Skip to main content

அவசியமா? அவசர கரோனா தடுப்பூசி!

 

ddd

 

“கரோனா வைரஸுக்கு ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ என்ற இரண்டு தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டு அனுமதி (Emergency Use Authorization) என்கிற பெயரில் வழங்கவேண்டிய அவசியம் என்ன?'’ என்ற சர்ச்சை மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பரவி வருகிறது.

 

உருமாறிய கரோனாவால் மீண்டும் சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு, பதற்றம் பரவிக்கொண்டிருக்கிறது. மேலைநாடுகளில் தடுப்பூசிகள் போட ஆரம்பித்துவிட்டார்கள். தடுப்பூசிகளை இந்திய மக்களுக்கும் போட்டால்தானே இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று மருத்துவர்கள் மத்தியில் நாம் விசாரித்தபோது, அறிவியல்பூர்மான தகவல்களைக் கூறி அதிரவைக்கிறார்கள்.

 

இந்திய தொற்றுநோய் மருத்துவர்கள் கூட்டமைப்பு (Clinical Infectious Diseases Society) முன்னாள் செயலாளரும் தற்போதைய கவர்னிங் கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமிநாதன் நம்மிடம், “எந்த ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தாலும் அதுகுறித்த உண்மைகளும் அதோடு சேர்த்து வதந்திகளும் பரவும். அதேபோல், எந்த தடுப்பூசியுமே 100 சதவீதம் பெர்ஃபெக்ட் கிடையாது. நம்ப ஊரு தடுப்பூசிகளைப் பொறுத்த வரை இரண்டு டோஸ் போட்ட பிறகு, 70 சதவீத மக்களுக்கு கரோனாவிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படியென்றால், 30 சதவீதம் பேருக்குத் தடுப்பூசிகள் போட்டாலும்கூட மீண்டும் கரோனா வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

 

ddd

 

இத்தடுப்பூசியைப் பொறுத்தவரை படிப்படியாகத்தான் போடமுடியும். அதனால், இந்தியா முழுவதும் போட்டு முடிக்கவே இரண்டு வருடங்கள்கூட ஆகலாம். அதுவரை, வழக்கம்போல் முகக்கவசங்களுடன் பாதுகாப்பு விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடித்துதான் ஆக வேண்டும். அதேபோல், போதுமான அளவுக்கு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் கட்டுக்குள் கொண்டுவரமுடியும். அதனால், பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த சந்தேகங்களையும் அச்சங்களையும் போக்கி போதிய விழிப்புணர்வூட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

 

ஐ.சி.எம்.ஆரின் வைராலஜி துறை ஆராய்ச்சித் தலைவராக இருந்த ஜேக்கப் ஜான், டாக்டர் கங்கா தீப் கங் ஆகிய விஞ்ஞானிகள் "இந்த தடுப்பூசிகளால் பெரிய பாதிப்பு இல்லை என்றுதான் கூறியிருக்கிறார்கள். அதிவேகமாக கரோனா பரவிக்கொண்டிருக்கும் சூழலில், அவசரமாக தடுப்பூசிகளை வழங்கலாம். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை அதிவேகமாக கரோனா பரவவில்லை. கட்டுக்குள்தான் இருக்கிறது. அப்படியிருக்க, இன்னும் முழுமையாக ஆய்வுசெய்து அதன் அறிக்கையை மக்களுக்குத் தெரியப்படுத்தி தடுப்பூசி போடுவதுதான் சரியானது'' என்கிறார் அவர்.

 

"ஃபேஸ்-3 ஆய்வில் எத்தனை பேருக்குத் தடுப்பூசி கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது என்ற வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கவில்லை. மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைவர் (Drugs Controller General of India ) வேணுகோபால் ஜி சோமணியிடம் தடுப்பூசி குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினால், எந்த விளக்கமும் கொடுக்காமல் காரில் ஏறிவிட்டு, "110 சதவீதம் பாதுகாப்பானது” என்று 110 விதியின் கீழ் அறிவிப்பதுபோல் கூறினால், மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?''’என்று கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக்டர் ரெக்ஸ் சர்குணம்.

 

அவர் மேலும், “தேர்தலுக்கு முன்பே தடுப்பூசியைக் கொண்டுவர வேண்டும் என்று அரசியலுக்காக ட்ரம்ப் அறிவித்தபோது, அங்குள்ள எஃப்.டி.ஏ. அதிகாரிகளும் அமெரிக்காவின் தொற்றுநோய் சிகிச்சையின் லெஜண்ட்டுமான மூத்த மருத்துவரும் இயக்குனருமான அந்தோணி ஃபாசி அறிவியல் ரீதியாக ஒப்புக்கொள்ளவில்லை. அப்படித்தான், இந்திய மருத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் அறிவியல்ரீதியாக செயல்பட வேண்டும்'' என்கிறார் கோரிக்கையாக.

 

ddd

 

"எந்த ஒரு தடுப்பூசியுமே பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்காது. மேலைநாடுகளில் ஒருவர் தடுப்பூசி போடுகிறார் என்றால் எங்கு போட்டுக்கொள்கிறார்? யாரிடம் போட்டுக் கொள்கிறார் என்கிற தகவல் கம்ப்யூட்டரில் இருக்கும். அவருக்கு, தடுப்பூசியால் அலர்ஜி ஏற்பட்டால் ஃபார்மகோ விஜிலென்ஸ் எனப்படும் கண்காணிப்பு அமைப்பு ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கும். ஆனால், இந்தியாவில் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீடு வழங்குவார்கள் என்பது குறித்தே பேச மறுப்பது மனிதாபிமானமற்ற செயல்'' என்று குற்றஞ்சாட்டுகிறார் மருத்துவர் கருணாநிதி.

 

சென்னை சாலிக்கிராமம் ஜவஹர் கல்லூரியில் தமிழக அரசுடன் இணைந்து, சித்த மருத்துவத்தின்மூலம் 6,000-க்கு மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர் வீரபாபு நம்மிடம், "கரோனா வைரஸ் கிருமி பெரிதாக உருமாறிவிட்டால் தடுப்பூசிகளால் ஒன்றும் செய்யமுடியாது. அதனால், எப்போதும் நமது தமிழ் மருத்துவர்களின் துணையோடு கரோனா உட்பட அனைத்து நோய்களையும் குணப்படுத்த தயாராக இருக்க வேண்டும். அதனால் சித்த வைத்தியத்திற்கும் கூடுதல் நிதி ஒதுக்கி, கூட்டு சிகிச்சை செய்தால் உருமாறிய கரோனா வந்தாலும் அச்சம் கொள்ளத் தேவையில்லை'' என்கிறார் நம்பிக்கையுடன்.

 

மணி அடிக்கச் சொன்னது, விளக்கேற்றச் சொன்னது போல அல்ல தடுப்பூசி விவகாரம். மத்தியில் ஆள்பவர்கள் அதனை உணர வேண்டும்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்