Skip to main content

ஏறுமுகத்தில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை... கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

Published on 12/06/2020 | Edited on 12/06/2020

 

  corona virus impact Increase - Request to take action


ஒவ்வொரு நாளும் சென்னையில் மட்டும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை கூடுகிறது. “ சென்னையில் 2 வாரங்களுக்கு கடைகளை மூடத் தயார்” என வணிகர் சங்கத்தினர் முன்வந்திருக்கும் நிலையில், அரசாங்கம் இன்னமும் முடிவு எடுக்காமல் இருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இனிவரும் காலங்களில் கரோனா பரிசோதனை செய்பவர்கள் மட்டுமின்றி, அவர்களுடைய குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.
 


தனிமைப்படுத்துவோம் என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்துவார்களா? கல்லூரிகளில் தங்க வைப்பார்களா? இதையெல்லாம் கண்காணிப்பது யார்? என்ற விபரத்தை மாநகராட்சி நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. சரி சொந்த ஊருக்குச் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தாலும், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விரும்புவர்களுக்கு (மருத்துவச் சேவை தவிர) இ-பாஸ் வழங்க வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முன்பு ஒரு வீட்டில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால். தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அந்தத் தெருவே பேரிகார்டு, இரும்புத் தகரம் கொண்டு அடைக்கப்படும். 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும். இப்ப நிலைமை அப்படியில்லை.
 

  corona virus impact Increase - Request to take action


அதேபோல, போலீஸ்காரர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால், அந்தக் காவல் நிலையமே 10 நாளைக்கு மூடப்படும். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் ஆய்வாளருக்குச் சில தினங்களுக்கு முன்னர் கரோனா உறுதி செய்யப்பட்டது. அதற்குப் பிறகு அவரது மனைவி, மகள், மகன் என 3 பேருக்கு கரோனா பரவியது. பின்னர் ஆய்வாளரின் 2 ஓட்டுனர், 2 உதவி ஆய்வாளர், ஒரு காவலர் என அந்தக் காவல் நிலையத்தில் மட்டும் 6 பேர் இப்போது குவாரன்டைனில் இருக்கின்றனர். இருந்தும் காவல் நிலையம் வழக்கம்போல் இயங்குகிறது. இப்படிபட்ட சூழலில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும்.
 


தமிழ்நாட்டில் அதிக பரிசோதனை பண்ணுவதே நோயாளிகள் எண்ணிக்கைக்கு காரணம் என்று சொல்கிறது. ஒருவகையில் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஜூன் 10-ஆம் தேதி நிலவரப்படி ஏழரைக் கோடி ஜனத்தொகை கொண்ட தமிழ்நாட்டில் 6 லட்சத்து 38 ஆயிரத்து 846 பேரை பரிசோதனை செய்திருக்கிறார்கள். ஆனால், மற்ற மாநிலங்களைப் பொருத்தவரை (மக்கள் தொகை குறைவு என்றாலும்) பரிசோதனைகளின் எண்ணிக்கையும் குறைவாகத்தான் இருக்கிறது. குறிப்பாக குஜராத்தில் மொத்த மக்கள் தொகை 6 கோடியே 79 லட்சம் பேர். ஆனால், அங்கு இதுவரை 2.66 லட்சம் பேருக்கு பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு நோயாளிகள் எண்ணிக்கை 24,544, இறப்பு எண்ணிக்கை 1,347. நோயாளிகள் எண்ணிக்கையிலும் பலி எண்ணிக்கையிலும் முதல் இடத்தில் இருக்கும் மகாராஷ்டிராவில் இதுவரை 6.10 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 94,041 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 12.21 கோடி பேர் மக்கள் தொகை. ஆனால், பரிசோதனை தமிழ்நாட்டைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது.
 

  corona virus impact Increase - Request to take action


பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்திரபிரதேசத்தில் மக்கள் தொகை 22.50 கோடி. ஆனால், அங்கு இதுவரை வெறும் 4.04 லட்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்திருக்கின்றனர். இதனால், அங்கு 11,610 என்ற அளவில் நோயாளிகள் எண்ணிக்கை இருக்கிறது. அதே நேரத்தில் இறப்பு விகிதம் அங்கு அதிகம். இதுவரை 321-ஆக உயர்ந்திருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை குறைவு என்றாலும், அங்கு பரிசோதனையும் குறைவாகத்தான் இருக்கிறது. கடந்த 3 மாதத்தில் 1.31 லட்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்துள்ளனர். அதே நேரத்தில் ஊரடங்கை முன்கூட்டியே முழுமையாகக் கடைப்பிடித்ததால் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மீண்டும் ஏறுமுகத்தில் இருக்கிறது நோயாளிகள் எண்ணிக்கை.
 

http://onelink.to/nknapp


இப்படி மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை அதிகம். அதனால் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகம் என்று சொல்கிறது அரசாங்கம். அதேபோல் கட்டுப்பாடுகளும் தாராளமாகத் தளர்த்தப்பட்டதால், கரோனாவிற்குக் கொண்டாட்டமாகி விட்டது. இனிமேலும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் முழுஊரடங்கை அமல்படுத்தினால் தான் தலைநகர் தப்பும்!
 

 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.