Advertisment

கரோனா அவலம்! சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் கதி?

Chennai Alandur athikesavan

Advertisment

கரோனா சிகிச்சைக்காக சென்னை மாநகராட்சியால் அழைத்துச் செல்லப்பட்ட முதியவர் ஒருவர் காணாமல் போயிருக்கும் விவகாரம் கோர்ட் படிகளில் ஏறியிருக்கிறது. அவரை கண்டுபிடிப்பதில் சென்னை மாநகராட்சி அக்கறை காட்டாத நிலையில் திணறிக்கொண்டிருக்கிறது சென்னை காவல்துறை.

சென்னை ஆலந்தூர் முத்தியால் தெருவைச் சேர்ந்தவர் 74 வயது முதியவர் ஆதிகேசவன். கரோனா பாசிட்டிவ் எனச் சொல்லி மாநகராட்சி ஊழியர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஒரு மாதம் ஆகியும் வீடு திரும்பவில்லை. எந்த மருத்துவமனையிலும் அவர் இல்லை. அவரைத் தேடி தேடி அலைந்து களைத்துப் போன ஆதிகேசவனின் குடும்பத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இதனால் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது இந்த விவகாரம்.

ஆதிகேசவனின் சகோதரர் மகள் வாணியிடம் இதுகுறித்து நாம் பேசிய போது, "என்னுடைய பெரியப்பாவுக்கு (ஆதிகேசவன்) சளித் தொல்லை அதிகமிருந்ததால் கடந்த மாதம் 9-ஆம் தேதி ஆலந்தூரிலுள்ள சென்னை மாநகராட்சியின் டெஸ்டிங் சென்டருக்கு அவரை கூட்டிக்கிட்டுப் போயிருந்தோம். டெஸ்டிங் சென்டரில் இருந்த சானிட்டரி இன்ஸ்பெக்டர் திவ்யா என்பவர், 10-ஆம்தேதி எனக்கு ஃபோன் பண்ணி ஆதிகேசவனுக்கு கரோனா தொற்று உறுதியாயிருக்குன்னு சொன்னாங்க.

Advertisment

11-ஆம் தேதி கார்ப்பரேசன் ஆம்புலன்ஸ் வந்தது. வீட்டுல பெரியப்பாவும் பெரியம்மாவும் மட்டும்தான் இருந்தாங்க. மாநகராட்சியில இருந்து வர்றோம்; ஆதிகேசவனுக்கு கரோனா இருக்குன்னு பெரியம்மாகிட்டே சொல்லிட்டு பெரியப்பாவை ஆம்புலன்சில் ஏத்திக்கிட்டுப் போயிட்டாங்க! ஃபோன்கூட அவர் எடுத்துக்கிட்டுப் போகலை. ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள டெஸ்டிங் சென்டரிலும் ஒரு டெஸ்ட் எடுத்திருக்காங்க. அந்த சென்டரில் இதற்கான பதிவு இருக்கு.

ஆனால், எங்க பெரியப்பாவை எங்கு அட்மிட் பண்ணியிருக்காங்கன்னு எந்தத் தகவலையும் கார்ப்பரேசன் அதிகாரிகள் சொல்லாததால, 11-ஆம் தேதி கார்ப்பரேசன் டெஸ்டிங் சென்டரை கான்டக்ட் பண்ணி நாங்கள் கேட்டப்போ, கீழ்ப்பாக்கத்தில் சேர்த்திருக்கிறோம்னு சொன்னாங்க. ரெண்டு நாள் கழிச்சி பெரியப்பாவை பார்க்க கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குப் போனோம். கேஸ் ரெஜிஸ்ட்ர் ஆகலைன்னு சொல்லிட்டாங்க.

இதனால, எங்களுக்கு பதட்டமும் பயமும் வந்துடுச்சு. ஆம்புலன்ஸ் ட்ரைவர் நெம்பரையாவது கொடுங்கன்னு கேட்டோம். எங்களுக்குத் தெரியாதுன்னு மருத்துவமனை நிர்வாகம் சொல்லிடுச்சு. ஆலந்தூர் மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் கார்ப்பரேசன் டெஸ்டிங் சென்டர்களில் விசாரித்த போதும் முறையான தகவல் தராமல், எங்களைத் துரத்தி அடிப்பதிலே குறியா இருந்தாங்க. சென்னை மாநகராட்சியின் தலைமையகமான ரிப்பன் பில்டிங்கிற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை.

எங்களுடைய கவலையையும் பயத்தையும் அதிகாரிகள் மதிக்கவே இல்லை. இந்த நிலையில், மீண்டும் கே.எம்.சி.யில் அழாத குறையா நாங்க விசாரிச்சப்போ, இங்க பெட் இல்லைன்னு ஆதிகேசவனை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு போகச்சொல்லிட்டோம்னு சொன்னாங்க, அங்கப் போய்க் கேட்டா, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அனுப்பிட்டோம்னாங்க.

ஓமந்தூரார் மருத்துவ மனையில் விசாரிச்சப்போ, ஆதிகேசவன் பேர்ல யாரும் இல்லை, ஸ்டான்லியில விசாரிச்சுப் பாருங்கன்னாங்க, ஸ்டான்லியில் விசாரிச்சோம். அங்குள்ள டாக்டர்களோ, இங்கு சேர்க்க முடியாதவங்களை புளியந்தோப்புக்கு அனுப்பிடுவோம். அங்க போய்ப்பாருங்கன்னாங்க. இப்படிச் சொன்ன இடமெல்லாம் அலைஞ்சு பார்த்தோம். ஆனா, எங்கேயுமே எங்க பெரியப்பா இல்லை. சரியான தகவலை அதிகாரிகளும் டாக்டர்களும் சொல்ல மறுத்தாங்க'’என்று கதறினார்.

அவரை ஆசுவாசப்படுத்திட்டு நம்மிடம் பேசிய ஆதிகேசவனின் மகன் மணிவண்ணன், "பரங்கிமலை போலீஸ் ஸ்டேசன்ல கம்ப்ளைண்டு கொடுத்தோம். அவங்க எடுத்துக்கலை. உடனே, கே.எம்.சி.யில் உள்ள ஜே-3 போலீஸ் ஸ்டேசன்ல புகார் பதிவு செஞ்சோம். அவங்களும் அக்கறை காட்டலை. தொடர்ச்சியா நாங்கள் வலியுறுத்திய நிலையில், ராஜீவ்காந்தி ஹாஸ்பிட்டலின் சி.சி.டி.வி. பதிவுகளை செக் பண்ணியபோது, ஆம்புலன்சில் இருந்து 12 மணி வாக்கில் இறங்குறாரு. அவரை ஓ.பி. வார்டுக்கு ட்ரைவர் அழைச்சிட்டுப் போறாரு. எங்கப்பா கையிலேயே கேஸ் ஃபைலை கொடுத்துட்டு ட்ரைவர் போயிடுறாரு.

ஓ.பி. வார்டுலேயே எங்கப்பா உட்கார்ந்திருக்காரு. ரெண்டு மணி நேரம் அங்கேயே இருக்காரு. பிறகு மருத்துவமனையில் வெவ்வேறு இடங்கள்ல உட்கார்ந்திருக்காரு. யாருமே அவரை கண்டுக்கவே இல்லை. இரவு 8.30 மணி இருக்கும். ஹாஸ்பிட்டல் காம்பவுண்டை விட்டுத்தட்டுத்தடுமாறி வெளியே போறாரு. இதெல்லாம் சி.சி.டி.வி.யில பதிவாகியிருக்கு.

வெளியே போனவருக்கு என்னாச்சு? இருக்காரா? இல்லையா?ன்னு கூட தெரியலை. நாங்களும் சென்னை முழுக்க தேடிப் பார்த்துட்டோம். எங்கப்பா, கிடைக்கலை. அதிகாரிங்க எங்களை அலையவிட்டாங்களே தவிர, சரியான பதிலே சொல்லலைங்க. கார்ப்பரேசன் ஆளுங்க அழைச்சிட்டுப் போன எங்கப்பாவை காணலை. இதுக்கு யார் பொறுப்பு? அதனால, ஹைகோர்ட்டுல கேஸ் போட்டிருக்கோம்'' என ஆவேசப்பட்டார்.

இந்தக் குடும்பத்திற்காக சட்ட ஆலோசனைகளை வழங்கிய சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகத்திடம் விசாரித்தபோது,

http://onelink.to/nknapp

"ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கிட்டத் தட்ட 9 மணி நேரம் ஒரு முதியவர் இருந்திருக்கிறாரு. டாக்டர்களும் செவிலியர்களும் கண்டுக்காதது மனிதாபிமானமற்ற செயல். கரோனா பாதிப்புன்னு சொல்லி முதியவரை அழைத்துச் சென்ற கார்ப்பரேசன் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள்தான் அவர் காணாமல் போனதற்கு பொறுப்பு. இப்படி எத்தனை அப்பாவிகள் காணாமல் போயிருக்கிறார்களோ? ஆம்புலன்சில் அழைத்துவரப்படும் நபர்களின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் எண்ணிக்கையையும் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். அப்போதுதான், அழைத்து வரப்படுபவர்களின் உண்மையான நிலை தெரிய வரும். ஆதிகேசவனுக்காக ஆட்கொணர்வு மனு போடப்பட்டிருக்கிறது. நியாயம் கிடைக்கும் என நினைக்கிறேன்'' என்கிறார்.

சிங்கப்பூரிலிருந்து விமானத்தில் வந்த சுந்தரவேல் என்ற இளம் வயதுக்காரரை தனியார் ஹோட்டலில் தங்கவைத்து கட்டணம் வசூலித்து, சரியாக கவனிக்காமல் மரணத்தில் தள்ளிய அரசு நிர்வாகம், முதியவர் ஆதிகேசவனையும் அலட்சியத்தால் காணாமல் செய்துள்ளது.

rajiv gandhi hospital Chennai corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe