Skip to main content

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு... கலக்கத்தில் காவல்துறை!

Published on 20/06/2020 | Edited on 20/06/2020

 

சென்னையில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், களப் பணியாற்றும் போலீஸாரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகுவது, அவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை காவலர் முதல் அதிகாரிகள் வரை சுமார் 900 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் பலர் தொற்றில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பினாலும், இன்னும் பலர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.


இதனால், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் டூட்டி ரோஸ்டர் எனப்படும் காவலர் பணி விபர பட்டியலில் 5 முதல் 10 காவலர்கள் கோவிட்-19 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதுதவிர சென்னை மற்றும் 4 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கால் 288 இடங்களில் போலீஸார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இருப்பினும் இன்னமும் தெருக்களில் அவசியமின்றி மக்கள் நடமாடுவதும், வாகனத்தில் சுற்றுவதும் தொடர்கதையாகி வருகிறது. 


இதுதொடர்பாக நமது நெருங்கிய காக்கி நண்பரிடம் பேசினோம். “எல்லோரும் சொல்லி வைத்தார் போல், மருத்துவமனைக்கு செல்கிறேன் என்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ நேற்று எனக்கு கோவிட்-19 டெஸ்ட் எடுத்தார்கள். இன்றைக்கு பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்திருக்காம். அதனால் ஆஸ்பத்திரியில கூப்பிட்டு சொன்னார்கள். அங்க தான் போய்கிட்டு இருக்கேன் என்கிறார்கள். அப்படி சொல்கிறவங்ககிட்ட பக்கத்துல போறதுக்கே பயமாக இருக்கு. 


என்னோட பாயிண்ட்ல டியூட்டி பார்க்கிற ஏட்டையா நேற்று ஆஸ்பிடல் டெஸ்ட் எடுத்திருக்கிறார். அவருக்கு பாஸிட்டிவ்னு இன்றைக்கு கூப்பிட்டு சென்னதால ரிப்போர்ட்ட வாங்கி ஸ்டேசன்ல காட்டி லீவ்ல போயிருக்கார். ஏன்னா நிலைமை அப்படி இருக்கு. 


நாங்க மாஸ்க் போட்டு தான் வேலை பார்க்கிறோம். இருந்தாலும் எப்ப வேண்டுமானாலும் நோய் பரவும்ங்கிற சூழலில் பணியாற்றி கொண்டு இருக்கிறோம்.


எங்க ஜே.சி மேடம் (தெற்கு மண்டலம்) காரிலேயே ரவுண்ட்ஸ் வருவாங்க. ‘திடீர்னு மைக்ல கூப்பிட்டு அந்த செக்டார்ல ஜன நடமாட்டம் அதிகமாக இருக்கு. அங்க அந்த ஓட்டல்கிட்ட அதிக மக்கள் கூட்டமா நிற்கிறாங்க...பேட்ரோல் பார்ட்டி ஏரியாவை கவர் பண்ணுங்கன்னு’ ஆர்டர் போடுவார். அவருக்கே கரோனா வந்திருச்சு. அப்படீன்னா களத்தில் நின்று பணியாற்றுகிற எங்களையெல்லாம் கரோனாவுக்கு பிடிக்கமா போய்விடுமா என்ன?” என்று நம்மிடமே கேள்வியை முன்வைத்தார்.


மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளியின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றதால தான் ஜே.சிக்கு கரோனா வந்திருச்சாமே? அது உண்மையா? என்று மற்றொரு போலீஸ்காரரிடம் கேள்வியை முன்வைத்தோம்.


“அப்படி பொத்தாம் பொதுவா சொல்ல முடியாது. அன்றைய தினம் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஜே.சி.மேடம் மட்டுமல்ல, வேறு சில டி.சிக்கள்,  ஏ.சிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மருத்துவமனையில் இருந்து இன்ஸ்பெக்டர் பாடியை எடுத்து வந்து கண்ணம்மா பேட்டை மயானத்தின் முன்பு வாகனத்தை நிறுத்தி, அவருக்கு போலீஸ் தரப்பில் இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது ஹையர் ஆபிஸர் என்ற அடிப்படையில் ஜே.சி மேடத்திடம் உத்தரவு வாங்கி பாலமுரளிக்கு துப்பாக்கி குண்டு முழங்க பிரியாவிடை அளிக்கப்பட்டது. ஆம்புலன்சு நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரம் தள்ளி தான் ஜே.சி.மேடம் இருந்தாங்க.


ஆஸ்பத்திரியில் இருந்து பாடியை எடுத்து வந்தது தி.நகர் டி.சி அசோக்குமார். அவர் தான் வண்டியில வரும்போதே அழுதுகிட்டே வந்திருக்கிறார். அந்த அளவுக்கு அவருக்கு கீழே பணியாற்றிய இன்ஸ்பெக்டரின் மறைவு அவரை பாதிச்சிருக்கு. அவரும் கரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தவர். எனவே இப்போது இருக்கிற நிலைமையில் எப்ப வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கரோனா பரவலாம்” என்றார்.


ஆகவே மக்களே வீட்டிலேயே இருங்கள்...


வீதியிலே களப்பணியாற்றும் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்!

 

 

 

Next Story

‘வாகன ஓட்டிகள் கவனத்திற்கு’ - சென்னை டிராபிக் போலீசார் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Attention drivers Chennai traffic police instructions

சென்னை ஈ.வே.ரா சாலையில் டாக்டர் நாயர் மேம்பால கீழ்பகுதியில் (வடக்கு) மேம்பால குறுக்கே (நாயர் பாயின்ட் சந்திப்பு) நெடுஞ்சாலை துறையினர் சாலையை ஆக்கிரமித்து நாளை (13.04.2024) மற்றும் நாளை மறுநாள் (14.04.2024) இரவு 10.00 மணி முதல் பள்ளம் தோண்டி சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் கட்டுமான அலுவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்களிலும் இரவு 10.00 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன்படி ஈ.வே.ரா சாலையில் ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் தாசபிரகாஷ் சந்திப்பிலிருந்து டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக எழும்பூர் நோக்கி செல்ல இயலாது.

அத்தகைய வாகனங்கள் நாயர் பாயின்ட் சந்திப்பிலிருந்து, நேராக ஈ.வே.ரா சாலை, ரித்தர்டன் சாலை சந்திப்பு, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பு மற்றும் காந்தி இர்வின் பாயின்ட் சந்திப்பில் வலது புறம் திரும்பி காந்தி இர்வின் மேம்பாலம் வழியாக செல்லலாம். எழும்பூர் காந்தி இர்வின் சாலை மற்றும் காவல் ஆணையாளர் சாலை சந்திப்பிலிருந்து (உடுப்பி பாயின்ட்), டாக்டர் நாயர் மேம்பாலம் வழியாக ஈ.வே.ரா சாலை நோக்கி செல்லக் கூடிய வாகனங்கள் டாக்டர் நாயர் மேம்பாலத்தின் வழியாக செல்லலாம். எனவே வாகன ஒட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

காவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது! 

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Postal voting for police officers has begun

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வாக்குச்சாவடிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், கண் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காகத் தபால் வாக்கு செலுத்தும் வசதி தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டது. அதே போன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரும் தபால் வாக்குச் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பணியாற்றும் காவலர்கள் இன்று (11.04.2024) முதல் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் இன்று முதல் 13 ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்குகளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு உட்பட்ட 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் சிறப்பு மையங்களில் தபால் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் காவலர்கள் காலை முதல் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.