Advertisment

இதுதான் துரோகத்தின் நிறமும், குணமும்: - நாஞ்சில் சம்பத் (EXCLUSIVE)

இதுதான் துரோகத்தின் நிறமும், குணமும்: - நாஞ்சில் சம்பத் (EXCLUSIVE)

துணைப்பொதுச் செயலாளர் கட்சிப் பதவிகளுக்கு ஆட்களை நியமிக்கிறார்... நியமிக்கப்பட்டவர்களிலேயே சிலர் அதை மறுக்கிறார்கள்... நியமனமே செல்லாது என்று முதல்வரும் அமைச்சர்களும் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்... தீர்மானம் அச்சடிக்கப்பட்ட 'லெட்டர் பேட்'டே செல்லாது என்று இவர் கூறுகிறார்...இவர் இருந்தால் இணைப்பு சாத்தியமில்லை என இன்னொருவர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கிறார்கள். மொத்தத்தில் தமிழகத்தை ஆளும் கட்சிக்குள் நடக்கும் கூத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன... ரெண்டு பட்டாலும், மூன்று பட்டாலும் ஒன்றில் மட்டும் குறியாய் இருக்கிறார்கள். ஆட்சியில் முடிந்தவரை நீடிப்பது என்று... தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் போடப்பட்ட தீர்மானத்துக்கு தினகரன் அணியின் குரலாக விளங்கும் நாஞ்சில் சம்பத்தின் பதில் இங்கே...
Advertisment

அதிகாரத்தில் இருக்கும் முதல் அமைச்சருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது. தனக்கு ஜால்ரா தட்டுகிற சில கொத்தடிமைகளை கையில் வைத்துக்கொண்டு தலைமைச் செயலகத்திற்கு வந்து, 'கழகத்தின் பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட தினகரனை நாங்கள் நீக்கியிருக்கிறோம். அவர் நியமித்த நியமனங்கள் செல்லாது. யாரையும் கட்டுப்படுத்தாது' என்று தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதல் அமைச்சர்.
Advertisment

துரோகம் தன்னுடைய நிறத்தை, சுயரூபத்தை இன்றைக்கு வெளிப்படுத்தியிருக்கிறது. கூவத்தூரில் எம்எல்ஏக்களை ஒருங்கிணைத்து எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சராக்குவதற்கு சசிகலாவும், தினகரனும் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமல்ல. ஒரு துரோகத்தை சாய்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை அதிகாரப் பீடத்தில் உட்கார வைத்தால் அவர் செய்த துரோகத்தைவிட ஆயிரம் மடங்கு துரோகத்தை செய்வதற்கு எடப்பாடி பழனிசாமி துணிந்துவிட்டார். இதுதான் துரோகத்தின் நிறமும், குணமும். ஆகவே துரோகம் இப்படித்தான் இருக்கும். இதற்காக நாங்கள் யாரும் கவலைப்படவில்லை.

மக்கள் மன்றத்தில் செல்வாக்கு இல்லாத இந்த அனாதைகள் இன்றைக்கு அறிவித்திருக்கிற அறிவிப்பு எங்களை யாரையுமே கட்டுப்படுத்தாது. டிடிவி தினகரனுடைய பயணத்தை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது. நாய்கள் குரைத்தாலும் பட்டாபிஷேகம் நடக்கத்தான் செய்யும். ஆகவே இதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

அடுத்தடுத்து வருகிற நடவடிக்கைகள், அதிமுகவின் விதியை தீர்மானிக்கக் கூடியவர் டிடிவி தினகரன்தான் என்பதை அவரது நடவடிக்கைகள் மூலம் அவர் நிரூபிப்பார். தொண்டர்கள் அவரைத்தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே தவிர, இந்த குறுநில மன்னர்களையும், இந்த குட்டிச் சுவர்களையும் அல்ல.

கேள்வி : இரு அணியும் இணைவதற்கான தீர்மானம் என்கிறார்களே?

பதில் : டிடிவி தினகரனின் நோக்கமே அதுதானே... எல்லாரும் இணையனும். எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதானே...

கேள்வி : இரு அணியும் இணைவதற்கு சசிகலா குடும்பம் இருக்கக் கூடாது என ஓபிஎஸ் சொல்கிறாரே?

பதில் : ஓ.பி.எஸ். வல்லாதிக்கத்திற்கு விலைபோன மனிதர். ஓ.பி.எஸ்.க்கு முகம் தந்து, முகவரி தந்து, வாழ்வு தந்து, வசதி தந்து, வசந்தம் தந்து நாலு பேருக்கு அவரை தெரியும்படி ஆக்கியது சசிகலாவின் குடும்பம்தான். காலமெல்லாம் தினகரனின் காலில் விழுந்து கிடந்தவர்தான் ஓ.பி.எஸ்.இப்போது சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று சொல்வது ஓ.பி.எஸ்.சின் அடிமனதில் இருந்து வரும் குரல் அல்ல. ஒரு ஏகாதிபத்தியத்திற்கு விலைபோன ஒரு அடிமையின் பிதற்றல்.

-வே.ராஜவேல்
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe