ADVERTISEMENT

கரோனா தாக்கம்! மக்கள் உணவகங்களாக உயர்ந்த அம்மா உணவகங்கள்! 

02:43 PM Mar 29, 2020 | rajavel

ADVERTISEMENT

கரோனா பரவுதலை தடுப்பதற்கும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் அடங்கிய 9 குழுக்களை அமைத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. குழுவில் உள்ள உயரதிகாரிகள் தங்களுக்குப் பணிக்கப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துவதால் கோட்டையிலுள்ள முக்கிய அதிகாரிகளின் அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

உயரதிகாரிகளின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, ஏழைகள், வீடற்றவர்கள், தொழிலாளர்களுக்கான உணவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும்படி உளவுத்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. தினசரி சாப்பிடுவதற்கு உணவு கிடைக்காமல் வேலையையிழந்த ஏழைகள் மற்றும் வீடற்றவர்கள் தவிப்பதாக சமீபத்தில் ஒரு ரிப்போர்ட்டை முதலமைச்சர் எடப்பாடிக்கு அனுப்பி வைத்துள்ளத்து உளவுத்துறை.

ரிப்போர்ட்டை பார்த்த எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் 1 மணி நேரம் விவாதித்திருக்கிறார். அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களின் நிலை பற்றி ஆலோசிக்கப்பட்டது. அந்த ஆலோசனையில், ’’ பெருநகர சென்னை மாநகராட்சியில் 407 அம்மா உணவகங்கள் இயங்குகிறது. அதேபோல, தமிழகத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அம்மா உணவகங்கள் உண்டு. தவிர, மாநகராட்சிகளில் மக்களின் பயன்பாட்டிற்கேற்ப அம்மா உணவகங்கள் கணிசமான எண்ணிக்கையில் இயங்கி வருகிறது. கொரோனா பிரச்சனைகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கும், வீடற்ற ஏழைகளுக்கும் உணவுகளை தடையின்றி வழங்குவதற்கேற்ப 24 மணிநேரமும் அம்மா உணவகங்களை இயக்க வைக்கலாம் என வேலுமணி சொல்லியிருக்கிறார். அந்த யோசானையை ஏற்றுக்கொண்ட எடப்பாடி, உணவின்றி ஏழைகள் தவிக்கிறார்கள் என்கிற செய்தி பதிவாகக்கூடாது ; பட்டினிச் சாவுகள் நடக்காமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். அம்மா உணவகங்களை ஓய்வின்றி இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுங்கள் என கேட்டுக்கொண்டார்.


இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதுமுள்ள மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளிடம் அவசர ஆலோசனை நடத்திய வேலுமணி, அம்மா உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும். அதற்கேற்ப, பணியாளர்களை 3 ஷிப்டாக மாற்றிக்கொள்ளுங்கள். எந்த சூழலிலும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை இருக்கக்கூடாது. ஒரு வாரத்திற்கு தேவையான பொருள்கள் எப்போதும் அம்மா உணவகங்களில் ஸ்டாக் இருக்க வேண்டும். சாப்பிட வருபவர்களுக்கிடையே 1 மீட்டர் இடைவெளி இருப்பதை கவனமாக பார்க்க வேண்டும். அம்மா உணவகங்களில் பணிபுரிவோரும், சாப்பிட வருபவர்களும் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்யுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார் வேலுமணி ‘’ என்கின்றனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள்.

வேலுமணியின் உத்தரவுக்கேற்ப அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகளால் கடந்த 2 நாட்களாக அம்மா உணவகங்கள் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், நடமாடும் அம்மா உணவகங்கள் மூலமாகவும் உணவுகள் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசு காப்பகங்களில் உள்ள ஆதரவற்றவர்களுக்கும் முதியோர்களுக்கும் நடமாடும் அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்குவது தடையின்றி நடந்து வருகிறது.


சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் இருக்கின்றன. கொரோனா வைரஸ் பிரச்சனைகள் இல்லாத முந்தைய காலத்தில் ஒரு அம்மா உணவகத்தில் தினசரி 800 பேர் சாப்பிடுவார்கள். அந்த வகையில் சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சத்து 25 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக ஊரடங்கும் வீடடங்கும் அமலிலிருப்பதால் அம்மா உணவகங்களில் சாப்பிடுவோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 28-ந்தேதி எடுக்கப்பட்ட கணக்கின்படி சென்னையில் மட்டும் ஒரு நாளை 14 லட்சம் பேர் சாப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 2013-ல் ஜெயலலிதா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்மா உணவகம் திட்டம் ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. கடந்த 7 வருடங்களாக ஏழைகளின் ஆதரவுடன் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் காலை உணவாக இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல மதிய உணவாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம், கருவேப்பிலை சாதம், கீரை சாதம் ஆகியவை தலா 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. இரவு நேரத்தில் பருப்பு கடைசலுடன் 2 சப்பாத்திகள் 3 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. சென்னையில் ஒரு வார்டு 2 என்கிற அடிப்படையில் அரைகிலோ மீட்டர் இடைவெளியில் அம்மா உணவகங்கள் செயல்படுவதாக கூறுகின்றனர் மாநகராட்சி பணியாளர்கள். உள்ளாட்சித் துறையின் தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்படுகிறது.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் தமிழகம் முழுவதும் வீதிக்கு வீதி மக்கள் வசிக்கும் இடங்களில் மக்களுக்கான உணவு வழங்குதல், குடிநீர் வழங்குதல், சாலைகளை சுத்தப்படுத்துதல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளில் உள்ளாட்சித் துறையின் தூய்மைப் பணியாளர்கள் மட்டுமே ஷிப்ட் கணக்கில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள்.

அனைத்துப் பகுதிகளிலும் அம்மா உணவகங்களை நிர்வகிக்கும் பெண்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள். தூய்மையாகவும், தரத்தில் சமரசமின்றியும் தயாரிக்கப்படும் உணவு வகைகள், சாப்பிட வருபவர்களின் மனதை நிறைவு செய்யும் வகையில் உள்ளன. வீட்டில் சமைப்பது போன்று அம்மா உணவகங்களில் சமைக்கப்படும் உணவு வகைகளையே அங்கு பணிபுரிபவர்களும் சாப்பிடுகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பரவும் காலம் என்பதால், அம்மா உணவகங்களில் பணியாற்றும் எல்லோரும் முகக் கவசம், கையுறை அணிதல், ஆரோக்கியமான சமையல் அறையை வைத்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்படுகிறது அம்மா உணவகங்கள்.


கடந்த 2016 – ல் தமிழகத்தைத் தாக்கிய வார்தா புயலின் போது, அம்மா உணவகம் மட்டுமே லட்சக்கணக்கானோருக்கு உணவளித்தது. அதற்கு பிறகு தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பசியால் தவிப்போர் அனைவருக்கும் அட்சயப் பாத்திரமாக இருக்கின்றன அம்மா உணவகங்கள். ஏழைகள் மட்டுமல்லாது நடுத்தர வர்க்கத்தினரும் அம்ம உணவகத்தை நாடுவது அதிகரித்து வருகிறது.
உள்ளாட்சித்துறை பணியாளர்கள், வீதிகளை மட்டும் சுத்தமாக்கவில்லை ; அம்மா உணவகங்கள் மூலம் வீட்டில் இருப்பவர்களின் பசியையும் போக்குகிறார்கள். இதுவரை ஏழைகளின் உணவகங்களாக இருந்த அம்மா உணவகங்கள் , தற்போது மக்களின் உணவகங்களாக உயர்ந்துள்ளன !

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT