ADVERTISEMENT

கரோனா அரசியல்! பிரதமர் மோடிக்கு கம்யூனிஸ்ட் எம்.பி.வைக்கும் நியாயமான நான்கு கேள்விகள்!

05:12 PM Mar 26, 2020 | Anonymous (not verified)

உலகில் வாழும் உயிரினங்களிலேயே மனித இனம் மகத்துவம் வாய்ந்தது. ஆறறிவு என்கிற சிந்தனையாற்றல் இந்த மனித குலத்துக்கு தான் இருக்கிறது. இயற்கையை ஊடுருவி கண்டுபிடித்து எல்லாவற்றையும் வெல்லும் சாத்தியமும் மனிதனின் உழைப்புக்கும் சிந்தனைக்குமே உண்டு. விஞ்ஞான அறிவுக்கும் அதனால் விளையும் அற்புதமான கண்டுபிடிப்புகளுக்கும் முடிவே இல்லை. மருத்துவத்தில் முழுமையான முன்னேற்றம் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT




அப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த இந்த மனித சமூகத்திற்கு சவால் விடும் வகையில் உயிர்கொல்லி அரக்கனாக இப்போது வந்துள்ளதுதான் கரோனா வைரஸ். கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ் இன்று உலக இயகத்தையே நிறுத்தி வைத்துவிட்டது. உலகில் இரண்டாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட நமது இந்தியா முழுக்க மக்களிடம் உயிர் வாழும் அச்சத்தை கடுமையாக ஏற்படுத்தியுள்ளது. ராணுவம், தொழிழ்நுட்டம், விவசாயம்,உற்பத்தி, மனித உழைப்பு,மருத்துவம் என எல்லாவற்றிலும் நாம் முன்னேறி வருகிறோம். இந்தியா 2020 ல் வல்லரசாக மாறும் என சில வருடங்களுக்கு முன்பு அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள் பெருமிதத்துடன் கூறி மார்தட்டிக் கொண்டார்கள்.

ஆனால் இப்போது அதே 2020 தான். அதுவும் தொடக்க காலம் தான் நிலமை என்ன? ஒவ்வொரு இந்தியர்களின் உயிர் முக்கியம். ஆகவே யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என இந்திய அரசு அறிவித்து. 130 கோடி மக்களும் இப்போது அவரவர் வாழும் பகுதியில் அது குடிசை வீடாக இருந்தாலும் முடக்கப்பட்டனர். இதற்கு காரணம் கொடூர வைரஸான கரோனாதான். அதுவே உண்மையும் கூட ஆனால் எல்லா கட்டமைப்பும் கொண்ட ஒரு நாடு தனது தோல்வியால் தான் அல்லது பொறுப்பற்ற செயலால் தான் இதை செய்திருக்கிறது என்கிற ஆய்வு குரலும் இப்போது வெளிப்படுகிறது.



அதற்கு ஒரு உதாரணமாக அரசு அதிகாரிகளே நம்மிடம் கூறியது இதுதான், கரோனா வைரஸ் தொற்று சென்ற டிசம்பர் மாதத்திலேயே சீனா நாட்டில் உள்ள வூஹான் நகரத்தில் தெரிய வந்தது. அதன் பிறகே அந்நாட்டில் பல பகுதிகளில் பரவியது. அடுத்து வெவ்வேறு நாடுகளுக்கும் இந்த வைரஸ் படையெடுத்து பயணிக்க தொடங்கியது. இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலமே இந்த வைரஸ் தொற்று பரவுகிறது என்பதை இந்தியா வெளிப்படையாகவே அறிவித்த நிலையில், வெளி நாட்டைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஜனவரி மாதத்திலிருந்து இந்தியா வந்தனர். அப்படியொரு குழுவினர் தான் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். கரோனா வைரஸ் அரக்கத்தனமாக இந்தியாவில் கால் பரப்பிய இந்த மார்ச் மாத முதல் வாரத்தில் அவர்கள் இந்தியாவின் தலைநகரான டெல்லிக்கு வந்திருக்கிறார்கள்.

அவர்கள் முறையான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்களா என்பது தெரியாது. அதில் 7 பேர் கொண்ட குழுவினர் மார்ச் 11 அன்று ஈரோடு வந்து கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய மசூதிகளில் வந்து தங்கி தொழுகை மற்றும் பாடம் நடத்தியுள்ளன். இவர்களைப் போலவே மதுரைக்கும் ஒரு குழு சென்று தங்கியது. இப்படி ஈரோட்டில் தங்க வைக்கப்பட்ட தாய்லாந்து நபர்களில் இரண்டு பேர் சொந்த நாடு திரும்ப கோவை விமான நிலையத்திற்கு சென்ற போது அங்கு அவர்களை பரிசோதனை செய்தபோது தான் காய்சல் இருப்பது தெரிய வந்தது.



அதில் ஒருவர் கோவை அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார். அவருக்கு சிறுநீரக பிரச்சனை என காரணம் கூறப்பட்டது. மற்றொருவர் மீதி ஈரோட்டில் தங்கியிருந்த ஐவர் என 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இவர்களோடு பழகிய நபர்களின் குடும்பம் என தற்போது 200 குடும்பங்கள் சுமார் 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆக இந்த நபர்களை டெல்லி விமான நிலையத்தில் முறைப்படி முறையான பரிசோதனை செய்யாமல் விட்டதின் விளைவுதான் இதற்கெல்லாம் காரணம் என்பது தெரிகிறதல்லவா..? என்றனர்.

"இந்திய அரசாங்கத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையே இன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் கடும் சித்ரவதையை கொடுத்துள்ளது" என விரிவாக நம்மிடம் பேசத் தொடங்கினார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு துணை செயலாளரும் திருப்பூர் தொகுதி எம்.பி.யுமான திருப்பூர் கே.சுப்பராயன் "டிசம்பர் மாதத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தொற்று பற்றி ஜனவரி மாதமே ஐ.நா-வுக்கு நிகரான உலக சுகாதார அமைப்பு (WHO) இந்தியாவை எச்சரித்தது. பிப்ரவரி முதல் வாரத்தில் இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டதால் அதற்கு முதல் தேவையே வென்டிலேட்டர் மற்றும் மாஸ்க்கும்தான். ஆகவே இந்தப் பொருட்களை பல மடங்கு ஸ்டோர் செய்து, ஸ்டாக் வைத்துக் கொள்ளுங்கள் என இந்தியாவுக்கு அறிக்கை அனுப்பியது உலக சுகாதார அமைப்பு. ஆனால் கொடுமை என்னவென்றால் இந்த மாதம் மார்ச் 19 வரை வென்டிலேட்டர்கள், மாஸ்க்குகளை இந்திய அரசாங்கம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டே இருந்தது.



19ந் தேதிக்கு பிறகு தான் ஏற்றுமதி செய்யவில்லை. இது மட்டுமல்ல இந்திய அரசாங்கத்திற்கென்று ஒரு தூதரகம் சீனாவில் இருக்கிறதல்லவா, தூதராக ஒரு உயரதிகாரியும் இருக்கிறாரே என்ன செய்தது இந்த தூதரகம்? டிசம்பர் மாத மத்தியில் கரோனா வைரஸ் அங்கு கடுமையாக பரவியது. இது ஒரு தொற்றுநோய், மிகவும் கடினமானது கூட என்றும் சீன அரசு அப்போதே கூறியதே.. சீனாவில் உள்ள இந்திய தூதரகம் என்ன அறிக்கையை இந்தியாவுக்கு கொடுத்தது? அதன் பேரில் என்ன நடவடிக்கை இந்த அரசு எடுத்தது? அதே போல சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டுக்கும் நுண்ணரிவுப் பிரிவாக உளவுப் பிரிவு இருக்கிறது. இதில் இந்திய உளவுப் பிரிவு என்ன செய்தது? இது ஒரு அபாயகரமான மருத்துவப் போராட்டம் என்பதை ஏன் உணர்த்தவில்லை? அல்லது இதை தெரிந்தும் உணராமல் இந்த அரசு அலட்சியப்படுத்தியதா? நான்காவதாக ஒரு கேள்வி ஜனவரி மாதமே உலகைபேச வைத்துவிட்டது.

இந்த கரோனா வைரஸ் இது ஒரு தொற்றுநோய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியது குறிப்பாக தொடுதல் காரணமே பரவுகிறது. மேலும் இது வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மூலமே வருகிறது என்பதே நூறு சதவீதம் உண்மையாக அறியப்பட்டது. இந்த அரசுக்கு இது நன்றாகவே தெரியும் அப்படியிருக்கும் போது ஏன் ஜனவரி மாதம் முதலே இந்திய விமான நிலையங்களை அரசின் நேரடி கண்கானிப்பில் எடுத்து வருகிற பயணிகள் அனைவரையும் பொது சுகாதார துறை வசம் ஒப்படைத்து முழுமையான பரிசோதனை மட்டுமல்ல, இப்போது சொல்கிறார்களே காய்சல் வந்தாலும் அது கரோனா வைரஸா என்பதை கண்டுபிடிக்க 14 நாட்கள் ஆகும் என்று. அப்படியென்றால் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு காய்சல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 14 நாட்கள் ஒவ்வொரு விமான நிலைய பகுதிகளிலும் தனிமை படுத்தி வைத்திருக்கலாமே.. ஏன் செய்யவில்லை.? வைரஸ் தாக்கம் கடுமையாகிவிட்ட மார்ச் மாதத்தில் கூட இங்கு வந்த வெளிநாட்டு பயணிகளை முறையாக பரிசோதனையே செய்யவில்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. ஆக குதிரையை ஒட விட்டு லாடம் கட்டுகிறேன் என்பது போலத்தான் இருக்கிறது.

இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு வளர்ச்சி பெறவில்லை. சீனாவில் பொதுமக்கள் கணக்கீட்டில் 10 ஆயிரம் பேருக்கு 23 டாக்டர்கள் 18 செவிலியர்கள் உண்டு, இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு 3 டாக்டர்கள் ஒரு செவிலியர் என்ற நிலை தான். குறிப்பாக இவர்கள் ஆளும் மாநிலமான பீகாரில் 10 ஆயிரம் மக்களுக்கு ஒரே ஒரு டாக்டர் தான் என்கிறது புள்ளி விபரம். இப்படிப்பட்ட நாட்டில் மக்கள் நலன் மீது உண்மையில் ஆளும் அரசுக்கு அக்கறையிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? வருமுன் காத்திருக்க வேண்டும். வந்த பின் மக்களுக்கு இப்போது போல் துன்பத்தை கொடுக்க கூடாது. இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவம் கொண்ட ஜனநாயக நாடு நமது அரசியலைப்பு சட்டம் பாராளுமன்ற ஜனநாயகப்படி உள்ளது.

ஆனால் இங்கு எல்லாமே மோடி... மோடி... என்ற தனிநபர் சுய விளம்பரம் தான். பிரதமர் மோடி ஜனநாயகத்தை மதித்து நடந்திருந்தால் என்ன செய்ய வேண்டும் எதிர்கட்சிகளின் ஆலோசனையை கேட்டிருக்க வேண்டும் சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தி முடிவு எடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் பல கருத்துக்கள் வரும் இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்கான நலன் அதில் இருந்திருக்கும் எதையும் செய்யவில்லை பிரதமர் மோடி. எல்லாவற்றையும் ஒரு சர்வாதிகாரி போல அவரே அறிவிக்கிறார். இந்தியாவில் ஏறக்குறைய இரண்டு கோடி பேர்தான் பொருட்களை வாங்கும் சக்தி கொண்டவருமானம் கொண்டவர்கள் மீதி 80 சதவீதம் பேர் ஏறக்குறைய 100 கோடி மக்கள் நடுத்தர குடும்பத்தினர், அன்றாட உழைப்பினால் வரும் வருவாயில் வாழ்பவர்கள், கூரை வீடுகள் கூட இல்லாதவர்கள், ப்ளாட்பார வாசிகள், பிச்சைகாரர்கள், கோயில்களில் வழங்கப்படும் உணவை சாப்பிடுபவர்கள், தொழிலாளர்கள், மலைவாசி மக்கள் என அன்றாட வருவாய் இருந்தும் இல்லாததுமான அப்பாவி ஏழைகள். இவர்களைப் பற்றி மனித சமூகத்தை மதிக்காத இந்த அரசுக்கு துளியும் அக்கறையில்லை. எல்லாவற்றையும் திறந்துவிட்டு விட்டு இப்போது ஒவ்வொரு இந்தியரும் அவர்களின் உயிரும் முக்கியம் என கூறி வீட்டிலேயே தனிமையில் இருக்க சொல்லிவிட்டார்.

மருத்துவ ரீதியாக தனித்து இருந்தால் தான் இந்த வைரஸ் நோய் தொற்று ஏற்படாது என்பது எவ்வளவு உண்மையோ அது போலமோடி அரசின் அற்பத்தனமான பொறுப்பற்ற செயலே இந்திய மக்களுக்கு இப்படியொரு இன்னலை கொடுத்துள்ளது. பொறுப்புள்ளவரின் கடமை இதுதானா? அல்லது இதையும் அவர்கள் தங்களுக்கான சுய அரசியலாக மாற்றி விட்டார்களோ... இது மக்களுக்கும், நாட்டின் ஜனநாயக தன்மைக்கும் மிகவும் ஆபத்தானது" என வேதனையுடன் கூறினார்.

எம்.பி. சுப்பராயன் கூறுவது போல உலக சுகாதார அமைப்பான WH0 கொடுத்த எச்சரிக்கை அறிவிப்பின் மேல் ஏன் நடவடிக்கை இல்லை. இந்திய தூதரகம், உளவுத் துறை, என்ன செய்தது? ஜனவரி மாதத்திற்கு பிறகு வெளிநாட்டவர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களை விமான நிலையத்தில் வைத்து காய்சல் இருக்கிறதா என்பதை கண்டறியும் வெறும் தெர்மல் ஸ்கேன் மட்டுமல்ல எல்லோரையும் 14 நாட்கள் தனிமை படுத்தி மருத்துவ சிகிச்சை செய்திருந்தால்.... இப்போது உயிர் பயத்தில் 130 கோடி பேரும் தனிமையில் இருக்க தேவையில்லையே....?

இந்திய சமூகமும் மக்களும் சிந்திக்க வேண்டிய ஒன்று தான் இது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT