ADVERTISEMENT

"அதிமுக ஆட்சி இருக்கும் நினைப்பிலேயே மோடி இருக்கிறார்... நடைபெறுவது திமுக ஆட்சி" - செல்வப்பெருந்தகை பேச்சு!

04:55 PM Feb 09, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT


நீட் விவகாரம் தமிழகத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை கிட்டதட்ட 5 மாதங்களாக நடவடிக்கை எடுக்காமல் இருந்த ஆளுநர், கடந்த வாரம் தமிழக அரசுக்கே அதனை திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பியதோடு மட்டுமல்லாமல் இந்த மசோதா தமிழக மக்களுக்கு எதிராக இருப்பதாகவும் அவர் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, அவர் தெரிவித்ததாவது, "ஆளுநர் செயல்படுவதற்கு என்று சில வழிமுறைகள் இருக்கிறது. அதன்படிதான் அவர்கள் செயல்பட வேண்டும். அதில் தவறு ஏற்படும் பட்சத்தில் அவர்களை நோக்கி கேள்வி எழுவதை யாராலும் தடுக்க இயலாது. இந்த மசோதா என்பது கல்வி உரிமை சம்பந்தப்பட்டது. அதாவது பொதுப்பட்டியலில் வரக்கூடியது. மாநில பட்டியலில் உள்ளதை பற்றி மாநில அரசு சட்டம் இயற்றினால் அதைப்பற்றி கேள்வி கேட்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. இது அரசியல் அமைப்பு சட்டம் 201 பிரிவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆனால் பிரிவு 200ல் தெளிவாக பொதுப்பட்டியலில் உள்ளவற்றை பற்றி ஆளுநர் எந்த விளக்கமும் கேட்கக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. அவர் நேரடியாக அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டும். அதைத்தாண்டி இதில் ஆளுநருக்கு வேறு எந்த வேலையும் கிடையாது. இதில் இறுதி முடிவை குடியரசுத்தலைவர் எடுப்பார். இதில் எவ்வித விளக்கமோ, தயக்கமோ ஆளுநருக்கு ஏற்பட தேவையில்லை. குறிப்பாக ஏ.கே ராஜன் அறிக்கை தவறாக இருக்கிறது என்று கூறுவதெல்லாம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. குறிப்பாக இதைவிட அதிக தரவுகளை தமிழக அரசு ஆளுநருக்கு தந்திருக்க வேண்டும் என்று அதிமுக கூறியதாக சொல்கிறீர்கள். வேறு என்ன தரவுகளை அவர்கள் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்று கூற வேண்டும். இன்றைக்கும் ஏ.கே ராஜன் அறிக்கை பொதுவெளியில் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அதைப் படித்து அதன் முக்கிய சாராம்சத்தை அறிந்துகொள்ள முடியும். எனவே தட்டிக்கழிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர் அவர்கள் எதை வேண்டுமானாலும் கூறுவார்கள். ஆனால் அறிவார்ந்த தமிழக மக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக இருந்ததைப் போல இந்த அரசு இருக்கும் என்று நினைக்கிறார்கள். இது திமுக அரசு, மோடி அவர்கள் இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அதிமுக அரசு நினைவிலேயே தமிழகத்தை அவர்கள் அணுகக் கூடாது. எனவே மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை வைத்துக்கொண்டு விளையாடக்கூடாது. ஆளுநருக்கு தகுந்த அறிவுரை கூறி, அவரை திரும்பப்பெற முயற்சிக்க வேண்டும். இந்த நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டு வந்ததை போல இன்றைய பாஜக தலைவர் கூறியுள்ளதை பற்றிக் கேட்கிறீர்கள். அண்ணாமலைக்கு அரசியலும் தெரியவில்லை, படிக்கவும் தெரியவில்லை. நிறைய படித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று தான் நாம் அண்ணாமலைக்கு அறிவுரை கூற வேண்டும். எனவே வாயில் வந்ததையெல்லாம் ஆதாரம் இல்லாமல் அவர்கள் பேசக்கூடாது. இந்த நீட் விவகாரத்தை பொறுத்த வரையில் முதல்வர் நல்ல முறையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து வருகிறார். நீட் தேர்வு விவகாரத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT