/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1172.jpg)
தமிழக காங்கிரசும் கோஷ்டித் தகராறும் பிரிக்க முடியாதவை என்பார்கள். ஆனால், கே.எஸ். அழகிரி தலைவராகி நான்காண்டு காலம் நெருங்கும் நிலையில்இதுவரை மோதல்களைப் பார்க்காத சத்தியமூர்த்திபவனில்கடந்த 15-ந் தேதி நடந்த மோதல்கள், மண்டை உடைப்புகள் அதிர்ச்சி ரகம். மோதல்களுக்கு காரணமான எம்.எல்.ஏ. ரூபி மனோகரனுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மாவட்ட தலைவர்கள் ஒன்றிணைந்து நிறைவேற்றியுள்ள தீர்மானம்காங்கிரசில் ஏகத்துக்கும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தை தமிழகத்தில் தொடங்கி அனைத்து மாநிலங்களிலும் நடத்திவருகிறார் ராகுல்காந்தி. அவரது பயணத்தின் நினைவாக தமிழகத்திலுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தலா 100 இடங்களில் காங்கிரஸ் கொடியை ஏற்றவேண்டும் என முடிவு செய்திருக்கிறது தமிழக காங்கிரஸ்.
இதுகுறித்து ஆலோசிப்பதற்காக முன்னாள் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்களின் கூட்டத்தை கடந்த 15ந் தேதியும், மறுநாள் மாவட்ட தலைவர்களின் கூட்டத்தையும் நடத்தத் திட்டமிட்டிருந்தார் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி. அதன்படி 15ந் தேதி சத்தியமூர்த்தி பவனில் கூட்டம் நடந்தது. இதனையொட்டி காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவாளர்கள் பெருமளவில் சத்தியமூர்த்திபவனில் திரண்டிருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3546.jpg)
நெல்லையிலிருந்து நாலைந்து பேருந்துகளிலும், கார்களிலும் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் நாங்குநேரி எம்.எல்.ஏ.வுமான ரூபி மனோகரின் ஆதரவாளர்களும் வந்திருந்தனர். தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர்கள் தினேஷ்குண்டுராவ் மற்றும் ஸ்ரீவல்லபிரசாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள பவனுக்கு கே.எஸ்.அழகிரி வந்தபோது, அவரிடம் சில கோரிக்கைகளை முன்வைத்து நியாயம் கேட்டார்கள் ரூபிமனோகரனின் ஆதரவாளர்கள். அதற்கு அழகிரி பதில் சொல்லாமல் கடந்து சென்றுள்ளார். இதனால் அவருக்கு எதிரான கோஷங்கள் விண்ணதிர எதிரொலித்தன.
கூட்டம் முடிந்ததும் வீட்டிற்குச் செல்வதற்காக, சத்தியமூர்த்தி பவனை விட்டு கே.எஸ். அழகிரி வெளியே வர, அவரை மறித்து கெரோ செய்தது ரூபி மனோகரன் கோஷ்டி. இதனால் அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், ரூபிமனோகரனின் ஆதரவாளர்களுக்கும் தள்ளுமுள்ளு, மோதல்கள் வெடிக்க, உருட்டுக்கட்டைகளால் தாக்கிக்கொண்டனர். இதில் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. சிலருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பவனில் நடந்த இந்த அடிதடி மோதல்களால் அந்தப் பகுதியே போர்க்களமானது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_383.jpg)
இந்த களேபரம் காங்கிரசில் கடுமையாக எதிரொலிக்க, மறுநாள் (16-ந்தேதி) மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில், கலவரத்துக்கு காரணமான ரூபிமனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதனால் அழகிரி கோஷ்டியும் ரூபி கோஷ்டியும் உறுமிக்கொண்டிருக்கின்றன.
இதுகுறித்து ரூபிமனோகரனிடம் கேட்டபோது, “காங்கிரசுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்க உத்தரவிடப்பட்டிருந்தது. நான் எம்.எல்.ஏ.வாக உள்ள நாங்குநேரி தொகுதியில் புதிய உறுப்பினர்களாக 35 ஆயிரம் பேரை காங்கிரசில் சேர்த்தோம். இதற்காக வீடு வீடாக, தெருத்தெருவாக அலைந்து மக்களை சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தோம். அந்த வகையில், தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் சேர்த்தது நாங்கள்தான். அப்படியிருக்கையில் உள்கட்சி தேர்தலின்போது, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர், வட்டார தலைவர்கள் தேர்வில் என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை கே.எஸ்.அழகிரி. ‘அதிகமாக உறுப்பினர்களைச் சேர்க்க உண்மையாக உழைத்தவர்களுக்குத்தான் பதவிகளில் முன்னுரிமை தரப்பட வேண்டும்' என ஏற்கனவே ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-4_114.jpg)
ஆனால், கே.எஸ்.அழகிரியும், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமாரும் ராகுலின் வலியுறுத்தல்களுக்கு மாறாக நடந்துவருகிறார்கள். காங்கிரசின் மாவட்டத் தலைவர்கள் 76 பேரில் 20 பேரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் அழகிரியின் ஆதரவாளரான செங்கம் குமார் என்பவர். இவரால் மாவட்டத் தலைவராக்கப்பட்டவர் தான் ஜெயக்குமார். அந்த வகையில் கே.எஸ்.அழகிரி, செங்கம் குமார், ஜெயக்குமார் ஆகிய மூவர் கூட்டணி இணைந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாங்குநேரி தொகுதியில் 2 வட்டாரத் தலைவர்களை புதிதாகப் போட்டுள்ளது. தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், கட்சியின் பொருளாளராகவும் நான் இருக்கிறேன். என்னிடம் கலந்தாலோசிக்க வேண்டுமா? வேண்டாமா? என்னிடம் எதையும் விவாதிக்காமலேயே 2 பேரை நியமித்துவிட்டனர். இதில் ஒருவர், சரத்குமார் கட்சியிலிருந்து சமீபத்தில்தான் காங்கிரசுக்கு வந்தவர். மற்றொருவர், திருநாவுக்கரசர் தலைவராக இருந்தபோது காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டவர். அப்படிப்பட்ட இருவர் வட்டாரத் தலைவர்களாக நியமிக்கப்பட்டதைக் கண்டு, கட்சிக்காக காலம் காலமாக உழைத்த தொண்டர்கள் அதிருப்தியடைந்தார்கள், ஆவேசப்பட்டார்கள். "10 உறுப்பினர்களைக்கூட காங்கிரசுக்கு சேர்க்காத இவர்களுக்குப் பதவியா?' என நொந்து போனார்கள். சென்னையில் இருந்த என்னைத் தொடர்புகொண்டு, ‘மாவட்டத்தில் சாதி பாலிடிக்ஸ் நடக்குது. அழகிரியிடம் இதற்கு நியாயம் கேட்கணும். சென்னைக்கு கிளம்பி வருகிறோம்’ என ஆவேசமாகக் கேட்டார்கள்.
கட்சியில் தங்களுக்கு அநீதி நடந்தால் தலைவரிடம்தான் அவர்கள் முறையிட முடியும் என நான் நினைத்ததால் அவர்களை வரவேண்டாம் என என்னால் தடுக்க முடியவில்லை. சத்தியமூர்த்திபவனுக்கு வந்தார்கள். மாலையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த கே.எஸ். அழகிரியிடம், நடந்ததைச் சொல்லி நியாயம் கேட்டார்கள். "விசாரிக்கிறேன்' எனச் சொல்லி அவர்களை சமாதானப்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கூட கேட்க விரும்பாத அழகிரி, நியாயம் கேட்க வந்தவர்களில் ஒருத்தரை கன்னத்தில் அறைந்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். இதனால் ஏகத்துக்கும் பரபரப்பாக... ஒரே தள்ளுமுள்ளு நடந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-6_39.jpg)
உள்ளே கூட்டம் நடக்குது; வெளியே ஒரே கூச்சல்; கலாட்டா! அவர்களது கோரிக்கையை தலைவர் கேட்பார் என சொல்லி அவர்களை உள்ளே அழைத்துச் சென்று ஒரு ஹாலில் உட்கார வைத்தனர். கூட்டம் முடிந்ததும் தங்களிடம் அழகிரி பேசுவார் என அவர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர்களைச் சந்திக்காமல் அழகிரி வீட்டுக்கு கிளம்பிய போது, அதனைத்தெரிந்து ஓடோடி வந்து அவரிடம் மீண்டும் நியாயம் கேட்க... பயங்கர கோபமடைந்த அவர், அவரது ஆதரவாளர் ரஞ்சன்குமாரிடம், "இவர்களை அடிச்சித் துரத்துங்க...' என சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். அழகிரியே சொல்லிட்டதால ரஞ்சன்குமாரின் ஆட்கள், நியாயம் கேட்க வந்தவர்களை உருட்டுக்கட்டைகளால் அடித்தனர். எங்கு பார்த்தாலும் அலறல் சத்தம். பலருக்கும் பலத்த காயம். சிலருக்கு மண்டை உடைந்தது. அழகிரி சொன்னதால்தான் இந்தக் கலவரமே வெடித்தது. சொந்தக் கட்சிக்காரர்களையே அடித்து விரட்டுங்கன்னு சொன்ன ஒரே தலைவரும், கட்சிக்குத் தொடர்பில்லாத ரவுடிகளை கட்சி அலுவலகத்துக்குள் வர அனுமதித்ததும் அழகிரிதான்.
500, 600 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்திருக்கும் தொண்டர்களின் குறைகளைக் கேட்டு உரிய பதிலைச் சொன்னால் அழகிரி எங்கே குறைந்துவிடப்போகிறார்? ஒரு 5 நிமிஷம் அவர்களிடம் பேசியிருந்தாலே போதும். பிரச்சினையே வந்திருக்காது. ஆனா, இதற்கு நான்தான் காரணமென அழகிரி ஆட்கள் பரப்பிவிட்டுள்ளனர். மோதல்களுக்கு நான் காரணமில்லை. எதையும் சந்திக்கத்தயாராக இருக்கிறேன்'' என்கிறார் ஆவேசமாக.
அழகிரியின் ஆதரவாளரும் எஸ்.சி./எஸ்.டி. பிரிவு தலைவருமான ரஞ்சன்குமாரிடம் கேட்டபோது, “அடிச்சி நொறுக்கணும்னு ப்ளானோடு வந்தது அவர்கள்தான். அவர்கள் வந்த பஸ், கார்களில் நிறைய உருட்டுக்கட்டைகள் இருந்தன. அப்படின்னா ப்ளானோடு வந்திருக்கிறார்கள்னுதானே அர்த்தம்? உருட்டுக்கட்டைகளைக் கொண்டு அவர்கள்தான் தாக்கினார்கள். குடிச்சிட்டு வந்திருந்தார்கள். அவர்களில் 30 பேர் கட்சிக்காரர்கள். மற்ற 250 பேரும் ரவுடிகள். காசு கொடுத்து அழைச்சிட்டு வந்திருக்காங்க. மோதல் நடந்தப்போ, எல்லோரையும் அமைதிப்படுத்தி தடுத்து நிறுத்தியது நான்தான். நானோ என்னுடைய ஆட்களோ யாரையும் தாக்கவே இல்லை. தடுக்கப்போன எங்களுக்குத்தான் அடி விழுந்தது. என்னைக் கொல்லும் கொலைவெறி அவர்களிடம் இருந்தது. என்னைத் தாக்குகிறார்கள் என தெரிந்ததும் என் ஆட்கள் எதிர்த்தாக்குதல் நடத்தினார்கள். இந்த மோதல்களுக்கு காரணம் ரூபி மனோகரன்தான். அவரது உத்தரவில்லாமல் நெல்லையிலிருந்து கிளம்பி வந்து கட்சி அலுவலகத்தில் அடிதடியில் இறங்க அவர்களுக்குத்துணிச்சல் வந்திருக்காது. கட்சித் தலைவர் பதவியிலிருந்து அழகிரியை மாற்ற பலரும் துடிக்கிறாங்க. ஆனா, முடியலை. அகில இந்தியத்தலைவராக மல்லிகார்ஜுனகார்கே வந்திருப்பதால் இதன் பிறகாவது மாற்றுவார்கள் என எதிர்பார்த்தனர். அதுவும் நடக்காததால், அழகிரியின் பெயரைக் கெடுக்க இப்படிப்பட்ட அடிதடி மோதல்களை உருவாக்கியிருக்கிறார் ரூபி மனோகரன். தேர்தல் மூலம் அந்த வட்டாரத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் அழகிரி என்ன செய்ய முடியும்?” என்கிறார் அழுத்தமாக.
சம்பவத்தின்போது மோதலில் சிக்கிக் கொண்ட அம்பாசமுத்திரம் முன்னாள் வட்டார தலைவர் சங்கரநாராயணனிடம் பேசியபோது, “நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவராக ஜெயக்குமாரை, அழகிரி போட்டதிலிருந்தே நெல்லை காங்கிரசில் தினமும் பிரச்சினைதான். இவர் அ.தி.மு.க.விலிருந்து காங்கிரசுக்கு வந்தவர். கட்சிக்காக உழைப்பவர்களுக்கும், உழைக்காதவர்களுக்குமிடையே நடக்கும் யுத்தம் இது. உழைக்காமல் மற்ற கட்சியிலிருந்து வருபவர்களுக்கு பதவி கொடுக்கப்படுவதே மோதல்களுக்கு அடிப்படை. பாதிக்கப்பட்ட நாங்கள், தலைவர் அழகிரியிடம் நியாயம் கேட்கிறோம். அதற்குரிய பதிலை அவர் சொல்லலாம் அல்லது விசாரிக்கிறேன் எனச் சொல்லலாம். எதையும் சொல்லாமல் எதேச்சதிகாரமாக நடந்துகொள்கிறார் அழகிரி. அப்படி நடந்துகொள்வதால் வந்த மோதல்தான் இது. அவர் தலைவராக நியமிக்கப்பட்டபோது, அவரைத் தவிர அவர் பின்னால் ஒரு ஆள் வரவில்லை. ஆனா, இன்னைக்கு கட்சியில் எல்லா இடத்திலும் அவரது சாதி ஆட்களுக்கு பதவி கொடுத்து தனக்கென ஒரு கோஷ்டியை உருவாக்கிவிட்டார். அழகிரியின் கண் அசைவினால்தான் மிகப்பெரிய தாக்குதல் நடந்தது. பவனில் நடந்த மோதல்களுக்கு அழகிரியும் அவரது அடியாட்களும்தான் காரணமே தவிர, ரூபிமனோகரன் கிடையாது. தலைவர் பதவியிலிருந்து அழகிரியை மாற்றப்போகிறார்கள். அதற்காகத்தான் கட்சிக்கு இப்படி களங்கத்தை உருவாக்க இதையெல்லாம் செய்கிறார் அழகிரி” என்று குற்றம்சாட்டுகிறார் சங்கரநாராயணன்.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் விவகாரங்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுனகார்கே என தேசிய அளவில் கொண்டு போகப்பட்டுள்ளது. இந்த நிலையில், 16-ந்தேதி நடந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் ரூபி மனோகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால்தான் கூட்டத்துக்கே வருவேன் என கே.எஸ். அழகிரி மிரட்டியதால், தீர்மானம் நிறைவேற்ற மாவட்டத் தலைவர்கள் சம்மதித்தனர். அதற்காக கையெழுத்தும் பெறப்பட்டது. இதனையடுத்தே கூட்டத்துக்கு வந்தார் அழகிரி. காங்கிரசிலுள்ள 76 மாவட்டத் தலைவர்களில் 69 பேர் கூட்டத்துக்கு வந்திருந்தனர். காங்கிரஸ் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய ரூபிமனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் தீர்மானத்தில் 69 பேரும் கையெழுத்திட்டதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது இந்த தீர்மானம் ஒழுங்கு நடவடிக்கை குழு மூலமாக அழகிரியிடம் கொடுக்கப்பட்டு, மேலிட பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் வழியாக கார்கேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எம்.எல்.ஏ.வாக ரூபிமனோகரன் இருப்பதால் சஸ்பெண்ட் நடவடிக்கையை மேலிடம் எடுக்காது என்பதால், ரூபியிடமிருக்கும் மாநில பொருளாளர் பதவியைப் பறிக்க அழகிரி தரப்பு டெல்லியில் விளையாடத் தொடங்கியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)