Skip to main content

கரோனோவுக்கான தீவிர சிகிச்சைகளை துரிதப்படுத்த நுரையீரல் சிறப்பு மருத்துவர் மனம் திறந்த மடல்!

Published on 26/03/2020 | Edited on 27/03/2020

கரோனா வைரஸ் சிகிச்சை குறித்து நுரையீரல் துறை சிறப்பு மருத்துவர் கடலூர் பால.கலைக்கோவன் தமிழக சுகாதாரத்துறைக்கு எழுதியுள்ள மனம் திறந்த மடலில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது கண்டு மகிழ்ச்சி. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசின் இந்த முயற்சிக்கு ஒவ்வொரு குடிமகனும் 100% ஆதரவு வழங்க வேண்டும்.

 

Corona virus  issue -  Lung specialit doctor Request to government

 



உலக சுகாதார நிறுவனம் (WHO) கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 40,500 மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1750 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவித்துள்ளது. இதுவரையில் மொத்தம் 19,500 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் தீவிர சிகிச்சை பிரிவில்(ICU) அனுமதிக்கப்பட்டு இருந்தனர் என்பதையும் இந்நேரத்தில் நினைவுபடுத்த விழைகின்றேன். மதுரையில் கரோனாவால் இறந்தவர் கூட தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர் தான்.

தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆயிரத்திற்கும் குறைவான தீவிர சிகிச்சை படுக்கைகளே(ICU Beds) உள்ளன. அதிலும் செயற்கை சுவாச கருவி (VENTILATORS)வசதி 400 மட்டுமே உள்ளது. அவைகளில் பெரும்பாலானவை சென்னையில் மட்டுமே உள்ளது. இதர 37 மாவட்டங்களில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் 200-க்கும் குறைவான செயற்கை சுவாச கருவிகளே உள்ளன. அவற்றில் எத்தனை கருவிகள் முழுமையாக செயல்படுகின்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

நான் அறிந்தவரையில் தமிழகத்தில் உள்ள அனைத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் எம்.டி. பொது மருத்துவர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். சில அரசு மருத்துவமனைகளில் மயக்கவியல் துறை வல்லுநர்களும் தீவிர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுகின்றனர். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் முதுநிலை மாணவர்கள்(PG Residents)தான் தீவிர சிகிச்சைப் பிரிவில் முதுகெலும்பாக இருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இந்நேரத்தில் தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பு வல்லுநர்களின்(CRITICAL CARE SPECIALISTS/DM PULMONOLOGIST) வழிகாட்டுதல் நிச்சயம் தேவை. முன்னேறிய நாடுகள் அனைத்திலும் அவர்களின் பங்கு போற்றத்தக்கதாக உள்ளது. தமிழக அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு சிறப்பு வல்லுநர்கள்(CRITICAL CARE INTENSIVIST) ஒருவர் கூட இல்லை என்பது வேதனை அளிக்கிறது. 175 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பொது மருத்துவமனையில் கூட அத்துறை வல்லுநர்கள் யாரும் இல்லை.

 



சாதாரண காய்ச்சல் முதல் சிறு அறுவை சிகிச்சை வரை இங்கு உள்ள ஆட்சியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவருமே தனியார் மருத்துவமனையை  நாடுகின்றனர். பொதுமக்களும் இதனால் அரசாங்க மருத்துவமனைகளில் மேல் உள்ள நம்பிக்கையை இழந்து விட்டனர்.

இந்நிலையில் போதுமான வசதிகள் இல்லாத அரசாங்க மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை அனுமதிப்பது என்பது மருத்துவத் தற்கொலை என்றே தோன்றுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனிமைப் படுத்தப்பட்டு, எதிர்மறை அழுத்தம்(Negative pressure Isolation Room) உள்ள அறைகளில் தங்க வேண்டும். குறிப்பாக தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளவர்கள் மற்றும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டவர்கள் அனைவரும் எதிர்மறை அழுத்தம்(Negative pressure Isolation Room) உள்ள அறைகளில் இருந்தால்தான் நோய் பரவல் குறையும். அப்படிப்பட்ட வசதி எந்த அரசு மருத்துவமனைகளிலும் தற்போது இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து அந்த நோய் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. ஸ்பெயின் நாட்டில் இதுதான் நடந்தது.

அங்கு கரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர்களில் 15% மருத்துவப் பணியாளர்கள். நம் நாட்டில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் 30 முதல் 40% மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே உயர் சிகிச்சை தேவைப்படும் அனைத்து கரோனா நோயாளிகளையும் எவ்வித தாமதமும் இன்றி அனைத்து வசதிகளையும்(ECMO உட்பட) கொண்டுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு உடனடியாக மாற்ற வேண்டும். 

அவர்களுக்கு 24 மணிநேர தீவிர சிகிச்சைப் பிரிவு வல்லுனர்களின் கண்காணிப்பில் முறையான சிகிச்சை அளித்திட வேண்டும். தனியார் மருத்துவமனையின் செலவை அரசே ஏற்க வேண்டும். மேலும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 50% படுக்கைகள் கரோனா நோயாளிகளுக்கென்று ஒதுக்கப்பட வேண்டும். மூன்று மாவட்டங்களை இணைத்து ஒரு பிரத்தியேக கொரோனா பல்நோக்கு மருத்துவமனை செயல்படுத்தப்பட வேண்டும். அவை குறைந்தது 200 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையாக இருத்தல் வேண்டும்.

அனைத்து தாலுக்கா மற்றும் மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் 50 % உடனடியாக உயர்த்தப்பட வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளை 100% உயர்த்தப்பட வேண்டும் (ஓரிரு வாரத்தில் இதுவும் போதாது என்ற நிலைமை வரக்கூடும்).

மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் அனைவரையும் சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த புறநோயாளிகள் பிரிவில் பணியமர்த்த வேண்டும். இது எம்.டி பொது மருத்துவர்களின் வேலைப்பளுவை குறைக்கும்.

அதே சமயத்தில் பச்சிளம் குழந்தைகள், இருதய நோயாளிகள், சிறுநீரக மாற்று நோயாளிகள், புற்றுநோய் உள்ளவர்களுக்கு உள் நோயாளி சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குமான போக்குவரத்து ஏற்பாடுகளை ஊரடங்கு நேரத்தில், தமிழக அரசு ஏற்க வேண்டும்.

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 3000 குழந்தைகள் பிறக்கின்றன. 21 நாட்கள் ஊரடங்கும் போது சராசரியாக 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்திருப்பார்கள். தாய், சேய் நலத்தைப் பேணிக்காக்கும் அனைத்து ஏற்பாடுகளும் தடையின்றி நடைபெற தமிழக அரசு ஆவணம் செய்ய வேண்டும். கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை தனியாக பிரித்து சுத்தம் செய்ய வேண்டும். கரோனா நோயாளிகள் பயன் படுத்திய உணவு கழிவுகள், மருத்துவ கழிவுகளை தனியாகப் பிரித்து அப்புறப்படுத்த தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட வேண்டும்.

கரோனா தீவிர சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 8 மணிநேர சுழற்சியில் வேலை செய்ய அனுமதிக்க வேண்டும். தற்போது மருத்துவர்கள் 24 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்கின்றனர். 24 மணிநேர தொடர் வேலைகளில் ஈடுபடும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவர்களுக்கு நோய் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. 

நோயாளிகளிடம் இருந்து மருத்துவர்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான உபகரணங்கள் தங்கு தடையின்றி வழங்கப்பட வேண்டும். தலைக்கவசம், முகக் கவசம் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (Personal protective equipment-PPE) அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு தேவையான ABG ( Arterial Blood Gas analysis- ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்கும்) கருவிகள் அனைத்து தாலுக்கா மற்றும் மாவட்ட தலைநகர் மருத்துவமனைகளில் வழங்கப்படவேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ECMO கருவிகள் பொருத்தப்பட வேண்டும். இவை இரண்டு கருவிகள் இல்லாமல் தீவிர சிகிச்சை பிரிவு 100% சாத்தியமில்லை. 

சீனாவின் யூகான் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருடன் தமிழக மருத்துவர்களை காணொளி(#WEBINAR) மூலம் தொடர்புகொண்டு சிகிச்சைகள் குறித்து ஆலோசனைகள் பெற வேண்டும். நமக்கான நேரம் மிகக்குறைவு என்பதால் அரசு உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும். 

சீன மருத்துவர்களின் அனுபவத்திலிருந்து நம் மருத்துவர்கள் பாடம் கற்க முடியும். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகள் இறக்கும்போது, நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்குவது தொடர்கதையாக உள்ளது. கரோனா நேரத்தில் அவ்வித அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் அரசு மருத்துவர்களை பாதுகாக்க வேண்டும்.

கரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரின் பெயரிலும் அரசாங்கம் 2 கோடி முதல் 5 கோடி வரை மருத்துவ காப்பீடு (#MEDICAL_INSURANCE)வழங்க வேண்டும். அரசாங்கத்திற்கு ஆலோசனை கூற முன்வரும் மருத்துவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதை அரசு கைவிட வேண்டும். பழிவாங்கும் நடவடிக்கைகளால் பணிமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்கள் மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்தப்பட வேண்டும். இது மருத்துவர்களின் உளவியலை வலுப்படுத்தும். ஆரோக்கியமான சூழலுக்கு வழிவகுக்கும். 

இறுதியாக, கரோனா நோய் தமிழ்நாட்டில் தீவிரமடைய இன்னும் மூன்று நான்கு நாட்கள் அவகாசம் உள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசாங்கம், எம்.பி தொகுதிக்கான ஓராண்டு மேம்பாட்டு நிதியை 5 கோடியில் இருந்து 15 கோடியாக உயர்த்திட வேண்டும். 

அந்த தொகை முழுவதும் மருத்துவமனைகளுக்கு வேண்டிய உபகரணங்கள் வாங்க உடனடியாக செலவிடப்பட வேண்டும். (2014-2019 ஆண்டில் மட்டும் செலவிடப்படாத எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய். 1734 கோடி ரூபாய் இந்தியா முழுவதும் திருப்பி அனுப்பப்பட்டது) துறைசார் மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற தமிழக அரசு இனியும் தயக்கம் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

“நடப்பாண்டும் தமிழ் கட்டாயப் பாடம் இல்லை; அரசின் அலட்சியமே காரணம்” - ராமதாஸ் கண்டனம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Ramadas has condemned the negligence of the Tamil Nadu government as the reason

“உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26ஆம் நாள் தொடங்கவிருக்கும் நிலையில்,  நடப்பாண்டிலும் தமிழ் கட்டாயப்பாடம் இல்லை; மொழிச்சிறுபான்மையினர் நடப்பாண்டில் அவர்களின் தாய்மொழிப் பாடத்தில் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், இன்னும் அந்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணமாகும்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இது தொடர்பாக பிறப்பித்திருக்கும் அரசாணையில், ‘‘சில  மொழிச்சிறுபான்மை பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படாததால், நடப்பாண்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தமிழ் மொழிப் பாடத் தேர்வை எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது; மொழி சிறுபான்மையினர் பள்ளிகளில் உள்ள அனைத்து தமிழாசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் நிலையில் சிறுபான்மை மொழி பயிலும் மாணவர்களுக்கு 2025&இ-ல் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழி பாடத்தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு கோரமாட்டோம் என்று அந்தப்பள்ளிகள் உறுதி அளித்துள்ளன’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ் மொழியை ஒரு பாடமாக படிக்காமல் பட்டப்படிப்பைக் கூட நிறைவு செய்ய முடியும் என்ற நிலை நிலவுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவே, பா.ம.க. கொடுத்த அழுத்தத்தின் பயனாக மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் தமிழை கட்டாயப் பாடமாக்கும் சட்டம் 09.06.2006-ஆம் நாள் சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

2006 ஆ-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஓவ்வொரு வகுப்புக்கு நீட்டிக்கப் பட்டு பத்தாவது ஆண்டில் தான் பத்தாம் வகுப்புக்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு வகுப்புக்கு தமிழ்ப் பாடம் நீட்டிக்கப்படும் போது அந்த வகுப்பில் தமிழ் கற்பிக்கப்பட்டதற்கான சான்றிதழை பள்ளிகளின் நிர்வாகங்கள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அது கட்டாயமாகும்.

அதன்படி முந்தைய 9 ஆண்டுகளும் தங்களது பள்ளி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தைக் கற்றுக் கொடுத்ததாக அரசிடம் சான்றிதழ் வழங்கிய தனியார் பள்ளிகள், பத்தாவது ஆண்டில் மட்டும் சரியான கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் குழந்தைகளுக்கு தமிழ்ப் பாடத்தை கற்பிக்க முடியவில்லை என்று கூறி விலக்கு கோரின. முந்தைய 9 ஆண்டுகளில் தமிழைக் கற்பிக்க ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டமைப்புகள் பத்தாம் ஆண்டில் மட்டும் மாயமானது எப்படி? என்ற வினாவை அரசு எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அந்த வினாவை தமிழக அரசு எழுப்பத் தவறிவிட்டது.

இப்போதும் கூட தமிழ் கட்டாயப் பாட சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் தமிழாசிரியர்களை நியமிக்காதது ஏன்? என்று அந்த பள்ளி நிர்வாகங்களிடம் தமிழக அரசு வினா எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், எந்த வினாவும் எழுப்பாமல், தமிழ் பாடத் தேர்வை எழுதுவதிலிருந்து மேலும் ஓராண்டுக்கு தமிழக அரசு விலக்கு அளித்திருக்கிறது. தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதில் அரசு காட்டும் ஆர்வம் இவ்வளவு தான்.

இன்னொரு பக்கம் தமிழ் கட்டாயப்பாடம் தொடர்பாக சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக 2015-&16ம் ஆண்டில் மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  8 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 முதல் செயல்படுத்த ஆணையிட்டது. ஆனாலும், அதை மதிக்காத பள்ளிகள் உச்சநீதிமன்றத்திற்கு சென்றன. கடைசி நேரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததால் கடந்த ஆண்டு மட்டும் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்த உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலையில் நீதிமன்றம் திறக்கப்பட்ட பின்னர் இவ்வழக்கை விசாரித்து தீர்ப்பளிப்பதாக அறிவித்தது.

ஆனால், ஜூலை மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் கடந்த திசம்பர் மாதம் ஓய்வு பெற்றும் சென்று விட்டார். அதன் விளைவு தான் நடப்பாண்டிலும் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி இந்த வழக்கு  எப்போது விசாரணைக்கு வரும்? தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டம் எப்போது முதல் நடைமுறைக்கு வரும்? என்பதும் தெரியவில்லை. அன்னைத் தமிழ் அரியணை ஏற இன்னும் எவ்வளவு ஆண்டுகள் ஆகுமோ?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டில் தமிழ்க் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வருவதற்கு விடுதலைக்குப் பிறகு 60 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்தச் சட்டம் இயற்றப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது உண்மையாகவே தமிழர்கள் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும். இந்த அவலநிலை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். எனவே, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, அடுத்த ஆண்டு முதல் தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.