ADVERTISEMENT

பழி சுமந்த திமுக... பாடாய் படுத்திய காங்கிரஸ்!

03:23 PM Dec 19, 2017 | Anonymous (not verified)



2006 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மைனாரிட்டி அரசாங்கத்தை கலைஞர் வெற்றிகரமாகவே நடத்தினார்.

முதல்வராக பொறுப்பேற்றவுடன், 20 ரூபாய்க்கு 20 கிலோ அரிசி என்ற உத்தரவில் முதல் கையெழுத்திட்டார் கலைஞர் . இது தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக கூறப்பட்டது. ரூபாய்க்கு 3 படி அரிசி போடுவதாக கூறி ஆட்சியை பிடித்த திமுக, 20 ரூபாய்க்கு 20 கிலோ அரிசி என்று பொய் சொல்கிறது என்று எதிர்க்கட்சிகள் கூறின. இது சாத்தியேமே இல்லை என்று ஜெயலலிதா கூறினார். ஆனால், அதை சாத்தியமாக்கினார் கலைஞர்.

தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, குடும்ப அட்டை வைத்திருந்த அனைவருக்கும் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும், கேஸ் சிலிண்டருடன் அடுப்பும் இலவசமாக கொடுக்கப்பட்டன. இந்த இலவசப் பொருட்களை ஏழைகள் மட்டுமின்றி, வசதியானவர்களும் வந்து வரிசையில் நின்று வாங்கிச் சென்றது கடும் விமர்சனத்தை உருவாக்கியது.





பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் நூற்றாண்டைக் கொண்டாடிய கலைஞர், அண்ணாவின் நினைவாக 15 ஆயிரம் கிராங்களில் ஊராட்சி நூலகங்களை உருவாக்க உத்தரவிட்டார். தலைநகர் சென்னையில் ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் முதன்மையானதாக அமையும்படி அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கட்ட 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். 2010 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.



அண்ணா நூற்றாண்டு நூலகம்

தமிழக சட்டமன்றத்துக்கு புதிய கட்டிடத்தை கட்டவும், பொதுமக்கள் எளிதில் வந்துபோகிற இடத்தில் அமையவும் திட்டமிட்ட கலைஞர், 2008 ஆம் ஆண்டு அதற்கான வடிவமைப்புக்கு உலகளாவிய டெண்டர் வெளியிடச் செய்தார். புதிய அமைப்புடன் பொலிவான தோற்றத்துடன் அண்ணாசாலையில் அரசினர் தோட்டத்தில் அமைந்த அந்தக் கட்டிட பணிகளை ஆர்வத்துடன் கவனித்த கலைஞர், 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மன்மோகன் சிங்கை வைத்து திறக்கச் செய்தார்.



சட்டமன்றத்துக்கு புதிய கட்டிடம்

சாதனைகள் இவையென்றால், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையிலான சண்டை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரமடைந்தது கலைஞருக்கு மிகப்பெரிய இடையூறாக அமைந்தது.

திமுக பங்கேற்றுள்ள மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு பகிரங்கமாகவே உதவியது. சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் உதவியோடு விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு தீவிரமான தாக்குதலை தொடுத்திருந்தது.

இந்தத் தாக்குதல் தொடங்கிய பின்னணியைக் கொஞ்சம் தெரிந்துகொண்டால் நிலைமையை புரிந்துகொள்ள உதவும்.

2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்க இரட்டைக் கோபுரத்தை அல்காய்தா அமைப்பினர் விமானங்களை கொண்டு மோதி அழித்தனர். இந்த பயங்கரவாத நடவடிக்கை உலகையே பதற்றமடையச் செய்தது. இதையடுத்து உலகம் முழுவதும் இயங்கும் பல தீவிரவாத அமைப்புகளை அமெரிக்காவும் உலக நாடுகளும் தடை செய்தன.

அவற்றில் விடுதலைப் புலிகள் அமைப்பும் அடங்கும். இதையடுத்து விடுதலைப் புலிகளுக்கு உதவிகள் கிடைப்பது தடைப்பட்டது. ஆயுத போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இந்நிலையில்தான் இலங்கையில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் ஆட்சி அமைந்தது. அவர் இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்த முன்வந்தார். அதற்கு முன்னதாக சண்டைநிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.

நார்வே குழு தலைமையில் அமைதிப் பேச்சு பலகட்டமாக பல நாடுகளில் நடைபெற்றது. இந்த பேச்சுகளின் அடிப்படையில் போலீஸ் அதிகாரம் தவிர்த்து விடுதலைப் புலிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ரணில் விக்கிரமசிங்கே ஏற்றுக் கொண்டார்.

கிட்டத்தட்ட தன்னாட்சி உரிமையை கொடுக்கும் நிலைக்கு இலங்கை அரசு முன்வந்தது. இந்நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்கேவை சந்திரிகா பதவிநீக்கம் செய்தார். அந்தக் குழப்பத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

2005 ஆம் ஆண்டு தேர்தலில் ராஜபக்சேவும் ரணில் விக்கிரமசிங்கேவும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் தமிழர் பகுதியில் இருப்பவர்கள் ரணில் விக்கிரமசிங்கேவை ஆதரித்து வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் கோரிக்கை ஏற்பேன். தமிழர் பகுதிகளில் அமைதி திரும்ப உழைப்பேன் என்று ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகளை ஒழிப்பேன் என்று ராஜபக்சே கூறியிருந்தார். அவருக்கு புத்த பிக்குகள் ஆதரவு அளித்திருந்தனர்.

இந்நிலையில் இலங்கை பொதுத்தேர்தலில் தமிழர் பகுதிகளில் யாரும் வாக்களிக் கூடாது என்று பிரபாகரன் அறிவித்தார். வாக்குப்பதிவன்று பல இடங்களில் புலிகள் அமைப்பினர் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுத்தனர். இதையடுத்து சிறிதளவு வாக்கு வித்தியாசத்தில் ராஜபக்சே வெற்றிபெஹ்றார். அவருடைய வெற்றிக்கு மறைமுகமாக விடுதலைப்புலிகள் காரணமாக இருந்ததாக விமர்சனம் எழுந்தது.

தேர்தலுக்கு முன்னரே, விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கிழக்குப் பகுதியின் தளபதியாக இருந்த கருணா விலகினார். இது விடுதலைப்புலிகளுக்கு மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்டது. அவர் மூலமாக புலிகள் அமைப்பின் உண்மையான பலத்தை இலங்கை அரசு தெரிந்துகொண்டது.

இத்தகைய நிலையில்தான் அமைதிப் பேச்சிலிருந்து புலிகள் விலகினார்கள். இலங்கை ராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவை கொலைசெய்ய புலிகள் திட்டமிட்டனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனும் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது. 2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாவில் ஆறு அணையின் மதகுகளை புலிகள் அடைத்தனர். அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள 15 ஆயிரம் கிராமங்களின் தண்ணீர் வினியோகம் இதனால் பாதிக்கப்பட்டது.

புலிகளின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, 2006 ஆகஸ்ட் மாதம் இலங்கை ராணுவம் முழு வீச்சிலான தாக்குதல் தொடங்கியது.

மாவில் ஆறு அணையைக் கைப்பற்றிய இலங்கை ராணுவம் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து பல பகுதிகளை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 1988ல் இந்திய ராணுவத்தால் கைப்பற்ற முடியாத தொப்பிகலாவையே 2007 ஜூலையில் இலங்கை ராணுவம் கைப்பற்றியது.

புலிகளின் பலம் அந்த அளவுக்கு வீக்காகவே இருந்தது. புலிகளின் முடிவால்தான் போர் தொடங்கியது என்பதை மறைத்து, இந்திய ராணுவம் உதவுவதால் புலிகள் தோற்பதாகவும், திமுக இதை ஆதரிக்கிறது எனவும் தமிழகத்தில் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

வடக்குப் பகுதிக்குள்ளும் நுழைந்த இலங்கை ராணுவம், விமானப்படை உதவியுடன் கடுமையான தாக்குதலை தொடர்ந்தது. பிரபாகரன் மறைவிடத்தின் மீது விமானப்படை குண்டு வீசியதில் பிரபாகரன் காயமடைந்தார் எனக் கூறப்பட்டது.

அடுத்தடுத்து புலிகளின் முக்கிய தலங்களை இலங்கை ராணுவம் கைப்பற்றிவந்தது. புலிகள் தோல்விமுகத்தில் இருந்தார்கள். 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி, புலிகளின் அரசியல்பிரிவுச் செயலாளர் தமிழ்செல்வன் விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அவருடைய மரணச் செய்தி கிடைத்ததும், முதல்வராக இருந்த கலைஞர், இந்திய இறையாண்மை குறித்தோ, தடைசெய்யப்பட்ட இயக்கம் என்ற எண்ணமோ சிறிதுமின்றி நெஞ்சை உருக்கும் இரங்கல் கவிதை எழுதினார்.

இதையடுத்தே தமிழகத்தில் புலிகள் ஆதரவுக் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்தது. அரசாங்கமே புலிகளையும் ஈழத்தமிழர்களையும் பாதுகாக்க மாநில அரசாங்கமே வேண்டுகோள் விடுக்கும் நிலை உருவானது. ஆனால், கலைஞரின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்பதுபோல கேட்டுக்கொண்டே இலங்கை அரசுக்கு செய்யும் உதவியையும் தொடர்ந்தது.





இலங்கையில் ராணுவத்தின் கோரத்தாண்டவம் உச்சத்திற்கு சென்றது. அந்த நிலையில்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் இலங்கை இனப்பிரச்சனையை முக்கிய பிரச்சாரமாக அதிமுகவும், பாஜகவும் பயன்படுத்தின.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் அணியில் இருந்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட்டுகள் இந்தமுறை அதிமுக அணிக்கு மாறியிருந்தார்கள். பாமகவும் மதிமுகவும்கூட அதிமுக அணிக்கு மாறினார்கள். திமுகவுடன் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே அணி சேர்ந்தன.

கடுமையான எதிர்ப்பிரச்சாரத்துக்கு மத்தியில் திமுக கூட்டணியில் திமுக 18 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும், விசிக தரப்பில் திருமாவளவனும் வெற்றிபெற்றனர். அதிமுக தரப்பில் அதிமுக 9 இடங்களிலும், மதிமுக, சிபிஐ, சிபிஎம் தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன.

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் விடுதலைப்புலிகளும், ஈழத்தமிழர்களும் ஆயிரக்கணக்கில் முற்றுகையிடப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தின் கடைசித் தாக்குதலில் பிரபாகரனும் புலிகள் அமைப்பின் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. ஏராளமான அப்பாவிகளும் கொல்லப்பட்டனர்.

இந்தத் தேர்தலில் தேமுதிகவும் பாஜகவும் தனித்தனியாக போட்டியிட்டு அமைத்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

மீண்டும் மத்தியில் இரண்டாவது முறையாக திமுக ஆதரவுடன் காங்கிரஸ் அரசு அமைந்தது. இந்தமுறை காங்கிரஸ் கட்சி தனது சொந்த வெற்றியை அதிகரித்திருந்தது. அதனால், கூட்டணிக் கட்சிகளிடம் பெரியண்ணன் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளத் தொடங்கியது. மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் திமுக அரசு நடந்துகொண்டிருந்தது.

2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுக பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழ் மொழியை செம்மொழியாக அறிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக 2006 ஆம் ஆண்டு தமிழக அரசுப் பொறுப்பை ஏற்ற திமுக தமிழ் செம்மொழி அந்தஸ்த்து பெற்றதற்கான சர்வதேச மாநாடு ஒன்றை நடத்த முயற்சி மேற்கொண்டது.

2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை திமுக அரசு நடத்தியது. இந்த மாநாட்டை அதிமுகவும், மதிமுகவும் புறக்கணித்தன.

தமிழகத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை திமுக பெற்று வந்தது என்றாலும், 2ஜி அலைக்கற்றை விவகாரம் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் சவாலாக மாறியது. அந்த அளவுக்கு அந்த விவகாரம் பூதாகரமாக ஊதப்பட்டது. 2ஜி அலைக்கற்றைகளை ஏலம் விட்டிருந்தால் அரசுக்கு 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்திருக்கும் என்றும், முதலில் வந்தோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்ததால் இந்தத் தொகை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் தலைமைக் கணக்கு அதிகாரி அறிக்கை வெளியிட்டார்.

இதை ஊழலாக ஊதிப்பெருக்கியது மீடியா. இந்த விவகாரத்தில் திமுகவின் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. ஆகியோர் சாதுர்யமாக சிக்க வைக்கப்பட்டனர். சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

ஆனால், முறையாக வழக்கு நடத்த முடியாமல் சிபிஐ திணறியது. குற்றம்சாட்டப்பட்டோர் வாய்தா வாங்குவதற்கு பதிலாக இந்த வழக்கில் சிபிஐ வழக்குறைஞர்களே வாய்தா வாங்கினார்கள். 1 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் இழப்பு என்று முதலில் சொன்னவர்கள் குற்றப்பத்திரிகையில் 30 ஆயிரம் கோடி இழப்பு என்று குறிப்பிட்டார்கள்.

வழக்கின் தீர்ப்பு எதுவானாலும், இந்த வழக்கு இந்திய அரசியல் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு எதிராக இருந்தாலும் ஆதரவாக இருந்தாலும் இருதரப்பினரும் அப்பீல் போவார்கள் என்பதால் இப்போதைக்கு இந்தப் பிரச்சனைக்கு முடிவு இருக்காது என்று மட்டும் சொல்லலாம்.

இந்தப் பிரச்சனை உச்சத்தில் இருந்த நிலையில்தான் 2011 தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கட்சி திமுகவை பாடாய் படுத்திவைத்தது. 2006 தேர்தலில் 48 தொகுதிகளைப் பெற்ற காங்கிரஸ் இந்தமுறை 63 தொகுதிகள் வரை வம்புசெய்து பெற்றது. திமுக 119 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிந்தது. இது திமுகவினர் மத்தியிலேயே விரக்தியை ஏற்படுத்தியது. பாமக 30 தொகுதிகளிலும், விசிக 10 தொகுதிகளிலும், கொங்கு முன்னேற்றக் கழகம் 7 தொகுதிகளிலும், முஸ்லிம் லீக் 3, மூமுக 1, பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

தேர்தல் முடிவில் திமுக 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளிலும், பாமக 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன.

அதிமுகவுடன் தேமுதிக, சிபிஐ, சிபிஎம், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி, பார்வர்ட் பிளாக், இந்திய குடியரசுக் கட்சி, தமிழ்நாடு கொங்குவேளாளர் இளைஞர் பேரவை ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்திருந்தன.





இந்த கூட்டணியில் தொடக்கத்தில் மிகப்பெரிய குழப்பம் ஏற்பட்டது. தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு எட்டப்படும் நிலையில் இருந்த சமயத்திலேயே, கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கும் சேர்த்து முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதையடுத்து கூட்டணி முறியும் நிலை உருவானது. பின்னர் தேமுதிக தலைமையில் கூட்டணி அமைக்கும் முயற்சியில் சிபிஎம், சிபிஐ ஈடுபட்டன.

ஆனால், ஜெயலலிதா தனது அறிவிப்பை வாபஸ் பெற்று மீண்டும் கூட்டணி பேச்சு நடைபெற்று தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. மதிமுகவை போட்டியிடாமல் தவிர்க்க ஜெயலலிதா ஒரு தொகையை கொடுத்ததாக செய்திகள் பரவின. இந்தத் தேர்தலில் மதிமுக போட்டியிடவில்லை என்று வைகோ அறிவித்தார்.

இந்தத் தேர்தலில் திமுக மிகக்குறைந்த இடத்தில் போட்டியிட்டது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 2ஜி விவகாரம், ஈழத்தமிழர் பிரச்சனை ஆகியவை திமுகவுக்கு எதிரான பிரச்சாரமாக அமைந்தது. குறிப்பாக 2ஜி விவகாரத்தையும், ஈழத்தமிழர் பிரச்சனையையும் திமுகவினர் சரியாக எதிர்கொள்ளத் தவறிவிட்டனர்.

மிகச் சரியாக சொல்லப்போனால், திமுகவினரே இந்த விவகாரங்களில் அதிருப்தியாக இருந்துவிட்டனர். அந்த அளவுக்கு இவைகுறித்த பிரச்சாரங்கள் வலுவாக இருந்தன. இலை மலரந்தால் ஈழம் மலரும் என்ற கோஷத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன.

ஊழல் குற்றவழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா, இனிமேல் அதுபோன்ற தவறுகளை செய்யமாட்டார் என்று சிபிஎம், சிபிஐ கட்சிகள் நற்சான்றிதழ் கொடுத்தார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வரான ஜெயலலிதா செய்தியாளர்களை அடிக்கடி சந்திப்பதாக கூறினார். அத்தோடு சரி...

(2011-2016ல் அவருடைய ஆட்சி எப்படி நடைபெற்றது என்பதை வியாழக்கிழமை பார்க்கலாம்)

-ஆதனூர் சோழன்


முந்தைய பகுதி :
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT