Advertisment

தும்பை விட்டு வாலை பிடிக்கும் கதையாகத்தான் இருக்கிறது... சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வேதனை... 

koyambedu

கோயம்பேடு மார்க்கெட்

Advertisment

வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்துக்குள் வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்திருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் மூலம் அறிக்கை அனுப்பியுள்ளார். அதில் தனிப்பட்ட நபர்களோ, அமைப்புகளோ வெளி மாவட்டங்களுக்கு செல்ல விரும்புகிறவர்களுக்கு அனுமதி பாஸ் வழங்கப்படும்.

மாநகராட்சி ஆணையர், மாவட்ட தொழில் மைய இயக்குனர், அந்தந்த மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட தொழில் மையங்கள் மூலம் பாஸ்கள் வழங்கப்படும். இதற்காக இ.பாஸ் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்காக கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருபவர்களை தவிர மற்றவர்கள் 14 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். இது மட்டுமல்ல பொது நிறுவனங்கள், சிறு தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொது மற்றும் தனியார் அலுவலகங்களில் பணி செய்யும் ஊழியர்கள் ஆரோக்கிய சேது என்ற செயலியை பயன்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு கட்டுப்பாடுகளை கூறியிருக்கிறார் தலைமை செயலாளர். இவ்வளவு கட்டுப்பாடுகளும் முறையாக பின்பற்றி இருந்தால் மற்ற மாவட்டங்களில், மாநிலங்களில் இருந்து வருபவர்களால் புதிய நோய்தொற்று ஏற்படும் நிலை இப்போது ஏற்பட்டிருக்காது.

Advertisment

உதாரணமாக ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு கடலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 22, 23ம் தேதி தங்கள் ஊர்களுக்கு வந்துள்ளனர். அவர்களில் இப்போது வரை மூன்று மாவட்டங்களிலும் ஏழு பேர்களுக்கு கரோனா நோய் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திராவிலிருந்து தமிழக எல்லையில் வரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் இவர்கள் அனைவரையும் தனியாக கொண்டுசென்று தனிமைப்படுத்தி வைத்து மருத்துவ பரிசோதனையை அப்போதே மேற்கொண்டிருந்தால் இப்போது இவர்களால் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை வந்திருக்காது. அவர்களுக்கு நோய் இருப்பது அப்போதே தெரிய வந்திருக்கும். அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருக்கலாம். ஆனால் அப்படிப்பட்டவர்களை எல்லாம் முறையாக சோதனை சாவடியில் சோதனை செய்யாமல் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்துள்ளது மாநில எல்லையில் பணியிலிருந்த காவல்துறை.

இதனால் அவர்கள் நோய்வாய்ப்பட்ட பிறகு அவர்களுக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தது முதல் அவர்கள் உறவினர்களுக்கும் பரவி இருக்குமோ என்ற அச்சத்தில் அவர்களுக்கும் பரிசோதனை, அவர்கள் வசித்த பகுதியில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு வசிப்பவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக காவல்துறையும் அதிகாரிகளும் செய்த அலட்சியத்தால் மாவட்டத்தில் உள்ள காவல்துறையினருக்கும் சுகாதாரத் துறையினருக்கும் இப்போது கடும் பணிச்சுமையை ஏற்பட்டுள்ளது.

இதேபோன்றுதான் சென்னை கோயம்பேடு பகுதியில் நோய் பரவ ஆரம்பித்ததும் கோயம்பேடு மார்க்கெட்டை மூடியிருக்க வேண்டும். அங்கு பணி செய்தவர்கள் சுமைதூக்கும் தொழிலாளர்கள், விற்பனையாளர்கள் என அனைவரையும் அந்தப் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி வளாகங்களில் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் நோய் தொற்றுள்ளவர்கள், தொற்று இல்லாதவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு இருக்கலாம்.

Viluppuram

விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி

இப்படி செய்யாமல் சென்னையிலிருந்து லாரி மூலம் இதர வாகனங்கள் மூலம் கிராமங்களுக்கு சுதந்திரமாக செல்லக்கூடிய அளவிற்கு அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். கிராமங்களுக்கு வந்தவர்கள் அனைவரையும் ஊர் ஊராக தேடி சென்று அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் மருத்துவ பரிசோதனை செய்யும் பணியும் இப்போது நடைபெற்று வருகிறது. இது எவ்வளவு கடுமையான பணிச்சுமை என்பதை சென்னையில் இருந்த அதிகாரிகள் காவல்துறையினர் உணரவில்லை என்பது வெட்கப்பட வேண்டிய செயல் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

கோயம்பேடு என்ற ஒரே இடத்தில் தொழிலாளர்கள் வியாபாரிகள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இப்போது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போல கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் தாலுகாக்களில் உள்ள அதிகாரிகள் கிராமங்களில் உள்ள சுகாதார குழுவினர் இப்போது ஊர் ஊராகச் சென்று அலைந்து திரிந்து சென்னையிலிருந்து வந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தி வருகிறார்கள்.

இவர்கள் அனைவரையும் தேடி கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை முடிப்பதற்குள் படாதபாடு படவேண்டும். இதற்குள் சென்னையிலிருந்து வந்தவர்கள் மூலம் பல்வேறு மனிதர்களுக்குநோய் பரவி விடும் ஆபத்தும் உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அரசும், அதிகாரிகளும், அலுவலர்களும் நடைமுறை சிக்கல்களை உணர்ந்து அவைகளுக்கு ஏற்றவாறு முடிவெடுத்து கரோனா நோயை கட்டுப்படுத்தும் பணியை செவ்வனே செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Ariyalur coronavirus issue kallakurichi koyambedu villupuram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe