Skip to main content

“ரொட்டி வித்தவரு தனி விமானத்துல வந்து லீலா பேலஸில் தங்குவது வாரிசு அரசியலில் வராதா...” - காந்தராஜ் கேள்வி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

பரக


தமிழக அமைச்சரானதும் உதயநிதி தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வரும் இந்நிலையில் அவர் அமைச்சராவதற்கு என்ன தகுதி இருக்கு என்று அதிமுகவின் தலைவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் கந்தராஜ் அவர்களிடம் கேட்டபோது, " இன்றைக்கு மற்ற கட்சியிலிருந்து யாரும் பதவிக்கு வரவில்லையா என்று முதலில் உதயநிதியை விமர்சனம் செய்பவர்களைச் சொல்லச் சொல்லுங்கள். மற்ற கட்சியில் எல்லாம் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதைப்போல் திமுகவை மட்டும் விமர்சனம் செய்பவர்களின் நோக்கம் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். 

 

அமித்ஷாவின் மகன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மிக முக்கியப் பதவியில் இருக்கிறார். இது எந்த அரசியல் என்று பாஜகவினர் சொல்ல வேண்டும். அவருக்கும் கிரிக்கெட்டுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? அமித்ஷா மகன் என்ன கிரிக்கெட் பிளேயரா? ஆல் ரவுண்டரா? இல்லை இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளாரா? குறைந்தபட்சம் ரஞ்சி டிராபி விளையாடி உள்ளாரா? எத்தனை ரன் அடித்தார், எத்தனை விக்கெட் எடுத்தார் என்பதை அவர் கூறுவாரா? கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத ஒருவர் பல்லாயிரம் கோடி புழங்குகின்ற ஒரு விளையாட்டின் தலைமை பொறுப்புக்கு வருகிறார் என்றால், இதை மட்டும் வாயை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்கிறார்கள், அது எப்படி?

 

ரொட்டி வித்துக்கிட்டு இருந்தார் மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி, இன்றைக்குத் தனி விமானத்தில் நாடு நாடாகச் சென்று வருகிறார். சென்னைக்கு வந்து லீலா பேலஸில் தங்குகிறார். நீங்களும் நானும் அந்த ஹோட்டலின் கதவைக் கூடத் தொட முடியாது. எப்படி வந்தது இந்த வசதி. இதெல்லாம் இவர்களுக்கு உழைத்து அதன் மூலம் வந்ததா? தன்னை ஏழைத் தாயின் மகன் என்று  தொடர்ந்து கூறும் மோடியின் குடும்பத்தில் உள்ள நபருக்கும், அமித்ஷா குடும்பத்துக்கும் மட்டும் இத்தனை வாய்ப்புக்கள் எப்படிக் கிடைத்தது என்று அவர்கள் சொல்ல வேண்டியதுதானே? தான் முதலில் உத்தமனாக இருந்தால் மட்டுமே அடுத்தவர்களைப் பற்றிப் பேச வேண்டும்" என்றார்.