Skip to main content

கரோனா பெருந்தொற்று... மாகாராஷ்டிரா களயுத்தத்தில் தமிழர்...

Maharashtra

 

இந்தியாவில் கரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மாநிலம் மஹாராஹ்டிரா. பிழைப்புத் தேடி அம்மாநிலத்திற்கு சென்றவர்கள் சிறைபட்டுப் போனார்கள். அச்சிறையிலிருந்து விடுபட்டு எப்படியாவது தான் பிறந்த மண்ணை மிதித்துவிட வேண்டும் என்ற வேட்கையோடு, பிய்ந்து போன பாதங்களோடு ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுமிருந்து பாதசாரிகளாய் நடந்து செல்லும் துயரத்தைக் கண்டவர்களின் கண்கள் குளமாகின. 

   
மும்பை மட்டுமின்றி மகாராஷ்டிரா மாநிலத்தின் பல இடங்களிலும் முறைசாரா தொழிலாளர்களும், மும்பையிலேயே தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வரும் தமிழர்கள் படும் வேதனை கண்டு பலரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். இந்த நிலையில்தான் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி முழுவீச்சில் களப்பணியாற்றினார். 
 

யார் அந்த அதிகாரி என விசாரித்தபோது, தமிழகத்தின் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்த முனைவர் பொன். அன்பழகன் ஐ.ஏ.எஸ். என தெரிய வந்தது. சேரன்மாதேவியில் துணை ஆட்சியராக தனது அரசுப் பணியை துவங்கிய அவர் தற்போது மஹாராஹ்டிரா மாநிலத்தில் உள்ளார். 
 

மத்திய, மாநில அரசுகள் கரோனாவை எதிர்த்து போராடி வரும் நிலையில் மகாராஷ்டிரா தொழில் வளர்சிக் குழுமமும், தொழிற்பேட்டையை சார்ந்த நிறுவனங்களும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கு முழுவீச்சில் துணை நின்றன. பொன். அன்பழகன் தொழிற்பேட்டை நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்று 90 கோடி  ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தார். மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி கழகத்தின் சார்பிலும்  11 கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
 

Maharashtra


அரசுக்கு வருவாயை அதிகரிக்க எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டை நிறுவனங்கள் மூலம் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.


பசிப்பிணி போக்கும் அறத்தொண்டு.


ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் உணவும், அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டை நிறுவனங்கள் மூலமாக வழங்கி வருகிறார். 


மக்கள்படும் இன்னல்களை நேரடியாக கண்டு, ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் பெருங்கருணையை தன்னுள்ளே கொண்டு இன்னலுறும் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்க முடிவு செய்தார். இந்நெருக்கடியான சூழ்நிலையில்  பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குவது குறித்து பல்வேறு தொழிற்பேட்டை நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 

Maharashtra


முதற்கட்டமாக சற்றொப்ப 1,87,50,000.00 ரூபாய் மதிப்புள்ள 3 லட்சம் கிலோ உணவுப் பொருட்கள் வழங்குவதென்ற பெரும்பணியினை மேற்கொண்டார். இதனால்சற்றொப்ப 18,750 குடும்பங்கள் பயனடைந்தன. எம்.ஐ.டி.சியின் அரசு அதிகாரிகள், தொழிற்பேட்டை நிறுவனங்கள், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் மூலமாக மகாராஷ்டிராவின் ஹிங்கோலி, அக்கோலா, சத்தாரா, சோலாப்பூர், கோலாப்பூர், புனே, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செய்து முடித்தார்.
 

கடந்த இரண்டரை மாதங்களாக மும்பையில் தாராவி, மாகிம்‌, மட்டுங்கா, ஒர்லி, மார்க்கண்டேஷ்வர்‌ நகர்‌, ஆனந்த்‌ நகர்‌, ரேரோடு, சிவ்ரி, அந்தேரி, கோரேகாவ்‌, மலாடு, வில்லேபார்லே, கல்யாண்‌,தானே, காந்திவலி, அம்பர்நாத்‌, குண்டோலி, சீத்தாகேம்ப்‌, நாலா சோப்பாரா, தலோஜா எம்.ஐ.டி.சி, துர்பே நாக்கா உள்ளிட்ட பகுதிகளில்‌ வாழும் ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார். இதற்கிடையே புனே, மாலேகாவ்,அவுரங்காபாத்‌ போன்ற மாவட்டங்களில்‌ கொரோனா பெருந்தொற்று பரவியது. இதனால்‌, அங்கு வாழும்‌ மக்கள்‌ உணவின்றி தவிப்பதை அறிந்து அம்மக்களுக்கும்‌ எம்.ஐ.டி.சி அதிகாரிகள்‌ மூலமாக உணவு பொருட்களை கொண்டு சேர்த்தார்‌.

 

Maharashtra


மும்பையில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலேயே ஆகப்பெரிய குடிசை பகுதி தாராவி. மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதியில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் போதிய அடிப்படை வசதிகள் கூட இன்றி வாழ்ந்து வருகிறார்கள். கரோனா பெருந்தொற்று வேகமாக பரவிவரும் பகுதிகளில் தாராவி முதல் இடத்தில் இருக்கிறது. இதனால் மக்கள் உயிர் அச்சத்துடனேயே தங்கள் வாழ்நாளை கடத்த வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டதால் உணவின்றி குடிசைகளுக்குள் முடங்கிப்போயினர்.     


முதலில் தாராவியில் பாதிக்கப்பட்ட தமிழ்  மக்களுக்கு உணவு பொருட்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக 1,25,00,000.00 ரூபாய் மதிப்புள்ள   2,00,000 கிலோ உணவு பொருட்களை  எம்.ஐ.டிசி தொழிற்பேட்டை சார்ந்த நிறுவனங்கள் மூலமாக அனுப்பி வைத்தார். இந்த உதவியினால் சுமார் 12,500 குடும்பங்கள் பயன்பெற்றன. தாரவிப் பகுதி மட்டுமின்றி  தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மற்ற பகுதிகளிலும் உதவும் வண்ணம் மேலும் 85,00,000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்களை  10,000 குடும்பங்கள் பயன்பெறும் வகையில்  மாகிம்‌, மட்டுங்கா, ஒர்லி, மார்க்கண்டேஷ்வர்‌ நகர்‌, ஆனந்த்‌ நகர்‌, ரேரோடு, சிவ்ரி, அந்தேரி, கோரேகாவ்‌, மலாடு, கல்யாண்‌, தானே, காந்திவலி, அம்பர்நாத்‌, குண்டோலி, மால்வாணி, சீத்தாகேம்ப்‌, நல்ல சோப்ரா, தலோஜா எம்.ஜ.டி.சி, துர்பே நாக்கா, கார்கர், செம்பூர், வில்லே பார்லே, ஜெரிமெரி ஆகிய பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்.

 

Maharashtra


முறைசாரா தொழிளார்களுக்கான சிறப்பான பணிகள்  மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகளில் தமிழகத்தைச் சார்ந்த முறைசாரா தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் பணிசெய்து வந்தனர். பொதுமுடக்கத்தால் வேலை இழந்ததுடன் தாயகம் திரும்பவும் வழியின்றி தவித்து வந்தனர். அரசு அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தனர்.  “சாங்கிலி” மாவட்டத்திற்கு விற்பனை பிரதிநிதிகளாக வந்திருந்த தமிழர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு  திரும்ப இயலாமல் தத்தளித்தனர். அந்த இளைஞர்கள் குறித்து பி. அன்பழகனுக்கு தெரியவந்தவுடன், அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துடனும், இளைஞர்களுடனும், சமூக ஆர்வலர்களுடனும் கலந்து பேசி நிலவரங்களை கேட்டறிந்தார். பேருந்து மூலம் சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு இருப்பதை அறிந்து,  பேருந்து போக்குவரத்துக்கான முழு செலவையும்  எம்.ஐ.டி சியை சார்ந்த தொழில் நிறுவனங்கள் ஏற்றுகொள்ள வழிவகை செய்தார்.


இதனையடுத்து, சாங்கிலியில் சிக்கி தவித்த 480 தமிழ் விற்பனை பிரதிநிதிகளுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு 18 பேருந்துகளில் சேலம் மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தார். அவர்களுக்கு தேவையான உணவு, உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அந்த மாவட்ட எம்.ஐ.டி.சியை சார்ந்த தொழிற்பேட்டை நிறுவனங்களும்,  அதிகாரிகள் செய்து கொடுத்தனர். அவர்கள் அனைவரும் மே 9 ஆம் தேதி சேலத்திற்கு சென்றடைந்தனர். போக்குவரத்து செலவுக்கான ரூ. 18 லட்சத்தை எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டை நிறுவனங்கள் மூலமாக அரசு போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தினார். அவர்களில் யாரும் தொற்றால் பாதிக்கப்பட வில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி.    மே 18 ஆம் தேதி புனேயிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.  இந்த ரயிலில் மாகாராஷ்டிராவில் உள்ள ராய்காட், புனே, நாசிக், ரத்னகிரி,
சோலாப்பூர், கோலாப்பூர், நாண்டெட் ஆகிய  7 மாவட்டங்களில் சிக்கித்தவித்த  1400க்கும் மேற்பட்ட தமிழ்மக்களை  பேருந்துகள் மூலமாக புனேவுக்கு அழைத்து வந்து சிறப்பு இரயில் மூலம் தாயகம் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் பயணத்தில் உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக சுமார் ரூ. 35 லட்சம் செலவானது. அந்த தொகை முழுவதையும்  எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டையை சார்ந்த நிறுவனங்கள் மூலமாக வழங்கப்பட்டது.  

 

Maharashtra

 

மே 28 ஆம் தேதி காலை 6.15 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்ட ரயிலில் 1400க்கும் அதிகமானோர் பயணித்தனர். அவர்களுக்கும் சோலாப்பூர் ரயில் நிலையத்தில் தேவையான பழங்கள், உணவு பொட்டலங்களை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். 

 

Maharashtra

 

கரோனா பெருந்தொற்றிகெதிரான நேரடியான களயுத்தம்:  


உணவுப் பொருட்கள் வழங்குதல், முறைசாரா தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புதல் என்பதோடு நின்றுவிடாமல் கொரோனா தீ நுண்மத்திற்கு எதிரான நேரடியான கள யுத்தத்திலும் இறங்கியுள்ளார்.  அரசுக்கு எம்.ஐ.டிசி தொழிற்பேட்டை நிறுவனங்கள் மூலம் 50,000 பிபிஇ கிட்ஸ், 8.5 லட்சம் முகக்கவசங்கள், 140 வெண்டிலேட்டர்கள் வழங்கினார். மேலும் 15 வெண்டிலேட்டர்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அவுரங்காபாத் எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டைக்குள் 250 படுக்கைகளுடன் கூடிய   கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிகள் துரிதகதியில்  நடைபெற்று வருகிறது. ஜூன் மாத 21 ஆம் நாள் இச் சிறப்பு மருத்துவமனை  திறக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர் அனுமதிக்குப்பின் கிருமி ஆராய்ச்சி மையம் ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆராய்ச்சி மையம் அமைப்பதற்காக 1.60 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் நுட்ப இயந்திரங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. வைரோலோஜி ஆய்வு  மையம் அமைப்பதற்காக பி.எம்.ஐ.சி ஆடியோசிட்டி அல்லது இண்டஸ்ட்ரியல் டவுண்ஷிப் லிமிடெட் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதி மூலம் வழங்கப்பட உள்ளதாக கூறினார். 

“உறுபசியும் ஓவாப் பிணியும்  செறுபகையும்
 சேரா தியல்வது நாடு”

பசி, பிணி, பகை இல்லாத நாடே சிறந்த நாடு என்கிறார் வள்ளுவர். கரோனா என்னும் பெருந்தொற்றல் விளைந்த பசி, பிணி, மனித குலத்திற்கெதிரான தீ பகை இம் மூன்றையும் விரட்ட யுத்த களத்தில் களமாடி வருகிறார் முனைவர் பொன்.அன்பழகன் ஐ.ஏ.எஸ். அவர் தமிழர் என்பதில் நமக்கும் கூடுதல் பெருமை. 
 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்