ADVERTISEMENT

சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா? நேரம் ஒதுக்காத விஜயபாஸ்கர்... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்! 

04:10 PM Mar 30, 2020 | Anonymous (not verified)

ஊரடங்கு நேரத்தில் வாகனத்தை நிறுத்தும் போலீஸ் கூட ஹெல்மெட் இருக்கிறதா? லைசென்ஸ் இருக்கிறதா? என்று கேட்காமல் முகத்தில் "மாஸ்க்' இருக்கிறதா? என்று கேட்டுத்தான் விரட்டியடிக்கிறார்கள். அந்தளவுக்கு, பொதுமக்களே "மாஸ்க்' மாட்டிக்கொண்டு உலாவும் சூழலில், கோரோனா கொடிய நோய்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு ச-95 மாஸ்க் கிடைக்கவில்லை.

2020 மார்ச் முதல் வாரத்திலேயே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேச, மருத்துவச்சங்க பிரதிநிதிகள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் செயலாளர் பீலா ஐ.ஏ.எஸ் ஸையும் சந்திக்க முயற்சித்தார்கள். ஆனால், அமைச்சரும் செயலாளரும் இரண்டுபேருமே டாக்டர்களாக இருந்தும் நேரம் ஒதுக்கப்படவில்லை. முன்பிருந்த சுகாதாரச் செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். யாருடைய கருத்தாக இருந்தாலும் காதுகொடுத்து கேட்பார். அவை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பயன்படுத்திக்கொள்வார். ஆனால், பீலா ஐ.ஏ.எஸ். வந்தபிறகு யாருடைய கருத்துப் பரிமாற்றமும் இல்லாமல் போய்விட்டது. செயலாளர் பீலாவிடம் துறைரீதியாக பிரச்சனைகளைக் கொண்டு செல்லவேண்டிய டி.எம்.எஸ்., டி.பி.ஹெச்., டி.எம்.இ., ஆகிய மூன்று சுகாதார இயக்குனர்களுமே பேச முடியாமல் திணறிவருகிறார்கள்.

ADVERTISEMENT



இந்தச்சூழலில்தான், கொரோனா தமிழகத்திலும் பரவ ஆரம்பித்தது. நிலைமை மோசமாக ஆரம்பித்த நிலையில்தான் சுகாதாரத் துறை முன்னாள் செயலாளரும் பேரிடர் மேலாண்மைக்குழுச் செயலாளருமான இராதாகிருஷணன் சுகாதாரத்துறைக்கு கூடுதல் செயலளாராக ஈடுபடுத்தப்படுகிறார். அதற்குப்பிறகுதான், மருத்துவ உபகரணங்கள் என்னென்ன இருக்கிறது என்று பட்டியல் எடுக்கும் போதுதான் மிக முக்கிய பி.பி.இ. எனப்படும் புரஃபஷனல் புரடெக்ஷன் எக்யூப்மெண்ட்களான டிஸ்போஸபிள் தொப்பி, டிரிபிள் லேயர் மாஸ்க், என் -95 மாஸ்க், ஹேண்ட் சானிடஸைர், கவுன், பாலித்தின் கண்ணாடி உள்ளிட்ட உபகரணங்கள்கூட இல்லை என்பது தெரியவருகிறது.

ADVERTISEMENT


அதற்குப்பிறகு, டி.என். எம்.சி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷனிடம் ஆர்டர் கொடுக்கிறது தமிழக சுகாதாரத்துறை. ஆனால், தனியார் துறையினர் ஏற்கனவே வாங்கி விற்பனை செய்து வருவதாலும் பொதுமக்களும் அதிகம் வாங்கிக்கொண்டதாலும் அரசாங்கத்தின் டி.என்.எம்.எஸ்.சி யால் பர்ச்சேஸ் செய்யமுடிய வில்லை.


இந்தநிலையில்தான், மருத்துவக்கல்லூரி டீன்கள், இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்களே மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை வெளியில் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று செயலாளர் பீலா ஆணை பிறப்பித்தார். அதன், விளைவுதான் சென்னை எழும்பூர் தாய்-சேய்நல மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சம்பத் குமாரி, "வெளியில் மாஸ்க் வாங்கிக்கொள்ளுங்கள்' என்று டாக்டர்களுக்கு உத்தரவிட்ட ஆணை பரவி "சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கே மாஸ்க் இல்லையா?' என்று பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், 10 ரூபாய் விற்ற சாதாரண மாஸ்க் 30 ரூபாய்க்கும் 90 ரூபாய் விலையுள்ள என் -95 மாஸ்க் 300 ரூபாயிலிருந்து 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வெளியிலும் மாஸ்க் வாங்க முடியாமலேயே நோயாளிகளுடன் ஆபத்தை சந்திக்க ஆரம்பித்தார்கள் அரசு டாக்டர்கள். அவுட் போஸ்ட்டுகளிலும் மாவட்ட பார்டர்களிலும் 5 பேர் கொண்ட மருத்துவக்குழு அமைக்கப்பட்டது. அதில் பரிசோதனைகளில் ஈடுபடுகிறவர்களுக்கும் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களைக் கொடுக்கவில்லை.

இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரவீந்திரநாத் நம்மிடம், பொதுமக்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு டாக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டால் அவர் சிகிச்சை அளிக்கும் அத்தனை நோயாளிகளுக்கு எளிதில் தொற்றிவிடும் பேரபாயம் உள்ளது. அப்படியிருக்க, என் -95 மாஸ்க் உள்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்களுக்கு உடனே வழங்கவேண்டும். ஒட்டுமொத்த உடலையும் மறைக்கும் கவசமும் வழங்கவேண்டும். ஏற்கனவே, வெண்டிலேட்டர் கருவிகள் குறைவாக உள்ளன. அந்தக்கருவிகள் மற்ற ஹார்ட், கோமா உள்ளிட்ட நோயாளிகளுக்கும் பயன்பட்டுவருவதால் இன்னும் கூடுதலாக வெண்டி லேட்டர்களை வாங்கவேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவேண்டும் என்கிறார் கோரிக்கையாக.

சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் அமைப்புச்செயலாளர் த.நடராஜனிடம் நாம் பேசியபோது, சென்னையில் சுமார் 300 மொத்த விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். இதில், ஊரடங்கு சூழலில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் 20 சதவீதம்பேர் மருந்துகள் அனுப்பமுடியாமல் இருக்கிறார்கள். அனைத்து, மருந்துக்கடைகளிலும் தற்போது இலவச டோர் டெலிவரி மூலம் அத்தியாவசிய மருந்துகளை அனுப்புகிறோம். அதாவது, உங்கள் அருகிலுள்ள மருந்துக் கடைக்கு ஃபோன் செய்து வாட்ஸ்-அப்பு களில் டாக்டரின் மருந் துச்கீட்டை அனுப்பினால் வீட்டிற்கே வந்து மருந்துகளைக் கொடுத்து விட்டுப்போவார்கள். 10 ரூபாய் என்று நிர்ணயம் செய்யப்பட்ட மாஸ்க்கின் விலை கட்டுப்படி ஆக வில்லை என்ற காரணத்தினால் தட்டுப்பாடு இருந்தது. மத்திய அரசின் விலை நிர்ணயப்படி இனிமேல் அதிகபட்ச விலையாக 16 ரூபாய்க்கு விற்கப்படும். அதேபோல், 100 எம்.எல். ஹேண்ட் சானிட்டைஸர் 50 ரூபாய்க்குமேல் விற்கமாட்டார்கள் என்றார்.

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கச்செயவதோடு மக்கள் இடைவெளி விட்டு வாங்குமளவுக்கு நடவடிக்கை எடுத்து கோரானா தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவேண்டும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT