Advertisment

“ராகுல் காந்தியின் இமேஜைக் குறைப்பதற்கு பல ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறார்கள்” - கே.சந்திரசேகரன்

Congress Speaker chandrasekaran commented on Smriti Irani

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானம், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி உரை குறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கருத்து உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் கலைப் பிரிவைச் சேர்ந்த கே.சந்திரசேகரன் நமக்கு அளித்த பேட்டி.

Advertisment

இது போன்ற மோசமான உரையை நான் கேட்டதில்லை. அதை கண்டிக்கிறேன் என்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்கு பிறகு சுமிருதி ராணி சொல்கிறாரே?

Advertisment

சுமிருதி ராணி அவர் எந்தத்துறை அமைச்சராக இருக்கிறார் என்று அவருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. ஏனென்றால், எங்காவது பெண்களுக்கு பிரச்சனை வரும் போதல்லாம் இவர்கள் தெருவில் இறங்கி போராட்டம் செய்கிறார்கள். ஆனால், மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்ற போது இவர் எங்கு இருந்தார்.இதே மணிப்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் சுமிருதி ராணி அந்த மாநில பெண்களுடன் நடனம் ஆடும் வீடியோ இன்றைக்கு வைரலாக இருக்கிறது. பெண்கள், குழந்தைகள் நல அமைச்சராக இருக்கும் இவர், என்ன குரல் கொடுத்தார் என்ற கேள்வி முதலில் எழுகிறது. அதே மாதிரி, அந்த மாநில மக்கள் மகளிர் ஆணையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் வந்து சேரவில்லை என்று சொல்வதும், அதன் மீது நடவடிக்கை எடுப்பதை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதும் கூட இந்த ஆட்சியில் தான் நடக்கிறது.

Congress Speaker chandrasekaran commented on Smriti Irani

ஒரு பெண்ணுக்கு அநீதி நடக்கிறது என்று தமிழ்நாட்டில் இருந்த குஷ்பூ முதற்கொண்டு அனைவரும் கொந்தளித்தார்கள். ஆனால், இன்றைக்கு மணிப்பூரில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது ட்விட்டரில் ஒரு பதிவு போட்டதுடன் அவர்கள் நிறுத்திவிட்டார்கள். மகளிர் ஆணையத்தின் வேலை அதோடு முடிந்துவிட்டது. இப்படி, இவர்கள் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்று நாம்நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சுமிருதி ராணி இது சம்மந்தமாக பேசுவதற்கே அறுகதை கிடையாது. பிரதமர், பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியையும், சோனியா காந்தியையும் இதை விட மோசமாக விமர்சனம் செய்திருக்கிறார்.அப்போது எல்லாம், வாய்மூடி மெளனமாக தான் இவர்கள் இருந்தார்கள். உன்னாவு, சந்திராஸ் போன்ற இடங்களில் பெண்கள் பாதிக்கப்பட்ட போதும் இவர்கள் குரல் கொடுக்கவில்லை. இப்போது மட்டும் தேர்ந்தெடுத்து பேசுகிறார்கள் என்பது தான் உண்மை.

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிற ராஜஸ்தானிலும் இது போன்று நடக்கிறது. அதை பற்றி பேச மாட்டார்கள். பா.ஜ.க ஆளும் மாநிலத்தை மட்டும் பேசுகிறார்கள் என்று சொல்கிறார்களே?

எந்த இடத்தில்கொடுமை நடந்தாலும் அதைப் பற்றி விவாதிக்க வேண்டும். அது தீர்க்கப்பட வேண்டும். பெண்களுக்கு எதிராக வன்முறை நடக்க கூடாது என்பது தான் அனைவருடைய விருப்பம். ஆனால், அப்படி நடக்கும் போது நடவடிக்கை என்ன என்ன எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் கேள்வி. இவர்கள் பார்த்துக் கொண்டு மட்டும் தான் இருக்கிறார்கள். ராஜஸ்தானில் நடந்ததையும், மணிப்பூரில் நடந்ததையும் எப்படி ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியும். அதே மாதிரி, மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தல் கலவரத்தையும், மணிப்பூரில் நடந்த இனக் கலவரத்தையும் எப்படி ஒன்றாக பார்க்க முடியும். இன்றைக்கு ஏன் மணிப்பூர் எரிகிறது என்று கேட்டால், அதற்கு முன் மற்ற மாநிலங்களில் நடக்கும் போது நீங்கள் பார்க்கவில்லை என்று சொல்வது பதில் கிடையாது.

எல்லாக் காலங்களிலும் இன்றைக்கு என்ன செய்தீர்கள் என்று கேட்டால், 60 வருடமாக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை என்று நேருவையும் இந்திரா காந்தியையும் தாக்குவார்கள். இவர்கள் 9 வருடங்களை கடந்துவிட்டார்கள் என்பது கூட இவர்களுக்கு நினைவில் இல்லை. இரட்டை என்ஜின் ஆட்சி எங்கு நடந்தாலும் அங்கு பாலாறும் தேனாறும் ஓடும் என்பதுதான் இவர்களுடைய பேச்சு. இப்போது, மணிப்பூரிலும் மத்தியிலும் பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. அது தான் இரட்டை என்ஜின் ஆட்சி.

இரட்டை என்ஜினில் ஒரு என்ஜின் பழுதாகிவிட்டால்மாற்றிவிட்டு தான் ஓட்டுவார்கள். ஆக, இரண்டு என்ஜினும் பழுதாகிவிட்டதா அல்லது ஒரு என்ஜின் பழுதாகிவிட்டதா என்பது தான் எங்களுடைய கேள்வி.

எதிர்க்கட்சிகள் உண்மையான ‘இந்தியா’ இல்லை. ஊழலைக் கண்டுபிடித்ததே காங்கிரஸ் தான் எனசுமிருதி ராணி சொல்கிறாரே?

பாராளுமன்றத்தில் ஒரு பக்கம் மோடி என்றும், மறு பக்கம் இந்தியா என்று கத்துகிறார்கள். 2024 ஆம் ஆண்டு அப்படித்தான் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன். மோடிக்கு எதிராக இந்தியா தான் இருக்கும். இதில் இந்தியா வெற்றி பெறும் என்பது என்னுடைய கருத்து. இந்தியா என்று பெயர் வைப்பதினாலேயே இவர்களுக்கு பதட்டம் வந்துவிட்டது. இரண்டு விஷயம் மோடிக்கும், பா.ஜ.க.வுக்கும் பதட்டம் ஏற்பட்டிருக்கிறது. முதலில், தனிப்பட்ட ராகுல் காந்தியை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிட்டால், காங்கிரஸ் கட்சியை அகற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். அதில் இருந்து, அவர்கள் தோல்வி அடைந்தார்கள். ராகுல் காந்தி இந்திய ஒற்றுமைப் பயணம் மூலமாக இந்தியா முழுவதும் ஒரு பிரபலமான தலைவராக உருவாகிவிட்டார். அதை அவர்கள் தடுக்க முடியவில்லை.

Congress Speaker chandrasekaran commented on Smriti Irani

அடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்று சேர மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார்கள். ஆனால், பாட்னாவில் கூட்டம் நடந்த போது அவர்களுக்கு பதட்டம் ஏற்பட்டது. பா.ஜ.க. வை வீழ்த்த வேண்டும் என்ற ஒரு புள்ளியில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேருகிறார்கள். பெங்களூரில் கூட்டம் நடந்த போது இன்னும் வலிமையாக இருக்கிறார்கள் என்று இவர்களை உடைப்பதற்கான பல வேலைகளை செய்தார்கள். ஆனால், அதில் தோல்வி அடைந்ததால் இந்தியா என்ற பெயரை தாக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஒன்பது வருட ஆட்சிக்குப் பிறகு அவர்கள் நியாயமாக செய்திருக்க வேண்டுமென்றால் நாங்கள், இந்த இந்த திட்டங்களை கொண்டு வந்தோம், இந்தியாவில் இந்த இந்த செயல்பாடுகளை கொண்டு வந்திருக்கிறோம் என்று சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல், பிரதமர் தலைமையில் நாடு வளர்ச்சி பெற்றிருக்கிறது, இவ்வளவு மக்களை வறுமை கோட்டிலிருந்து வெளியேற்றி இருக்கிறோம். இவ்வளவு மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறோம் என்று சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். ஆனால், இவர்கள் இன்னுமே காங்கிரஸ் ஆட்சியின் குறைகளை மட்டுமே தேடிக்கண்டுபிடித்து சொல்லி கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் ஆட்சி இல்லையென்றால் இந்த 60 வருட வளர்ச்சி எப்படி ஏற்பட்டிருக்கும். இன்றைக்குஇந்தியா முழுவதும் இருக்கக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியது காங்கிரஸ் ஆட்சி தானே. இன்றைக்கு சந்திரயான் போன்ற ஏவுகணையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், அதற்கான விதை காங்கிரஸ் போட்டது தானே. இந்த 10 வருடத்தில் மட்டும் ஏவுகணைத்தளங்கள் உருவாகி விட்டதா. அதனால், காங்கிரஸ் போட்ட பாதையில் இவர்கள் பயணிக்கிறார்கள். 2014 இல் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் அழித்துக் கொண்டிருப்பது தான் இவர்களுடைய சாதனையாக இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்வதற்காக தான் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தாலும் அது தோல்வியில் தான் அடையும் என்று அவர்களுக்கு தெரியும் என்று சொல்கிறார்களே?

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடையும் என்பது எல்லா எதிர்க்கட்சிகளுக்கும் தெரியும். 303 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட கட்சியின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகிறோம். எதற்காக என்றால் பாராளுமன்றத்தில் பிரதமரை வரவழைத்து அவர் பேச வேண்டும் என்பதற்காகத்தான். மேலும், மணிப்பூர் விவகாரம் குறித்து இந்தியா முழுக்க எல்லோருக்கும் தெரியவேண்டும். அதில் பல உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரக்கூடிய நிலைக்கு நம்முடைய இந்திய ஜனநாயகத்தைத்தள்ளி இருக்கிறது பா.ஜ.க.

எதிர்க்கட்சிகளின் நோக்கமே அவை நடத்தக்கூடாது என்ற கேள்வி எழுகிறது என்று சொல்கிறார்களே?

டெல்லி மசோதா குறித்து விவாதம் நடத்த அனுமதி கொடுத்திருக்கிறார்கள். விவாதம் நடந்தும் இருக்கிறது.நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து விவாதம் நடந்து இருக்கிறது. ஆளுங்கட்சி தான் சில விஷயங்களை பேசவிட கூடாது என்று நினைக்கிறார்கள். மணிப்பூர் என்ற வார்த்தையே எழுப்பக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

இந்தியா கூட்டணி வாரிசை நம்புகிறது. ஆனால் நாங்கள் தகுதியை நம்புகிறோம். தகுதிக்கு மட்டும் தான் இங்கு இடம் இருக்கிறது என்று சுமிருதி ராணி சொல்கிறாரே?

கிழக்கிந்திய கம்பெனிக்கும் இவர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. கிழக்கிந்திய கம்பெனி வியாபாரம் செய்ய வந்து இந்தியாவை பிடித்தார்கள். இவர்கள் ஆட்சியை பிடித்து வியாபாரம் செய்கிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சாதமானஒரே ஆட்சியாக இது இருக்கிறது. ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்கு எந்தத்தகுதியும் இல்லை. ரூ. 70,000 கோடி ஊழலை செய்தவர் அஜித் பவார் என்று ஒரு வாரம் முன்பு பிரதமர் பேசுகிறார். அடுத்த வாரம்,அவருடைய கூட்டணியில் இணைந்து மகாராஷ்டிராவில் துணை முதல்வராக அஜித் பவார் பதவி ஏற்கிறார்.

Congress Speaker chandrasekaran commented on Smriti Irani

வாரிசு அரசியல் என்று சுமிருதி ராணி சொல்கிறார். ஆனால், அவருக்கு பக்கத்தில் அனுராக் தாக்கூர் உட்கார்ந்திருக்கிறார். அனுராக் தாக்கூருடைய தந்தைதான் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர். மோடிக்கு வாரிசு இல்லை என்பதற்காக நாம் ஒன்றும் செய்யமுடியாது. அவருக்கு வாரிசு இருந்திருந்தால் யாராவது வந்திருப்பார்கள். ஒரு குடும்பத்தில் இருப்பவர்கள் அதே தொழிலில் வருவதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள கூடாது. அவர்கள் என்ன சாதனை செய்கிறார்கள்?. மக்களிடம் அங்கீகாரம் பெறுகிறார்களா? என்பதுதான் கேள்வி.

ராகுல் காந்தியே ராஜீவ் காந்தியுடைய மகன் என்பதற்காக வந்திருந்தால் கூட மக்கள் அங்கீகரித்து தானே எம்.பி.யாக இருக்கிறார். அதனால், மக்கள் அங்கீகரித்தால் மட்டுமே எம்.பி.யாகவோ, பிரதமராகவோ வர வாய்ப்பு இருக்கிறது. வாரிசு என்பதனாலேயே ஒரு அரசர் மாதிரி முடிசூட முடியாது. கர்நாடகாவில் இவர்கள் வாரிசு அரசியல் என்று சொல்லியே அது புளித்து போய்விட்டது. எஸ்.ஆர். பொம்மையை வைத்துக் கொண்டு வாரிசு அரசியல் என்று பேசிய போதே அங்கு இருக்கக்கூடிய மக்களே சிரித்தார்கள். அது மாதிரி 40% ஊழல் கட்சியாக கர்நாடகாவில் இருக்கும் போது இவர்கள் ஊழலைப் பற்றிப் பேசுகிறார்கள். அதையெல்லாம் மக்கள் புறம் தள்ளிவிட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் பேச்சு எந்தத்தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று சொல்கிறார்களே?

அவருடைய பேச்சை உன்னிப்பாக கவனித்தால் தான் அதனுடைய தாக்கம் தெரியும். இவர் எதுவும் பேசிவிடக் கூடாது என்ற பல கூச்சல், குழப்பங்களை பா.ஜ.கவினர் செய்தார்கள். ஆனால் அதன் பிறகும், பல விஷயங்களையும் எடுத்துரைத்தார். அவர் அதானியைப் பற்றிபேசப்போவதில்லை, மணிப்பூரை பற்றி மட்டும் பேசப்போகிறேன் என்று சொன்னபோதே அவர்கள் கொந்தளித்தார்கள். ஏனென்றால், அது தான் அங்கு இருக்கக்கூடிய சக்தி. அவருடைய சக்தி என்னவென்றால், ராகுல் காந்தி என்ன பேசப் போகிறார் என்றுஉலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இவருடைய பதவி நீக்கத்தைப் பல நாடுகள் முதற்கொண்டு கண்டித்தன. ஒரு நாட்டில் எதிர்க்கட்சியும் இருக்க வேண்டும். ஆனால், இவர்கள் எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் போல் ஒரே கட்சி என்ற ஆட்சி முறையை நோக்கி இவர்கள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

Congress Speaker chandrasekaran commented on Smriti Irani

உலகிலேயே மிகச்சிறப்பான ஜனநாயக நாடாக இருப்பது இந்தியா தான். பாகிஸ்தானை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், இம்ரான் கானை இன்றைக்கு சிறைக்கு தள்ளி அவரை 5 வருடம் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். இது ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எதிர்க்கட்சிகளை இப்படி தான் செய்வார்கள்.இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். அந்த நடைமுறை இந்தியாவில் கிடையாது. இந்தியா உண்மையான ஜனநாயகத்தை மதிக்கின்ற நாடு. பல கலாச்சாரம், பல மொழிகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கின்ற நாடு. ஆனால், இவர்கள் எல்லாவற்றையும் சிதைக்கின்ற வகையில் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் பா.ஜ.க. மீது உள்ள குற்றச்சாட்டு. இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஒன்பது வருடங்களில் இவர்கள் செய்ததை விட குற்றச்சாட்டுகளை தான் அதிகம் சொல்லி இருக்கிறார்கள். காங்கிரஸ் மீதும், நேரு மீதும், அவருடைய குடும்பத்தின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். ஒரு தலைவர் தன்னுடைய கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய செலவிடுவதைத்தான் நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால், மற்றொரு கட்சித் தலைவரின் இமேஜைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பல ஆயிரம் கோடி செலவு செய்தது தான் பா.ஜ.க.

ராகுல் காந்தியின் இமேஜைக் குறைப்பதற்கு அவரைப் பப்பு என்று சொல்வதோ அல்லது பல விஷயங்களில் ஈடுபடுவதற்கு பல ஆயிரம் கோடி செலவு செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதில் தோல்வி தான் கண்டிருக்கிறார்கள். அதே போல், மக்களிடத்திலும் இவர்களுக்கு தோல்வி நிச்சயம் என்பது தான் என்னுடைய கருத்து.

congress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe