ADVERTISEMENT

கரோனா தந்த மரண அடியும்... பொருளாதாரம் தந்த பேரிடியும்... பேரா. முனைவர். வெ.சிவப்பிரகாசம்! 

07:03 AM May 29, 2020 | rajavel

ADVERTISEMENT


கரோனா தொடுத்து வரும் மரண கணைகளும், பொருளாதாரச் சரிவு பொருளாதார மந்தமாக மாறி சமூக, அரசியல் பொருளாதாரத் தளங்களைச் சீரழித்து சின்னாபின்னமாக்கி சாதாரண மக்களின் வாழ்க்கையை வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

ADVERTISEMENT


இந்நிலையில் கரோனாவிற்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் என்ற மலேரியாவிற்குக் கொடுக்கப்பட வேண்டிய மாத்திரைகளைத் தொற்று அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு அமெரிக்காவிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் கடைசி முயற்சியாகக் கொடுக்கின்றனர். இந்தியாவிலும் இதே மாத்திரையைக் கொடுக்கின்றனர்.

ஆனால், இந்த மாத்திரைகளால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு முடியளவும் நன்மை இல்லை என்று அமெரிக்க மருத்துவ ஆய்வுக் கழகத்தின் தலைவர் அந்தோனி கூறிவிட்டார். அதேபோல் உலக சுகாதார அமைப்பும் இந்த மாத்திரைகளால் கரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு எந்தவித பலன்களையும் அளிக்கவில்லை என்பதை அறிவித்து விட்டது. என்றாலும், மக்களை ஏமாற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்த மாத்திரைகளை இந்தியாவிலிருந்து 1 1/2 டன் வாங்கியுள்ளார்.


ஆக, உண்மை என்னவென்றால், இதுகாறும் கரோனாவிற்கு தடுப்பு மருந்தும், கிருமியைக் கொல்லும் மருந்தும் உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே வேளையில், உலகில் அமெரிக்கா போன்ற நாடுகளில் தினமும் சராசரியாக 3,200 பேர்கள் இறக்கிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் அமெரிக்காவில் மொத்த இறந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது என்பது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகத்தின் முதன்மையான செல்வ நாடாகவும், அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும் முதன்மைப் பெற்று, புகழ்பெற்று விளங்கும் அமெரிக்காவிலேயே கரோனா கொடுத்துவரும் மிகப்பெரிய மரண அடி என்பது நம் யாவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கரோனாவால் ஒரு லட்சத்திற்கும் மேல் தொற்று பரவிட்டது. அதே நேரத்தில் இறப்பு விகிதமும் கூடி வருகிறது. இது நம்மை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.


ஆக, ஒரு புறம் கெரோனா மரண பயமும், மறுபுறம் பட்டினி, பசி, வேலையின்மையும், வறுமையும் வாட்டி வதைக்கின்றன. இது நம்மையெல்லாம் சொல்லொனாத் துயரத்திற்கு ஆட்படுத்தியுள்ளன.


இந்நிலையில், பொருளாதார மீட்சியா? வீழ்ச்சியா?


மைய்ய அரசின் நிதி அமைச்சர் 5 ஆவது முறையாக அறிவித்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைள் இன்றைய பொருளாதார மந்தத்தைத் தீர்க்குமா? என்பதே முக்கிய ஆய்வு வினாவாகும்.


கரோனாவிற்கு எப்படி உயிர்காக்கும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கவிட வில்லையோ, அதைப்போல, பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை ஆகியவற்றிற்குத் தீர்வு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இல்லை. அதாவது மனிதனால் தவறான பொருளாதார கொள்கையால் உருவாக்கப்பட்ட வறுமைக்கும், வேலையின்மைக்கும் சீனா போன்ற சோஸலிச சமத்துவ பொருளாதார அமைப்பில் நிரந்தரத் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பது இன்றைய வரலாறாகும்.


பொருளாதார மந்தத்திற்கு சிறந்த தீர்வாக உலகப் புகழ்பெற்ற ஆங்கில பொருளாதார பேரறிஞர் ஜே.எம்.கீன்ஸ் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாமருந்து 'பொதுத் தேவை'யை (Aggregate Demand) அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதற்கு, மக்களிடம் நேரடியாகப் பணம் கையில் வழங்க வேண்டும். அப்படியானால், உடனே மக்கள் பண்டங்களையும், சேவைகளையும் நுகர்வார்கள். நுகர் பொருள்கள் உடனே விற்கப்பட்டு நுகரப்படும். இதன் மூலம் நுகர் பொருட்களுக்கான தேவைகள் அதிகரிக்கச் செய்யப்படும். நுகர் தேவை முதலில் உண்டு பண்ணப்படுகிறது.


பொருளாதார அரசியல் தந்தை ஆடம் ஸ்மித் தனது பொருளாதார இயலில் அதாவது, 'நாடுகளின் செல்வம்' என்ற உலகப் புகழ்பெற்ற நூலில், முதலில் 'நுகர்வு' என்ற பகுதியை இணைத்துள்ளார். அடுத்துதான், இரண்டாவதாக 'உற்பத்தி' என்ற பகுதியை எழுதியுள்ளார். அதாவது, நாட்டின் பொருளாதாரத்தில் முதலில் மனித தேவை, அதாவது நுகர்வு இருந்தால் தான் உற்பத்தியாளர்கள் பண்டங்களை உற்பத்தி செய்வர். எனவே முதலில் நுகர்வு அடுத்துதான் உற்பத்தி. அதன் அடிப்படையில்தான் மக்களுக்குக் கையில் நேரடியாகப் பணத்தைத் திணிக்க வேண்டுமென்று ஜே.எம்.கீன்ஸ் கூறியுள்ளார். இவரின் அறிவுரையின் படிதான் அமெரிக்கப் பொருளாதார மந்தம் 1929 இல் தீர்க்கப்பட்டது. அதனடிப்படையில் தான் இன்றைய இந்தியப் பொருளாதாரத்தில் நிலவிவரும் பொருளாதார சரிவிற்கும், மந்தத்திற்கும் நேரடி பண அளிப்பை அனைத்து அறிஞர்களும் ஆலோசனையாக கூறி வருகின்றனர்.


இங்கு தற்சமயம் உற்பத்திச் செய்யப்பட்டுள்ள பண்டங்களை நுகர்வதற்கு வாங்கும் திறனை ஏற்படுத்த வேண்டும். அதற்கு, வேலையில்லாமல் வறுமையில் உள்ள மக்களிடையே பண அளிப்பை ஏற்படுத்தினால் நுகர்வு தேவையை (Consumption Demand) அதிகப்படுத்துவர். இதனால் பண்ட உற்பத்தியாளர்கள் வருவாய் பெறுவார்கள். அதன் பின்னர் இப்பண்ட உற்பத்தியாளர்களிடம் அதாவது மூலதன உற்பத்தியாளர்களிடம் (Capital Goods) தேவையை ஏற்படுத்துவார்கள்.


இதைப் பொருளாதார ரீதியில் சொல்லப் போனால், முதலில் நுகர்வு தேவை பின்னர், மூலதனப் பொருள் தேவை என்று தொடரும். இதனடிப்படையில் எழும் வினா என்னவென்றால்,

நிதி அமைச்சரின் பொருளாதார நடவடிக்கைகள் மீட்சியா? வீழ்ச்சியா?


இதற்கு விடை மீட்சியில்லை வீழ்ச்சியே. ஏனெனில் அடிப்படை நோய் என்னவென்றால், தேவை உற்பத்தியும், வாங்கும் திறனும் மக்களிடையே உண்டு பண்ணாததே ஆகும்.


ஏன் தீர்வாகாது?

முதலில் பசித்தவனுக்கும், பட்டினியால் வாடுபவனுக்கும், வேலை இல்லாதவனுக்கும் உடனே அவன் கையில் பணத்தைத் திணிக்க வேண்டுமென்பதாகும். இதுதான் 'நீர்மை' (Liquidity Demand) தேவை அல்லது உடனடி செலவு செய்யக் கூடிய பணத்தேவையாகும். அதாவது, நீர் எப்படி வைக்கப்படும் பாத்திரத்தின் அமைப்பைப் பெற்றுக் கொள்கிறதோ அதைப்போல், பணம் என்பது உடனே எந்தப் பண்டத்தையும் வாங்கி நுகர்வு செய்ய முடியும். இதைத்தான் நீர்மைத் தேவை என்று கூறுவர். மற்றொன்று மாற்று செய்ய வேண்டிய தேவை (Transaction Demand) அன்றாட அனைத்துத் தேவைக்கான மாற்றுக்கு வேண்டிய கையிறுப்புப் பணம், இறுதியாக ஊக வாணிபத்திற்கு உள்ள தேவையான பணம் (Speculative Demand)

ஆக, இங்கு பண்டங்கள் சேவைகளைப் பெறுவதற்கு மக்களுக்கு உடனடித் தேவை 'ரொக்கப் பணம்' கையில் கொடுக்க வேண்டும் என்பதே ஆகும்.

இதுதான் பொருளாதார மந்தத்திற்கு தேவையான உடனடி நடவடிக்கையாகும். இதைப் பண்டங்களை வாங்கி நுகர்வதற்கான பங்கீடு எனலாம் (Entitlement). அடுத்து வாங்கும் திறனைப் பெறுவதற்கு ஆயத்த வேலை வாய்ப்பினை முதலீட்டு மூலமாக தொழில் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதாகும். சுருங்கக் கூறின், வாங்கும் திறனை மக்களிடையே தொழில் வளர்ச்சி மூலமாக ஏற்படுத்துவது (Empowerment).


எனவே, நிதியமைச்சரின் சீர்திருத்தம் உடனடித் தேவையைப் பெருக்கும் வகையில் இல்லை. அதற்கு மாறாகத் தொழில் உற்பத்தியைப் பெருக்கி, வேலைவாய்ப்பை அளித்து, ஊதியத்தை வழங்கி வாங்கும் திறனைக் கூட்டுவதாகத் தனது திட்டத்தை அறிவித்துள்ளார். இது தலையைச் சுற்றி மூக்கை தொடுவதாகும். இது உடனடித் தீர்வுக்கு வழிமுறைகளைக் கூறவில்லை. இதனால் நிதியமைச்சரின் மீட்சி திட்டமில்லாம் வீழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் திட்டமாகிவிட்டது.

மேனாள் நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரத்தின் பார்வை.

அவர் கூறுவதாவது; இந்திய அரசு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.20 லட்சம் கோடி என்பது இந்தியப் பொருளாதார ஆண்டு உள்நாட்டு உற்பத்தியில் ரூ.200 லட்சம் கோடியில் 10 விழுக்காடு என்று சொல்வதில் உண்மை இல்லை என்று கூறுகிறார். அன்னாரது கணக்கின்படி, உண்மையில் இந்திய நிதியமைச்சர் செலவிடப்பட உள்ளத் தொகை ரூ.1.86 லட்சம் கோடி என்றும் அது உள்நாட்டு உற்பத்தியில் 0.91% என்று பறைசாற்றுகிறார்.


ஆக, அவர் கூறுவது என்னவென்றால் குறைந்த அளவு உள்நாட்டு உற்பத்தியில் 10% விழுக்காட்டிற்கு நிகராக ஓரளவிற்கு ரூ.10 லட்சம் கோடி உயர்த்தி நிதிச் செலவை அதிகரிக்க வேண்டும் என்று வாதிடுகிறார். ஆக இந்திய நிதியமைச்சர் கூறியுள்ளது போல் ரூ.20 லட்சம் கோடி அதாவது ஆண்டு உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ரூ.200 லட்சம் கோடியில் 10 விழுக்காடு என்பதில் உண்மையில்லை. ஆக அவர் செலவிட உள்ளதென்பது மொத்த ஆண்டு உற்பத்தி மதிப்பில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகும் என்பது திரு.சிதம்பரம் அவர்களின் வாதமாகும். எனவே திருமதி நிர்மலா அவர்களின் மீட்சி திட்டம் பொருளாதார மந்தத்திற்குத் தீர்வாகாது.


தீர்வு நடவடிக்கை என்பது ஏழைகள், புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்கள், குறு, சிறு, நடுநிலை வணிகர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், உழைப்பையே நம்பி உழலும் பாட்டாளி மக்கள் என அனைவரையும் உள்ளடக்கி, மீண்டும் திருத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டும்.

ஆக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆகஸ்ட் மாதம் வரை ரூ.6,500/- கொடுக்க வேண்டும். 'ஜன்தன்' கணக்கில் போடாமல் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகக் கிடைக்கும் வகையில் வழங்கப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள 26 கோடி குடும்பங்களில், 13 கோடி குடும்பங்கள் உடனடி பயன்பெறும். இதற்கு ஆகும் மொத்த செலவு ஆண்டிற்கு 70 ஆயிரம் கோடியைத் தாண்டாது. அதாவது இந்தியாவில் ஆண்டு வரவு, செலவு திட்டம் ரூ.30 லட்சம் கோடியாகும். எனவே, இத்திட்டத்தைச் செயல்படுத்துவது என்பது அரிதான செயலாகாது. இது மக்களிடையே நிலவிவரும் கரோனா மரண பயத்திற்கும், பொருளாதார பேரிடித் தாக்கத்திற்கும் மாமருந்தாக அமையும். தொழில் துறை வளர்ச்சி மீட்சிக்கும் ஏதுவாக அமையும். இன்றைய நிதியமைச்சரின் பொருளாதார மீட்சி செயல்திட்ட அறிவிப்பு என்பது, 'குடலேற்றம் தெரியாமல் கோடி ரூபாய் செலவு' செய்வதுபோலாகும்.



ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT