Skip to main content

''வெளியே வா'' என மிரட்டி கரோனா டெஸ்ட்! கைதட்டல்... 15 ஆயிரம் கமிஷன்! தெருநாய்களைப்போல வேட்டையாடப்படும் மக்கள்!

corona

 

 

நாய்களைப் பிடித்தால் புளூ க்ராஸ், பீட்டா போன்ற அமைப்புகள் பரிந்து பேசும் நாட்டில், மனிதர்களைத் தெருநாய் போல நடத்துகிறார்கள் என்கிற குரல் சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் கேட்கிறது. தமிழக தலை நகரத்தில் கரோனா கண்ட்ரோல் ஆகிவருகிறது என முதல்வர், அமைச்சர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் மாறி மாறி சொல்லி வரும் அதே நேரத்தில், நாய்களை பிடிக்கும் வண்டிகளைப் போல கரோனா மொபைல் வேன்கள் வந்து, கரோனா இருக்கிறது என மக்களைப் பிடித்து செல்வதாகவும், அப்படி பிடித்து கொடுப்பவர்களுக்கு கமிஷன் கொடுக்கப்படுகிறது எனவும் இந்த மொபைல் வேன் கும்பலிடம் சிக்கியவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

சென்னை ஷெனாய் நகர் கெஜபதி தெருவில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து நமக்கு அவசர அழைப்பு வந்தது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் நம்மிடம், "கொரோனா டெஸ்ட் என்கிற பெயரில் பெரிய அராஜகம் நடக்கிறது. முதலில் ஒவ்வொரு வீடாக வந்து சளி, ஜுரம், இருமல் இருக்கிறதா என கேட்பார்கள். ஒன்றும் இல்லை என்று சொன்னால் போய்விடுவார்கள். அதற்கு பிறகு ஆக்சிஜன் மீட்டர் வைத்து டெஸ்ட் செய்ய ஆரம்பித்தார்கள். அது ஒன்றும் தவறு கிடையாது.

 

அதற்கு பிறகு குறிப்பிட்ட தேதி, இடத்தை அறிவித்து முகாம் அமைத்து பரிசோதனை செய்தார்கள். கரோனா இருக்கிறதோ என சந்தேகம் இருந்தால், டெஸ்ட் எடுக்கணும் என நினைத்தால் அவர்கள் அங்கு போய் டெஸ்ட் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் சரிதான். அதற்குப்பிறகு, இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், ஒவ்வொரு ஏரியா வாரியாக ஆட்களை நியமித்து டெஸ்ட் எடுத்து வரச் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் வந்து, வெளியே வாருங்கள் என கூப்பிடுவது, மாடியில் உள்ளவர்களை கீழே இறங்கி வாங்க என அதட்டுவது, வயதானவர்கள்- கர்ப்பிணிகள் என அனைவரையும் கீழே இறங்க வைப்பது என அடாவடித்தனமாக நடக்கிறார்கள். ஒன்றும் இல்லை என்று சொன்னாலும், வெளியே வா என மிரட்டல் தொனியுடன் கூப்பிட்டு டெஸ்ட் எடுக்கிறார்கள்.

 

corona test

 

கடந்த முறை வேனில் வந்தவர்கள் அனைவரும் வெளியே வாங்க என மிரட்டினர். குழந்தைகள் இருக்கிறது கீழே வர முடியாது, கர்ப்பிணி பெண் கீழே இறங்கி வருவது சிரமம் என 20க்கும் மேற்பட்டவர்கள் சத்தம் போட்டதால் அப்படியே திரும்பி விட்டனர். அவர்கள் கையில் ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கு கரோனா இருக்கிறது என சொல்லி அந்த லிஸ்ட்டில் சேர்த்துவிட்டால் உடனே அந்த ஊழியர்கள் ஒரு குரூப்பாக கைதட்டுகின்றனர். இதேபோல் இத்தனை நபர்களை சேர்த்துவிட்டோம் என்று சொல்லி கைதட்டுகிறார்கள்.

 

வீடு வீடாக செக் பண்ண வரும் வாலண்டியர்களுக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாயாம். கரோனா நோய் உள்ளது என ஒரு நபரை பிடித்து கொடுத்துவிட்டால், செக் பண்ண வரும் அந்த நபருக்கு 15 ஆயிரம் ரூபாய் கமிசன் கொடுக்கப்படுகிறது என பேசிக்கொள்கிறார்கள். அரசாங்கம் ஒரு நபருக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கிளைம் பண்ணுதாம். 65 வயசுக்கு மேலே உள்ளவர்கள் யாரையும் பெரும்பாலும் செக் பண்ணுவது இல்லை. ஊசி போட்டு அப்படியே இருங்கன்னு சொல்கிறார்கள். அவுங்களுக்கு முறையான சிசிக்சை பண்ணுவதில்லை. 50 வயசுக்கு கீழே உள்ளவர்களை டெஸ்ட் எடுக்கிறார்கள் என்று பொதுமக்கள் மத்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

 

கெஜபதி தெருவில் 4வது மாடியில் உள்ள ஒரு வயதானவருக்கு ஆஸ்துமா பிரச்சனையால் வீசிங் வரும். அவரை கரோனா இருக்கும் என்று மொபைல் வேனில் கூப்பிட்டு போய்விட்டு அவர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிவிட்டனர். அங்கிருந்த எட்டு குடும்பங்களும் வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர். இந்த அளவுக்கு டார்ச்சர் செய்தால் இதிலேயே மனஉளைச்சல் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போய்விடாதா? பொது மக்களை பயமுறுத்த ஆரம்பித்துவிட்டனர். ஏன் மக்களை மிரட்டுகிறார்கள். நாயை பிடிப்பது போல பிடித்து செல்கிறார்கள்'' எனக் குமுறுகிறார்கள்.

 

சிந்தாதிரிப்பேட்டையிலும் இப்படித் தான். ஒரு கர்ப்பிணி பெண்ணை மாடியில் இருந்து இறங்க சொன்னபோது, அவர் இப்பதான் செக் பண்ணுனோம் ஒன்றும் இல்லை என்று கர்ப்பிணி பெண் வீட்டார் சொல்லிப் பார்த்தும் கேட்கவில்லை. மிரட்டல் குரலில் கீழே இறங்க சொல்லி செக் பண்ணுகிறார்கள். கர்ப்பிணிப் பெண் மிரண்டு போய், அடுத்த நாள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். மக்கள் தாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அரசு இப்போது இப்படி பயமுறுத்தினால் என்ன செய்வது. கரோனாவுக்கு பயந்த காலம் போய், கவர்மெண்டுக்கு பயப்படும் காலம் வந்துவிட்டது. எல்லோரும் பயந்து ஓடுகிறார்கள் என்கிற பொதுமக்களின் முகத்தில் பயம் வெளிப்படுகிறது.