Skip to main content

பாஜகவை துடைத்தெறியும் உண்மையான மக்கள் நலக்கூட்டணி!

Published on 11/12/2018 | Edited on 11/12/2018
sa


பத்துப் பேர் சேர்ந்து ஒருத்தனை விரட்டினால் யார் பலசாலி? என்று சமீபத்தில் கேட்டிருந்தார். அதாவது, பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பலமான கூட்டணி அமைக்கும் முயற்சியை அவர் கிண்டல் செய்திருந்தார்.
 

ஆனால், உண்மை என்ன? பாஜக என்ற தனிக்கட்சிக்கு எதிராக அல்ல… பாஜக கூட்டணிக்கு எதிராகவே எதிர்க்கட்சிகள் பலமிகுந்த கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தன. ஆனால், பாஜக என்ற தனிக்கட்சியை பெருமைப்படுத்தும் வகையில் ரஜினி அப்படி முன்னிலைப் படுத்தியிருந்தார்.
 

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்தே வெற்றிபெற்றதைப் போலவும், மோடியின் செல்வாக்கால் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததைப் போலவும் நம்பவைக்கும் முயற்சி நடைபெற்றது. இந்தியாவில் வெற்றிபெற்ற கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு எவ்வளவு என்று யாருமே முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற உண்மையை குறைந்த வாக்குகளில் அதிக இடத்தை வென்றவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவைப் போல வலுவான கூட்டணியை அமைக்க தவறிவிட்டன. அதுமட்டுமின்றி, காங்கிரசும்கூட இரண்டுமுறை தொடர்ந்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவுடன், தங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துவிடும் என்று மேம்போக்காக கணக்குப் போட்டுவிட்டது. அதனால்தான், காங்கிரஸை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்று பெரிய கட்சிகள் மூன்றாவது அணி அமைத்து வாக்குகள் சிதறக் காரணமாகிவிட்டன.
 

ஆனாலும் பாஜக தனித்தே 2014 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவில்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவுடன், 1.தெலுங்குதேசம், 2.சிவசேனா, 3.சிரோமனி அகாலிதள், 4.ஐக்கிய ஜனதாதளம், 5.லோக் ஜனசக்தி, 6.தேசிய முற்போக்கு திராவிட கழகம், 7.பாட்டாளி மக்கள் கட்சி, 8.மதிமுக, 9.ராஸ்ட்ரிய லோக் சமதா கட்சி, 10.ஹரியானா ஜான்ஹிட் காங்கிரஸ், 11.ஆப்னா தள், 12.ஸ்வாபிமானி பக்‌ஷா, 13.இந்திய குடியரசுக் கட்சி(அதவாலே), 14.ராஷ்ட்ரிய சமாஜ் பக்‌ஷா, 15.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, 16.இந்திய ஜனநாயக கட்சி, 17.கேரளா காங்கிரஸ் (தேசியவாத), 18.ஆர்.எஸ்.பி. (போல்ஸ்விக்), 19.நாகா மக்கள் முன்னணி, 20.யுடிஎஃப், 21.என்.பி.பி., 22.என்.ஆர்.காங்கிரஸ், 23.உர்கவோ க்வரா பிரமா என்று மொத்தம் 23 சிறிய மற்றும் பெரிய கட்சிகளுடன் அது கூட்டணி அமைத்திருந்தது.
 

இப்போது, தெலுங்குதேசம் கட்சி மட்டுமே பாஜக கூட்டணியிலிருந்து விலகியிருக்கிறது. அது வரும் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்திருக்கிறது. ஆனால், பாஜக கூட்டணிக்கு எதிராக பிரிந்து கிடந்த மம்தா கட்சியும், இடதுசாரிகளும், மதசார்பற்ற ஜனதாதளம், ஆம் ஆத்மி, ஜேவிஎம் ஆகிய புதிய கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க முன்வந்துள்ளன.
 

ஆனால், ஊடகங்களோ பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் 21 கட்சி கூட்டணி என்று பிரச்சாரம் செய்கின்றன. சொல்லப்போனால், பாஜக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் வலுவான கூட்டணி அமைக்க முயற்சி என்பதுதான் உண்மை. இந்த முயற்சி பாஜகவின் அட்டூழியங்களை முடிவுக்கு கொண்டுவரவே மேற்கொள்ளப்படுகிறது என்பதே உண்மை.
 

கடந்த காலங்களில் குறைந்தபட்ச செயல்திட்டங்கள் அடிப்படையில் அமைக்கப்பட்ட காங்கிரஸ் கூட்டணி அரசு அமைத்தபோது நிறைவேற்றிய மக்கள்நலத் திட்டங்கள் ஏராளம் என்பதையும், அடித்தட்டு மக்களுக்கான பாதுகாப்பை அந்த அரசு உத்தரவாதப்படுத்தி இருந்தது என்பதும் உண்மை.