத்தியது தவறு. கட்சியின் தலைமையை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இல்லை. தொண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமையை பறித்தது தவறு என்று டிவிஷன் பெஞ்ச் தனது உத்தரவில் சொல்லியிருக்கிறது.

அந்த வகையில், "இந்த டிவிஷன் பெஞ்ச் சொன்ன தீர்ப்பை அ.தி.மு.க. கட்சி அமல்படுத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுங்கள்' என்று டெல்லி ஹை-கோர்ட்டில் நான் போட்டுள்ள வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. நான் இந்த வழக்கை 2019-ல் தாக்கல் செய்தபோது, டிவிஷன் பெஞ்ச் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். சென்றிருப்பதால் அதன் முடிவு தெரியாமல் நான் போட்ட வழக்கை விசாரிக்கக்கூடாது என சசிகலா தரப்பில் மனு போடப்பட்டது. அதனால் விசாரணை நிலுவையில் இருந்தது. அதேசமயம், "டிவிஷன் பெஞ்ச் கொடுத்துள்ள தீர்ப்பு செல்லும்' என உறுதி செய்தது உச்சநீதிமன்றம். இதனையடுத்து எனது வழக்கின் விசாரணையும் நடந்தது. ஆனால், கொரோனா விவகாரத்தால் பலமுறை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அக்டோபரில் வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்.

சென்னை உயர்நீதிமன்றம் சிவில் கோர்ட்டில் பரிகாரம் தேடுங்கள் என சொல்லப்பட்டிருக்கும் நிலையில், எனது வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. அ.தி.மு.க.வின் சட்ட விதிகளை திருத்தம் செய்ததும், பொதுச்செயலாளராக சசிகலாவை பொதுக்குழு தேர்ந்தெடுத்ததும் கட்சியின் சட்டவிதிகளுக்கு முரணானது. அதனால், இரண்டு விசயங்களுமே செல்லாது என சிவில் கோர்ட்டில் தீர்ப்பு வரத்தான் போகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பு அதற்கு வழிவகுத்துள்ளது. இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., சசிகலா ஆகிய மூவருக்குமே சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மிக பின்னடைவைத் தந்திருப்பதுதான் நிஜம். இந்த மூவரிடமிருந்து கட்சியைப் பாதுகாக்கும் உயரிய தீர்ப்பு எனது வழக்கில் மிக விரைவில் கிடைக்கும்'' என்கிறார் கே.சி.பழனிச்சாமி.

admk eps ops sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe