Skip to main content

ஊரடங்கு: ட்ரோன் காமிரா மூலம் கண்காணிப்பு... நேரில் ஆய்வு செய்த ஏ.கே.விஸ்வநாதன் (படங்கள்)

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

corona virus issue - chennai police commissioner a. k. Viswanathan - drone camera -

 

அத்தியாவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே நடமாடுபவர்களை ட்ரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்க உள்ளோம். முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை பெருநகரில் 288 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. அந்த இடங்களில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற உள்ளது. அனைத்துக் காவல் நிலையபகுதிகளிலும் வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தி தேவையில்லாமல் சுற்றி வருபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வாகனங்களைக் கைப்பற்றி அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னையில் 12 நாள் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக நேற்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்திருந்தார். 

 

அரசு அறிவித்தப்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ட்ரோன் காமிராக்கள் மூலம் கண்காணிக்கும் பணியும் நடந்தது.

 

இன்று காலை சென்னை வாலாஜா சாலையில் வாகன சோதனையைக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வாகனங்களின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் கண்காணித்தார்.
 

corona virus issue - chennai police commissioner a. k. Viswanathan - drone camera -

 

பின்னர் செய்தியளாளர்களைச் சந்தித்த ஏ.கே.விஸ்வநாதன், சென்னையில் 12 நாட்கள் ஊரடங்கு கடுமையாகப் பின்பற்றப்படும். வெளியில் வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது. மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். நோய்த்தொற்று பரவும் சூழல் இருந்தால் கடைகள் மூடப்படும். வணிக நிறுவனங்களில் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

 

 

Next Story

ட்ரோன்கள் கண்காணிப்பில் வெள்ளியங்கிரி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Drones are the key to surveillance

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் காட்டுத்தீ ஏற்படும் சூழ்நிலைகளும் உருவாகியுள்ளது. பக்தர்கள் மலையேறுவதற்கான பாதையைத் தவிர்த்து வேறு பாதையைப் பயன்படுத்திவிடாமல் இருக்க கண்காணிக்கப்படுவதாற்காக ட்ரோன்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாரை சாரையாக மலையேற தொடங்கி வரும் நிலையில் சுழற்சி முறையில் தற்போது ட்ரோன்கள் மூலம் பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.