Skip to main content

ஊரடங்கு போட்டும் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அரசு... அதிர வைத்த ரிப்போர்ட்!

 

bus


ஆசிய நாடுகளிலேயே அதிக கரோனா நோயாளிகள் உள்ள நாடாக மாறியுள்ள இந்தியா, உலக நாடுகளின் டாப் டென் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. மே மாதம் 11ஆம் தேதி 70,768 பேர் இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த எண்ணிக்கை மே 25ஆம் தேதி ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 450 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 15 நாட்களில் 106 சதவிகிதம் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகளின் பரவலுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகம். இதே வேகம் நீடித்தால், ஆகஸ்ட்டில் 15 லட்சம் பேர் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இறப்பு எண்ணிக்கையும் லட்சத்தைத் தாண்டும் அபாயம் உள்ளது என உலகளாவிய மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
 


இந்தியாவில் 8 கோடி வெளிமாநிலத் தொழிலாளர்கள் நடந்தே தங்களது ஊர்களுக்குச் சென்றுள்ளார்கள். மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கேரளாவுக்குச் சென்றவர்கள் மூலமாக கேரளாவில் 415 கரோனா நோயாளிகள் முளைத்திருக்கிறார்கள். அதேபோல் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களுக்கு நடந்தும் டிரக்குகளிலும் சென்றவர்கள் 8 கோடி பேர். இவர்களுக்கு முறையான பரிசோதனையும் இல்லை. நோய் எதிர்ப்புத் திறனுக்கான உணவும் இல்லை. அதனால் நோய்த் தொற்று அதிகரிக்கும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

ஊரடங்கு அறிவிக்கும்போது இந்தியாவில் இருந்த கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 564. அப்பொழுது வெறும் 10 பேர்தான் கரோனா நோயால் மரணமடைந்தார்கள். இந்தியா முழுவதும் ஊரடங்கு 60 நாட்கள் கடைப்பிடிக்கப்பட்ட மே மாதம் 26ஆம் தேதி மொத்தம் உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1.45 லட்சம். அவர்களில் மரணமடைந்தவர்கள் 3867 பேர். இந்தியாவில் ஊரடங்கு சரியாகக் கடைப்பிடிக்கப்படவில்லை. ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
 

 


தமிழகத்தில் மே 26 நிலவரத்தின்படி 17,728 பேர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதில் சென்னையில் மட்டும் 11,640 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டை கரோனா காலத்தில் இயங்க அனுமதித்ததும், ஊரடங்குக்குள் ஒரு ஊரடங்கு போட்டு மக்களை இடைவெளியின்றி கூடச் செய்ததும் நோய்த் தொற்று தடுப்பில் மிகப்பெரிய தோல்வி என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.
 

flight


கரோனாவோடு வாழ்வது எப்படி என தமிழக அரசு ஒரு பிட் நோட்டீஸை அச்சடித்து தமிழகம் முழுவதும் விநியோகிக்கச் சொல்லியிருக்கிறது. ஆனால் கேரளாவில் கரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டால் அடுத்த 15 நிமிடத்தில் அரசு ஆம்புலன்ஸ் மூலம் அந்த நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடும். அவர்களுக்குப் பல்வேறு மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்கும். மரண எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அதேநேரத்தில், பத்துக்கு பத்து பரப்புள்ள குடிசையில் 10 பேர் படுத்துத் தூங்கும் மும்பை தாராவியிலும் குடிசைப் பகுதிகள் நிறைந்த சென்னை ராயபுரம் பகுதிகளிலும் நோயாளிகளுக்குச் சோதனை செய்வதும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிவதும் இயலாத செயலாகிவிட்டது.

சென்னையிலும், மும்பையிலும் கரோனா ஏறத்தாழ சமூகத் தொற்றாக மாறிவிட்டதால், கட்டுப்படுத்தத் தெரியாமல் அரசுகள் விழிக்கின்றன. மே 31ஆம் தேதி ஊரடங்கு தமிழகத்தில் முடிவடைகிறது. மத்திய அரசு, மாநில அரசுகள் வேண்டாம் எனச் சொன்னாலும் நோய் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து ரயில்கள் மற்றும் விமானங்களை இயக்க ஆரம்பித்துவிட்டன. மும்பையில் இருந்து கேரளாவிற்கு கேரள அரசின் அனுமதியே இல்லாமல் இரண்டு ரயில்கள் அனுப்பப்பட அதை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இப்படி நிலைமைகள் போவதைக் கண்ட தமிழக அரசு மருத்துவ வல்லுநர்களைக் கூப்பிட்டு மே 31ஆம் தேதி ஊரடங்கை நீக்குவதா வேண்டாமா, இமாச்சலப் பிரதேச அரசு போல இன்னும் இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாமா என ஆலோசனை செய்தது.
 

http://onelink.to/nknapp


தமிழகத்திலேயே கோவை, ஈரோடு, சேலம், நீலகிரி போன்ற மேற்கு மண்டலப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று வெகுவாகக் குறைந்துள்ளது. அதனால் அதன்படி மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளைக் காட்பாடியில் இருந்தும், தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளைச் செங்கல்பட்டில் இருந்தும் இயக்கலாமா என ஒரு ஆலோசனை செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசோ அதிக நோய்த்தொற்றுள்ள சென்னையைக் குறிவைத்து விமானங்களையும், ரயில்களையும் அனுப்ப முடிவு செய்திருக்கும்போது நாம் எப்படிச் சென்னை நகரில் பேருந்துகளை அனுமதிக்காமல் இருக்க முடியும் என அரசு அதிகாரிகள் மருத்துவர்களிடம் வாதம் செய்திருக்கிறார்கள்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் சமூகத்தொற்றாக மாறிவிட்ட கரோனாவைக் கட்டுப்படுத்துவது சவால்தான் என அரசு அதிகாரிகள் முதல்வர் எடப்பாடி முன்னிலையிலேயே தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்