Skip to main content

பாழாப்போன கரோனா... செத்துப் பிழைச்சி வந்தும் மனதளவுல மீண்டும் கொல்லுறாங்க! -குணமடைந்தவர்களின் குமுறல்!

 

கரோனாவிடம் இருந்து தப்பிக்க சமூக விலகலைக் கடைபிடிக்கச் சொல்கிறது அரசு. ஆனால், ஒருவர் கரோனாவோடு தொடர்பில் இருந்தாலே போதும். அவரது ரிசல்ட் பாசிட்டிவோ, நெகட்டிவோ… சமூகம் அவரை சுத்தமாக விலக்கி வைக்கும் கொடுமை நடக்கிறது.

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கிட்டத்தட்ட அரை லட்சம் பேர் அளவுக்கு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 255 பேர் பாதிக்கப்பட்டு, அவர்களில் 118 பேர் குணமடைந்துள்ளனர். இதுபோக, ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனா நெகட்டிவ் என அறிவிக்கப்பட்டும், இவர்களில் கணிசமானோரின் நிலைமை வேதனைக்குரியதாக இருப்பதையே, கள நிலவரம் காட்டுகிறது.

 

தேங்காய்ப்பட்டணத்தைச் சேர்ந்த அந்த 47 வயதுடையவர்தான், குமரி மாவட்டத்திலேயே கரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்த முதல் ஆள். அப்படி வீடுதிரும்பி 45 நாட்கள் ஆகியும், ஊர்க்காரர்கள் அவரை இன்னமும் கரோனா நோயாளியாகவே நடத்துகிறார்கள். வீட்டுக்குள் அவருக்கென தனி அறை. வெளியில் வரவே கூடாது போன்ற கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தும்கூட, அவரது குடும்பத்தினர் அத்தியாவசியத் தேவைக்காக வெளியில் சென்றால்கூட, யாரும் ஏறிட்டு பார்ப்பதில்லை. மொத்த குடும்பத்தையும் தனிமைப்படுத்தியே வைத்திருக்கிறார்கள்.

 

நாகர்கோவிலைச் சேர்ந்த அந்த இளம் பெண்ணுக்கு, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தான் வேலை. சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சொந்தஊர் திரும்பியபோது சோதனையில் அவருக்குக் கரோனா பாசிட்டிவ்வாக இருந்தது. ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் 15 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமாகி, மருத்துவப் பணியாளர்கள் உற்சாகமாகக் கைத்தட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால், அவரது குடும்பத்தினரோ ஒட்டு மொத்தமாக வெளியேறி இன்னொரு வீட்டில் தஞ்சமடைந்தனர். அந்தப் பெண் தங்கியிருக்கும் வீட்டுப்பக்கம் யாரும் போவதில்லை. சாப்பாட்டை ஜன்னல் வழியே தள்ளி விடு கிறார்கள். தனது இரண்டு குழந்தைகளைக்கூட 10 மீட்டர் இடைவெளியில் வைத்தே பார்த்து ஆறுதல் அடைகிறார்.

 

வெளிநாட்டிலிருந்து கணவர் வர முடியாததால், தனியாக நாடு திரும்பினார் இரண்டு மாத கர்ப்பிணிப் பெண். திருவனந்தபுரம் விமானநிலையத்தில் நடந்த சோதனையில் நெகட்டிவ் என்று வந்தபோதும், அங்கேயே தங்க வைக்கப்பட்டார். கட்டுப்படுத்த முடியாத வாந்தி, மனச்சோர்வு ஏற்பட்டதால் கர்ப்பிணி என்பதைக் கருத்தில் கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்தது கேரள அரசு. வரும் வழியில் களியக்காவிளை செக்போஸ்ட்டில் தடுத்து நிறுத்திய அதிகாரிகள், நெகட்டிவ் ரிசல்ட்டைக் காட்டியும் அனுமதிக்க மறுத்தனர். ஒருகட்டத்தில் மனமிறங்கியவர்கள், 108 ஆம்புலன்சில் ஏற்றி வீட்டில் விடுகிறோம் என்று அடம்பிடித்து அதை நிறைவேற்றியும் விட்டார்கள். விளைவு, ஊர்க்காரர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு இன்றுவரை மன உளைச்சலில் இருக்கிறார் அந்தப்பெண்.

 

இவர்களைப் போல, சமூகம் ஒதுக்குவதால் மனவேதனையில் வாடுபவர்களின் மனக்குமுறல் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களில் நம்மிடம் பேசிய சிலர், "பெத்த பிள்ளையை ஒதுக்காத தாய்கூட, இன்னைக்கி ஒதுங்கித்தான் நிற்கிறாங்க. அந்தளவுக்கு பலரை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியிருக்கு இந்தப் பாழாப்போன கரோனா. இந்த நிலைமைக்கு அதிகாரிகளின் நடவடிக்கையும் முக்கியக் காரணம். ஏனென்றால், சோதனையில் நெகட்டிவாக வந்தாலும், குணமடைந்து வந்தாலும் எங்களை அழைத்து யாரிடமும் பேசாதீங்க, வெளியே போகாதீங்கன்னு ஊரைக்கூட்டி சொல்லி மீண்டும் கரோனா நோயாளியாக்கி விட்டுறாங்க. இதுபோக எங்களைக்காட்டி ஊர்க்காரங்களை மிரட்டினா, யார்தான் எங்களை மனுசனா மதிப்பாங்க. செத்துப் பிழைச்சி வந்தும் மனதளவுல மீண்டும் கொல்லுறாங்க'' என்கிறார்கள் கண்ணீரோடு.

 

இதுகுறித்து குமரி மாவட்ட த.மு.மு.க. தலைவர் ஜிஸ்தி முகம்மது நம்மிடம், "கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோ, பரிசோதனைக்குச் சென்று நெகட்டிவாக வந்தோ வீடு திரும்புகிறவர்களுக்கு நம்பிக்கையூட்டுவது போலவே, அவர்களது குடும்பத்தினருக்கும், ஊர்க்காரர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க அரசு முன்வரவேண்டும். மேலும், கரோனா பரிசோதனைக்காக ஒருவரை 108 ஆம்புலன்சில் கூட்டிச் செல்லும்போதுகூட, ஊர்க்காரர்களை பயமுறுத்தும் விதமாக பில்டப் கொடுக்கிறார்கள். இதனால், 108 ஆம்புலன்சைப் பார்த்தாலே ஒருவித பயம் இயல்பாகவே ஏற்பட்டுவிடுகிறது. இந்த மனநிலையை மாற்றும் விதமாக அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும்'' என்று வலியுறுத்துகிறார்.

 

http://onelink.to/nknapp

 

சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்வோர், மருத்துவமனைகளில் பணியாற்றுவோர், ஊரடங்கு பணியில் நேரம் காலம் பார்க்காமல் கடமை செய்யும் காவல்துறையினர், நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோரையும் சமுதாயம் அச்சத்துடனேயே பார்க்கிறது. ஒதுக்கி வைக்கிறது. சமூக விலகல் என்ற சொல், சமூகக் கொடுமையாக மாறிக் கொண்டிருக்கிறது.

 

கரோனாவை விரட்ட, அதன் பாதிப்புகளின் இருந்து தப்பிக்க மக்களின் ஒத்துழைப்பை அரசு எதிர்பார்ப்பது நியாயம்தான். அதேசமயம், அதிகாரிகளின் அணுகுமுறையும் மக்களோடு ஒத்துப்போகும் விதமாக இருந்தால் மட்டுமே, கரோனாவைக் கூட்டு முயற்சியோடு வெல்ல முடியும்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்