/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4469.jpg)
சேலம் மாநகராட்சியில்செயல்திறன் உதவியாளர் பணியிடங்களைவிதிகளுக்குப் புறம்பாக நிரப்பிய விவகாரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி முதல் பணியமைப்பு ஊழியர்கள் வரை கூண்டோடு சிக்குகின்றனர்.
சேலம் மாநகராட்சி பொறியியல் பிரிவில், 6 செயல்திறன் உதவியாளர் (நிலை-2) பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த வேலையில் சேர, குறைந்தபட்ச கல்வித் தகுதியாக ஐ.டி.ஐ. படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு, 19,500 - 62,500 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 9.12.2022ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. இதில், 55 பேர் கலந்து கொண்டனர். ஆனால் நேர்காணலுக்கு முன்பே, 6 பேரை தேர்வு செய்துவிட்டதோடு, அவர்களிடம் இருந்து தலா 40 லட்சம் வீதம் 2.40 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு விட்டதாகவும், இந்த நேர்காணலே வெறும் கண்துடைப்புதான் என்றும் அப்போதே சலசலப்புகள் கிளம்பின.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/christy_3.jpg)
காலியாக உள்ள 6 செயல்திறன் உதவியாளர் பணிகளும், சேலம் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் வாரிசுகளுக்கே விதிகளை மீறி ஒதுக்கப்பட்டுவிட்டது தெரிய வந்தது. அதன்படி, சேலம் மாநகராட்சியில் செயற்பொறியாளராகப் பணியாற்றி வரும் செல்வராஜ் மகன் கனிஷ்கரன், மேயர் ராமச்சந்திரனின் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்த அனந்தசயனத்தின் மகன் ஹரீஸ், அஸ்தம்பட்டி மண்டலத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வரும் குப்புசாமியின் மகன் தமிழரசன், திமுக கவுன்சிலர் ஆர்.பி. முருகன் பரிந்துரையின் பேரில் சண்முகம் மகன் ராமச்சந்திரன், திமுக பிரமுகர் அரியானூர் மோகனின் மகன் ஞானேஸ்வரன், லஞ்ச வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பில் கலெக்டர் சக்திவேலின் சகோதரி மகன் ஸ்ரீதரன் ஆகியோருக்கு நேர்காணல் நடத்தப்படுவதற்கு முன்பே, செயல்திறன் உதவியாளர் பணியிடம் இறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்தப் பணி நியமன முறைகேடு குறித்து, 17.12.2022 மற்றும் 21.1.2023 நாளிட்ட 'நக்கீரன்' இதழ்களில் விரிவாக எழுதியிருந்தோம். இது தொடர்பாக சேலம் மாநகராட்சி வட்டாரங்களில் விசாரித்தோம். ''செயல்திறன் உதவியாளர் பணிக்கு, தொடக்கத்தில் 25 லட்சம் ரூபாய்தான் ஆளுங்கட்சி மீடியேட்டர்கள் நிர்ணயம் செய்திருந்தனர். பின்னர் போட்டி அதிகமானதால், 40 லட்சமாக அதிகரித்தனர். இவ்வளவு பெரிய தொகை கொடுத்தும் பணியில் சேர பலர் ஆர்வம் காட்டினர். இந்நிலையில்தான், சேலம் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் திமுக பிரமுகர்களின் வாரிசுகள் 6 பேருக்கு செயல்திறன் உதவியாளர் பணிகள் முன்கூட்டியே இறுதி செய்யப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/parthasarathy.jpg)
செயல்திறன் உதவியாளர் பணியிடங்கள் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, பணியில் சேர்ந்த 6 பேரும் குறைந்தபட்ச கல்வித் தகுதியான ஐ.டி.ஐ. படிப்பை கூட முடிக்காதவர்கள். அவர்கள், தனியார் ஐ.டி.ஐ.க்களில் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, குறுகிய கால பயிற்சி முடித்ததுபோல் போலிச் சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்துள்ளனர். அடுத்து, இனசுழற்சி விதிகளும் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
இவை எல்லாவற்றையும் விட, புதிதாக வெளியான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண்.152-ன் படி, மாநகராட்சிகளில் செயல்திறன் உதவியாளர் பதவி அடியோடு ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த அரசாணை வெளியான பிறகுதான், செயல்திறன் உதவியாளர் பணிக்கு 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அரசாணைதான், இப்போதைய தலைவலிக்கு அடிப்படைக் காரணம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/selvaraj_5.jpg)
இத்தனை சிக்கல்களைத் தாண்டி, 6 பேருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டுமா? என அப்போதைய சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ரொம்பவே யோசித்தார். ஆனால், பணிநாடுநர்களிடம் பணம் வாங்கிய ஆளுங்கட்சி மீடியேட்டர்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து அழுத்தம் தரப்படவே, வேறு வழியின்றி அப்போதைய ஆணையர் கிறிஸ்துராஜ் நியமன ஆணையில் கையெழுத்திட்டுள்ளார்'' என இந்தப் பணி நியமனத்தின் பின்னணியில் நடந்த தகிடுதத்தங்களை புட்டுப் புட்டு வைத்தனர் ஊழியர்கள்.
இந்த நிலையில்தான், 6 பேரை பணி நியமனம் செய்ததில் தொடர்புடைய அனைத்து அலுவலர், ஊழியர்களிடமும் விளக்கம் பெற்று அனுப்பும்படி நகராட்சிகள் நிர்வாக இயக்குநர் சிவராசு சேலம் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய இந்த பணி நியமனத்தின்போது, சேலம் மாநகராட்சி ஆணையராக இருந்த கிறிஸ்துராஜ், தற்போது திருப்பூர் மாவட்ட ஆட்சியராக உள்ளார். இவர் மட்டுமின்றி, சேலம் மாநகராட்சி பணியமைப்புப் பிரிவு கண்காணிப்பாளர் பார்த்தசாரதி, உதவி ஆணையர் சாந்தி, இளநிலை உதவியாளர்கள் விஜயலட்சுமி, உதய நந்தினி ஆகியோரும் இந்த விவகாரத்தில் சிக்குகின்றனர். இயக்குநர் அலுவலகத்திற்கே தெரியாமல் 6 பேரை இவர்கள் பணி நியமனம் செய்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramachandar.jpg)
இதற்கு முன்பு, நகராட்சி நிர்வாக இயக்குநராக இருந்த பொன்னையாவும், 6 செயல்திறன் உதவியாளர் பணியிடங்களை அரசின் அனுமதியின்றி நிரப்பக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால், அரசியல் அழுத்தம், சுடச்சுடக்கிடைத்த கரன்சி காரணமாகவே இந்த விதிமீறல் நடந்திருக்கிறது என்பதும் நமது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததில் இருந்து, மாநகராட்சி தரப்பில் இருந்து அவர்கள் 6 பேரையும் ராஜினாமா செய்துவிட்டுப் போகும்படி அழுத்தம் தரப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நடக்கும் என எதிர்பார்க்காத அவர்கள், வேலைக்காக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். பணம் வசூலித்த ஆளுங்கட்சி மீடியேட்டர்களோ, இதையெல்லாம் நீங்கள் 'மேலிடத்தில்' பேசிக் கொள்ளுங்கள்,' என்று ஒற்றை வரியில் பதில் சொல்லி இருக்கிறார்கள்.
இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஊழியர்கள் மேலும் கூறுகையில், ''அலுவலக கண்காணிப்பாளர் பார்த்தசாரதிக்கு இந்த பணி நியமன முறைகேட்டில் முக்கிய பங்கு இருக்கிறது. இயக்குநர் அலுவலகத்தில் தடையின்மை சான்று பெறாமல் நியமிக்கக்கூடாது என இவருக்கு நன்றாக தெரிந்திருந்தும் ஆதாயத்திற்காக வளைந்து போய்விட்டார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kupusamy_0.jpg)
இந்த வேலையை 'கச்சிதமாக' முடித்துக் கொடுத்ததற்காகத்தான் கண்காணிப்பாளர் பார்த்தசாரதிக்கு உதவி ஆணையர் (கணக்குப்பிரிவு), நிர்வாக அலுவலர் பொறுப்புகளையும் கூடுதலாக ஒப்படைத்தார் அப்போதைய ஆணையர் கிறிஸ்துராஜ். விரைவில் இவர் பதவி உயர்வு பெறப் போகிறார். பணி நியமன முறைகேட்டுக்கு மூல காரணமான பார்த்தசாரதிக்கு பதவி உயர்வு வழங்குவது மேலும் முறைகேடுகளை ஊக்குவிக்கவே செய்யும். பார்த்தசாரதி மேஜையிலிருந்து கோப்புகளை பரிந்துரை செய்யாமல் இருந்திருந்தால் ஆணையரும் கையெழுத்துப் போட்டிருக்க மாட்டார். இவரால்தான் இப்போது முன்னாள் ஆணையர் மட்டுமின்றி மேயர், நியமனக் குழுவில் உள்ள கவுன்சிலர்களின் தலைகளும் இப்போது உருட்டப்படுகிறது'' என்கிறார்கள்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தரிடம் கேட்டபோது, ''நான் இங்கு ஆணையராக பொறுப்பேற்பதற்கு முன்பே செயல்திறன் உதவியாளர் பணியில் 6 பேர் நியமிக்கப்பட்டு விட்டனர். புதிய அரசாணை 152ன் படி, இந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இவர்களைப் பணி நியமனம் செய்த நடவடிக்கைகளில் தொடர்புடைய ஊழியர்களிடம் விளக்கம் கேட்கப்படும். அரசாணைக்குப் புறம்பாக நியமிக்கப்பட்டவர்கள் விரைவில் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/balachendra.jpg)
மேயர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, ''அதிகாரிகள் பரிந்துரை செய்ததன் பேரில்தான் நியமனக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. விதிகளை மீறி நியமிக்கப்பட்ட 6 பேரும் கண்டிப்பாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்'' என கேஷூவலாகச் சொன்னார்.
உள்ளாட்சி அமைப்புகளில் நேரடி பணி நியமன முறை கைவிடப்பட்டு, டி.என்.பி.எஸ்.சி. மூலம் காலியிடங்கள் நிரப்பப்படும் என திமுக ஆட்சிக்கு வந்த புதிதில் அறிவித்தது. கடந்த ஒரு மாதம் முன்பு அந்த அறிவிப்பை திடீரென்று ரத்து செய்து, பழையபடி நேரடி நியமனம் தொடரும் என்று கூறியது.
நேரடி நியமனங்கள் என்பது ஊழலுக்குத்தான் வித்திடும் என்பதற்கு சேலம் மாநகராட்சியில் நடந்த முறைகேடான பணி நியமனமே சான்று. இந்நிலையில், அனைத்து மாநகராட்சிகளிலும் விதிகளை மீறி நடந்த பணி நியமனம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
Follow Us