Skip to main content

காங்கிரஸை 'கை' தூக்கி விடுவாரா ராகுல்?

Published on 16/12/2017 | Edited on 16/12/2017

காங்கிரஸை 'கை' தூக்கி விடுவாரா ராகுல்? 

இந்தியா முழுவதும் ஆட்சி செய்த கட்சியாக காங்கிரஸ் இருந்தது. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம்தான் காங்கிரஸை தோற்கடித்த மாநிலங்களாக இருந்தன.

ஆனால், காங்கிரஸ் தலைமையின் சர்வாதிகாரப் போக்கு, மாநிலங்களில் தனிச் செல்வாக்குப் பெற்ற தலைவர்களை வளர்க்க தவறியது. தலைமைக்கு கீழ்படியும் நபர்களை அது நியமித்தது. நேருவின் குடும்பத்தில் இருந்து இந்திரா தலைவராக பொறுப்பு வகித்த சமயத்தில்தான் இந்த சர்வாதிகாரப் போக்கு உச்சத்திற்கு சென்றது.

மாநில முதல்வர்களையும், காங்கிரஸ் தலைவர்களையும் கொலு பொம்மைகளைப் போல அடுத்தடுத்து மாற்றிய போக்கால், வெறுப்படைந்த பலர் காங்கிரஸில் இருந்து பிரிந்து மாநில அளவில் கட்சி தொடங்கினார்கள்.

ஆந்திராவில் தெலுங்குதேசம் வளரவும், பிகார், ஒரிஸா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, மகாராஸ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் காங்கிரஸ் இப்போது பலவீனமாக இருப்பதற்கு இந்திரா மற்றும் ராஜிவின் சர்வாதிகாரப் போக்குதான் காரணம்.

ராஜிவ் கொலை செய்யப்பட்டபிறகு நாடறிந்த செல்வாக்கான தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு இல்லாமல் போனது. இதன்காரணமாக மூத்த தலைவர்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 1996ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுமோசமாக தோல்வியடைந்தது.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் நேரு குடும்பத்தின் வாசலில் போய் கதறினார்கள். சோனியாவை கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தும்படி கேட்டார்கள். ஆனால், சோனியா தலைமையிலும் கட்சி தனது முந்தைய நம்பிக்கைத்துரோக அரசியலை தொடரவிரும்பியது.



1996ஆம் ஆண்டு ஐக்கியமுன்னணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் அந்த அரசாங்கத்தை காப்பாற்ற விருப்பமில்லாமல் இரண்டே ஆண்டுகளில் கவிழ்த்தது. இதன் விளைவாக பாஜக வளர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

பாஜகவை எதிர்த்து அரசியல் செய்தாலும், அந்த கட்சியின் வளர்ச்சியைத் தடுத்து ஆட்சிப்பொறுப்புக்கு வர காங்கிரஸ் திணறியது. அடுத்தடுத்து எடுத்த அத்தனை முடிவுகளும் காங்கிரசுக்கு எதிராகவே அமைந்தன. இந்நிலையில்தான் கூட்டணி அரசுக்கு ஒப்புக்கொண்டு தேசிய அளவில் மாநிலக் கட்சிகளின் துணையோடு 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.

கட்சித் தலைவர் பதவியை மட்டும் ஏற்றுக்கொண்ட சோனியா, மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். ஆனால், கூட்டணிக் கட்சிகளை சிக்கலில் சிக்கவைத்து, அதன்மூலம் பேரம்பேசும் காங்கிரஸின் தந்திரத்தை தொடர்ந்தார். இதன்காரணமாகவே 2014 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.

மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று விடலாம் என்ற காங்கிரஸின் கனவு கலைந்துவிட்டது. சோனியாவுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. எனவேதான் அடுத்தக்கட்ட தலைவராக ராகுலை தேர்வுசெய்யும்படி மூத்த தலைவர்கள் வற்புறுத்தத் தொடங்கினார்கள்.

இது பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடியைத் தயார் செய்ததைப் போல அல்ல. நாடு தழுவிய அளவில் ராகுலை 13 ஆண்டுகளாக கட்சிப்பணியில் ஈடுபடுத்திப் பக்குவப்படுத்தி இருக்கிறார்கள்.

மோடியை பிரதமர் வேட்பாளராக மாற்றுவதற்கு பெருமுதலாளிகள் 30 ஆயிரம் கோடி செலவுசெய்து குஜராத் மாடல் என்று போட்டோஷாப் வேலைகளைச் செய்து பில்டப் கொடுத்து கொண்டுவந்தார்கள்.



ஆனால், ராகுல் நாடுமுழுவதும் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களை அறிந்து, அவர்களுடன் இணைந்து வேலைசெய்து தன்னை ஒரு தலைவராக மற்றவர்கள் ஏற்கும் நிலையை உருவாக்கி இருக்கிறார்.

பஞ்சாபில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கும், உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸின் வாக்குச் சதவீதம் அதிகரித்ததற்கும், குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை காங்கிரஸ் பக்கம் திரும்பத் தயாராக இருப்பதற்கும் ராகுலின் தீவிரப் பிரச்சாரங்களே காரணம் என்று கூறப்படுகிறது.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடியை திணறடித்து கண்ணீர் வடித்து நாடகம் நடத்தும் அளவுக்கு செய்ததில் ராகுலின் பிரச்சாரம் வெற்றிபெற்றது. இளைஞர்களை ராகுல் கவர்ந்திருக்கிறார். குஜராத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் அது ராகுலின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படும்.

குறைந்தபட்சம் பாஜகவின் வாக்கு வங்கியை உடைப்பதிலும், ஏற்கெனவே பெற்றுள்ள இடங்களை பறிப்பதிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மோடிக்கு கிடைத்த பெரிய அடியாக பார்க்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் வெற்று பில்டப்புகளால் உருவாக்காமல், கட்சியோடு இணைந்தே தலைவராக உருவெடுத்திருக்கிறார் ராகுல். காங்கிரஸை மீண்டும் மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-ஆதனூர் சோழன்

சார்ந்த செய்திகள்