கரோனாவின் தாக்கம் இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. கவிஞர்கள் பலரும் கரோனா பாதிப்பு பற்றியும், அது குறித்த விழிப்புணர்வு பற்றியும் சமூக ஊடகங்களில் எழுதிவருகின்றனர். அந்த வகையில் நக்கீரன் முதன்மை துணை ஆசிரியர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய கவிதை ஒன்றும், சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பரவிவருகிறது.

கரோனா நிலவரம் ஏற்படுத்தியிருக்கும் அச்சம் குறித்து, ஒரு நடுத்தட்டுக் குடும்பத் தலைவியின் கவலையைச் சொல்வதாக அமைந்திருக்கும் அந்தக் கவிதை இதுதான்...

Advertisment

pppp

சாமக்கோழி பயமுறுத்த...

Advertisment

என்ன செய்யறது?

எனக்கொன்னும் தெரியலையே...

காலம் எப்படித்தான்

உருளுமுன்னு புரியலையே..

நேற்றுவரை இங்கிருந்த

வாழ்க்கையத்தான் காணலையே..

கூற்றுவனாம் கொரோனா

அச்சமின்னும் போகலையே...

.

கையிருப்பு ஏதுமில்லை;

கடன்வாங்கி வச்ச காசில்

ஊரடங்கு நாளை

ஓட்டலாம்ன்னு பார்த்தா...

பட்ஜெட்டு இடிக்கிது...

பல கவலை நெருக்குது.

தொட்டதுக் கெல்லாமும்

கோவம்தான் வெடிக்கிது!

*

வீட்டுக்கு உள்ளேயே

முடங்கித்தான் கிடந்தாலும்

சோறாக்க வேணுமுன்னா

கடைக் கண்ணி போகனுமே!

சாலையிலே கால்வச்சா

மொகக்கவசம் போடனுமாம்...

மொகக்கவசம் இங்கே

மெடிக்கலிலும் கிடைக்கலையே...

*

ரேசன் கடைபோனா

அங்கேயும் பெருங்கூட்டம்..

காய்கறிச் சந்தையிலோ

அதைவிடவும் தள்ளுமுள்ளு...

பிள்ளைகளைப் பொருள்வாங்க

அனுப்பலான்னு நெனைச்சாலே...

தடியடிக் காட்சியெல்லாம்

வெடவெடக்க வச்சிடுதே..

*

ஜலதோசம் வந்தாலே

ஜென்ம பயம் வந்துடுது....

சாதா இருமலுக்கே

குடும்பமே பயப்படுது...

இப்படியோர் கொடுமையிலே

வீடடஞ்சிக் கிடக்கையிலே...

தூக்கம்கூட என்துணைக்கு

இன்னும் வந்து சேரலையே...

*

அசந்து தூங்குற

பிள்ளைகளைப் பார்க்கையிலே...

அவங்க எதிர்காலம்

எப்படின்னு யோசிக்கிறேன்...

கசந்து போகாத

வாழ்கையிலே இன்னைக்கு

உசந்து பயமுறுத்தும்

கொரோனாவ என்ன செய்ய?

*

சாமக்கோழிச் சத்தம்

இரவையே பயமுறுத்த..

சம்பளக் கவலையிலே

தூங்காம அவர் புரள..

கவலையையே பாயா

விரிச்சிப்போட்டுப் படுத்திருக்கேன்...

சீக்கிரமா விடியுமுன்னு

தூங்காமக் காத்திருக்கேன்.