ADVERTISEMENT

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு... கலக்கத்தில் காவல்துறை!

07:05 PM Jun 20, 2020 | rajavel

ADVERTISEMENT

சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், களப் பணியாற்றும் போலீஸாரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகுவது, அவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை காவலர் முதல் அதிகாரிகள் வரை சுமார் 900 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் பலர் தொற்றில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பினாலும், இன்னும் பலர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT


இதனால், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் டூட்டி ரோஸ்டர் எனப்படும் காவலர் பணி விபர பட்டியலில் 5 முதல் 10 காவலர்கள் கோவிட்-19 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர சென்னை மற்றும் 4 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கால் 288 இடங்களில் போலீஸார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இருப்பினும் இன்னமும் தெருக்களில் அவசியமின்றி மக்கள் நடமாடுவதும், வாகனத்தில் சுற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது.


இதுதொடர்பாக நமது நெருங்கிய காக்கி நண்பரிடம் பேசினோம். “எல்லோரும் சொல்லி வைத்தார் போல், மருத்துவமனைக்கு செல்கிறேன் என்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ நேற்று எனக்கு கோவிட்-19 டெஸ்ட் எடுத்தார்கள். இன்றைக்கு பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்காம். அதனால் ஆஸ்பத்திரியில கூப்பிட்டு சொன்னார்கள். அங்க தான் போய்கிட்டு இருக்கேன் என்கிறார்கள். அப்படி சொல்கிறவங்ககிட்ட பக்கத்துல போறதுக்கே பயமாக இருக்கு.


என்னோட பாயிண்ட்ல டியூட்டி பார்க்கிற ஏட்டையா நேற்று ஆஸ்பிடல் டெஸ்ட் எடுத்திருக்கிறார். அவருக்கு பாஸிட்டிவ்னு இன்றைக்கு கூப்பிட்டு சென்னதால ரிப்போர்ட்ட வாங்கி ஸ்டேசன்ல காட்டி லீவ்ல போயிருக்கார். ஏன்னா நிலைமை அப்படி இருக்கு.


நாங்க மாஸ்க் போட்டு தான் வேலை பார்க்கிறோம். இருந்தாலும் எப்ப வேண்டுமானாலும் நோய் பரவும்ங்கிற சூழலில் பணியாற்றி கொண்டு இருக்கிறோம்.


எங்க ஜே.சி மேடம் (தெற்கு மண்டலம்) காரிலேயே ரவுண்ட்ஸ் வருவாங்க. ‘திடீர்னு மைக்ல கூப்பிட்டு அந்த செக்டார்ல ஜன நடமாட்டம் அதிகமாக இருக்கு. அங்க அந்த ஓட்டல்கிட்ட அதிக மக்கள் கூட்டமா நிற்கிறாங்க...பேட்ரோல் பார்ட்டி ஏரியாவை கவர் பண்ணுங்கன்னு’ ஆர்டர் போடுவார். அவருக்கே கரோனா வந்திருச்சு. அப்படீன்னா களத்தில் நின்று பணியாற்றுகிற எங்களையெல்லாம் கரோனாவுக்கு பிடிக்கமா போய்விடுமா என்ன?” என்று நம்மிடமே கேள்வியை முன்வைத்தார்.


மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றதால தான் ஜே.சிக்கு கரோனா வந்திருச்சாமே? அது உண்மையா? என்று மற்றொரு போலீஸ்காரரிடம் கேள்வியை முன்வைத்தோம்.


“அப்படி பொத்தாம் பொதுவா சொல்ல முடியாது. அன்றைய தினம் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஜே.சி.மேடம் மட்டுமல்ல, வேறு சில டி.சிக்கள், ஏ.சிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவமனையில் இருந்து இன்ஸ்பெக்டர் பாடியை எடுத்து வந்து கண்ணம்மா பேட்டை மயானத்தின் முன்பு வாகனத்தை நிறுத்தி, அவருக்கு போலீஸ் தரப்பில் இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது ஹையர் ஆபிஸர் என்ற அடிப்படையில் ஜே.சி மேடத்திடம் உத்தரவு வாங்கி பாலமுரளிக்கு துப்பாக்கி குண்டு முழங்க பிரியாவிடை அளிக்கப்பட்டது. ஆம்புலன்சு நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரம் தள்ளி தான் ஜே.சி.மேடம் இருந்தாங்க.


ஆஸ்பத்திரியில் இருந்து பாடியை எடுத்து வந்தது தி.நகர் டி.சி அசோக்குமார். அவர் தான் வண்டியில வரும்போதே அழுதுகிட்டே வந்திருக்கிறார். அந்த அளவுக்கு அவருக்கு கீழே பணியாற்றிய இன்ஸ்பெக்டரின் மறைவு அவரை பாதிச்சிருக்கு. அவரும் கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர். எனவே இப்போது இருக்கிற நிலைமையில் எப்ப வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கரோனா பரவலாம்” என்றார்.


ஆகவே மக்களே வீட்டிலேயே இருங்கள்...


வீதியிலே களப்பணியாற்றும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT