Skip to main content

கரோனா மரணங்களில் கடைப்பிடிக்க வேண்டியவை!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


கரோனாவில் இறந்தவர்களை எப்படிக் கையாளுவது என்று தெரியாததால், ஆந்திர மருத்துவர் ஒருவரின் உடல் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்ட கொடுமை அரங்கேறியிருக்கிறது. கடைசிவரை உயிர் காக்கும் மருத்துவச் சேவையில் ஈடுபட்டிருந்த அந்த மருத்துவரின் உடலுக்கு, கொஞ்சமும் மனிதாபிமனம் காட்டப்படவில்லை என்பது பெரும் கொடுமையாகும்.
 

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த பிரபல எழும்பு நோய் மருத்துவர் லட்சுமி நாராயண ரெட்டி. 60 வயதை நெருங்கும் அவருக்கு, அவர் சிகிச்சை தந்த நோயாளிகள் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து அங்கே இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அவர் அட்மிட் செய்யப்பட்டார். எனினும் முன்னேற்றம் இல்லாததால், 13-ந் தேதி அவரைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்து சென்னை வானகரத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள். 
 

 

coronavirus peoples follow instructions


அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் மூச்சுத்திணறலால் மரணமடைந்தார். அவரை சென்னைக்கு அழைத்து வந்த அவருடைய மனைவிக்கும் டிரைவருக்கும் கரோனா இருப்பது உறுதியானதால், அவர்களும் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த நிலையில், மரணமடைந்த மருத்துவரின் உடலைச் சென்னையிலேயே தகனம் செய்ய முடிவானது. இதைத்தொடர்ந்து அம்பத்தூர் மயானத்திற்கு அவரது உடலை மருத்துவமனை ஊழியர்கள், பாதுகாப்பு உடையணிந்து ஆம்புலன்ஸில் எடுத்துச்சென்றபோது, அங்கிருந்த மயான ஊழியர்கள், எங்களுக்கும் பாதுகாப்பு உடை கொடுத்தால்தான் இறந்த உடலைத் தகனம் செய்வோம் என்றனர். 
 

http://onelink.to/nknapp


இதற்கிடையே அக்கம் பக்க மக்கள் கூடி, கரோனா நோயாளியின் உடலை இங்கே தகனம் செய்யக்கூடாது என்று கடும் எதிர்ப்புகாட்ட, அவர் உடலை  அங்கிருந்து திரும்ப மருத்துவமனைக்கே எடுத்துச் செல்லும் நிலை  ஏற்பட்டது. இறந்த மருத்துவரை தகனம் செய்யக் கூட முடியாத நிலைக்கு என்ன காரணம்? அவரைத் தகனம் செய்தால் கரோனா அந்தப் பகுதி மக்களுக்குத் தொற்றும் என்ற  அறியாமைதான் காரணம். கரோனா நோயாளிகள் இறந்தால், அவர்களின் உடலை எப்படி அணுகவேண்டும்? எப்படி இறுதிச் சடங்குகள் நடத்தப்படவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுக் குறிப்புகள் இருந்தபோதும், அதை உரியவர்களுக்கு  இங்கே யாரும் எடுத்துச்செல்லவில்லை என்பதே இதுபோன்ற அவலங்களுக்குக் காரணம்.  
 

முக்கியமான வழிகாட்டுக் குறிப்புகள்:

1) கரோனா நோயாளிகளின் உடல்களுக்கு, உரிய பாதுகாப்போடு இறுதிச் சடங்குகள் நடத்துவதால், எவ்விதமான சிக்கலும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.

2) மயான ஊழியர்கள் இது போன்ற நேரத்தில் கிருமி நாசினியைப் பயன்படுத்துவதோடு, முகக் கவசத்தையும் கையுறைகளையும் அணிந்துகொள்ள வேண்டும்.

3) இறந்தவர் உடல்  ஒரு பையில் வைக்கப்பட்டிருக்கும். சடலத்தின் முகத்தருகே இருக்கும் ஜிப்பைத் திறந்து, இறுதியாக உறவினர்கள்கள் விரும்பினால் நோயாளியின் முகத்தை ஒரு முறை திறந்து காட்டலாம் (அப்படி காட்டுபவர் கையில் கிருமி நாசினி பயன்படுத்தி, கையுறை அணிந்திருக்க வேண்டும்).

4) இறந்தவரின் உடலை உறவினர்கள் தொடாதபடி, இறுதி மரியாதை என்ற வகையில் பூக்களைத் தூவுதல், புனித நூல்களின் வரிகளைப் படித்தல் என்பது போன்ற செயல்களை அனுமதிக்கலாம்.
 

coronavirus peoples follow instructions

 

5) இறந்தவரின் உடலைக் கழுவுவதோ, அதை உறவினர்கள் தொடுவதோ, முத்தம் கொடுப்பதோ கூடாது. மேலும் சடலத்தைத் தொட்டுச் செய்யும் எந்தவித சடங்குகளையும் அனுமதிக்கக் கூடாது.

6) தகனமோ அடக்கமோ, இறுதிச் சடங்கு முடிந்ததும் , மயான ஊழியர்களும், அந்த நேரத்தில் அங்கே  இருந்தவர்களும் கைகளைச் சுத்தம் செய்யுதல் போன்ற செயல்களை உடனடியாகச் செய்யவேண்டும்.

7) கரோனா நோயாளிகளைத் தகனம் செய்த சாம்பலில்  எவ்விதக் கிருமியும் இருக்காது. எனவே, எவ்வித நோயும் அதனால் பரவுவதற்கு வாய்ப்பே இல்லை. எனவே, அதை வழக்கம்போல சேகரித்து உறவினர்களிடம் இறுதிச் சடங்குகளுக்காகக் கொடுக்கலாம்.

8) இறுதிச் சடங்கில் நிறைய பேர் கூடுவது தவிர்க்க வேண்டும். ஏனெனில் இறந்தவர்களின் உறவினர்களில் யாருக்காவது வைரஸ் தொற்று இருந்தால் அது மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பாகிவிடலாம். மேலும் இறுதிச் சடங்குகளில் சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும்.

இந்தச் செய்திகள் கரோனாவால் இறக்கும் நோயாளிகள் குடும்பத்தினருக்கும், மயான ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படவேண்டும். இதையெல்லாம் உரிய வகையில் தெரிவிக்காததால்தான்  கரோனா நோயால் இறப்பவர்களின் சடலங்கள், வீண் பயத்தால் அலைக்கழிக்கப்படுகின்றன.அதேபோல் தமிழக அரசு, இந்தக் கரோனா காலத்தில். மயான ஊழியர்கள் அனைவருக்கும், உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி, அவர்களுக்கும் தைரியமூட்டவேண்டும்.


கடைசியாக ஒன்று, கரோனா நோயாளிகள், வெறுக்கத்தக்கவர்கள் அல்ல. அன்போடும் அக்கறையோடும் பராமரிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுக்கு நாம் தரும் 'தைரியமே' அவர்களை, நோயின் பிடியிலிருந்து விரைவில் மீண்டெழச்செய்யும் அருமருந்து.


 

Next Story

சென்னையில் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Traffic change in Chennai for a year

சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் நாளை (27.04.2024) முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி (26.04.2025) வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் 27.04.2024 முதல் 26.04.2025 வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகளில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்லத் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் அனுகு (சர்வீஸ் ரோடு) சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராயர் சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். 

Traffic change in Chennai for a year

பர்கிட் சாலை, மூப்பாரப்பன் தெரு சந்திப்பில் இருந்து மேட்லி நோக்கி செல்வதற்கு பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் மூப்பாரப்பன் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபானி தெரு, மன்னார் தெரு வழியாக உஸ்மான் சாலை மூலம் தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம். தி. நகர் பேருந்து நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை அண்ணா சாலையை அடைய தெற்கு உஸ்மான் சாலை சென்று கண்ணம்மாபேட்டை சந்திப்பை அடைந்து தென்மேற்கு போக் சாலையில் சென்று சிஐடி நகர் நான்காவது பிரதான சாலை, சிஐடி நகர் மூன்றாவது பிரதான சாலை சென்று அண்ணா சாலையை அடையலாம். 

Traffic change in Chennai for a year

சிஐடி நகர் 1ஆவது பிரதான சாலையிலிருந்து வடக்கு உஸ்மான் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பில் தென்மேற்கு போக் சாலை வழியாகச் சென்று வெங்கட் நாராயணா சாலையில் சென்று நாகேஸ்வரன் ராவ் சாலை வழியாக வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு உஸ்மான் சாலையை அடைய மேட்லி ரவுண்டானாவில் இருந்து பர்கிட் ரோடு சென்று வெங்கட் நாராயண சாலை வழியாக நாகேஸ்வர ராவ் சாலையில் இடதுபுறம் திரும்பி வடக்கு உஸ்மான் சாலையை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

சென்னை விமான நிலையத்தில் கிடந்த தங்கம்; சுங்கத்துறையினர் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Gold found at Chennai airport; Customs investigation

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் கிடந்த தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலைய குப்பைத் தொட்டியில் கேட்பாராற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைத் தொட்டியில் கிடந்த 1.2 கிலோ தங்க நகைகளைக் கைப்பற்றிய சுங்கத் துறையினர், சிசிடிவியை பார்க்காதபடி நகையை குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்லும் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைத் தொட்டியில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.