ADVERTISEMENT

தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி! நிறைந்திருக்கும் மர்மங்கள்! 

04:52 PM Mar 11, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளி மாணவி மரணத்துக்கு அவரது பெற்றோர் நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், செம்மடைப்பட்டி சக்தி கல்லூரியிலும் அதேபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் அருகே இருக்கும் பழையபட்டியைச் சேர்ந்த கன்னியப்பன்-பழனியம்மாள் தம்பதியின் மகள் கார்த்திகா ஜோதி. இவர் செம்மடைப் பட்டியிலுள்ள சக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.ஸி நர்சிங் முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியிலேயே தங்கிப் படித்தார். இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி காலை கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து திடீரென கார்த்திகா ஜோதி குதித்திருக்கிறார்.

இதில் பலத்த காயமடைந்த மாணவியை அரசு மருத்துவமனைக்குச் கொண்டு செல்லாமல் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்திருக்கிறது கல்லூரி நிர்வாகம். பெற்றோர்களுக்கு தகவல் தெரிந்து பதறியடித்து வந்த அவர்களை பெண்ணைப் பார்க்கவே அனுமதிக்கவில்லை. இந்த விஷயம் காட்டுத்தீ போல் பரவியதைக் கண்ட கல்லூரி நிர்வாகம் உடனே கல்லூரிக்கு விடுமுறை அறிவித்துவிட்டு போலீசில் புகார் செய்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்திவிட்டு போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினார். ஆறு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மாணவி கார்த்திகா ஜோதி சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 26-ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாகக் கூறி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மாணவியின் பெற்றோரும், உறவினர்களும் மாணவியின் சாவில் மர்மம் இருக்கிறது என்று கூறி மாணவியின் உடலை வாங்காமல் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை அவர்களை சமாதானப்படுத்தி மாணவியின் உடலை ஒப்படைத்திருக்கிறார்கள்.

ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி, "கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் நடந்ததுபோல தான் சக்தி கல்லூரியில் இந்தப் பெண்ணுக்கும் நடந்திருக்கிறது. சம்பவத்தன்று காலை எட்டரை மணிக்கு மூன்றாவது மாடியிலிருந்து தற்கொலை செய்வதற்காகக் குதித்திருக்கிறார் என்று நிர்வாகத்தில் கூறுகிறார்கள். அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போகாமல் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதுவும் மதியம் ஒரு மணிக்குத்தான் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது? அந்த மாணவி மாடியிலிருந்து குதித்தபோதே இறந்துவிட்டாரா? அல்லது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவியை மருத்துவமனையில் சேர்த்தார்களா? உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு மாணவிக்கு என்ன பிரச்சனை? மாணவியின் பெற்றோர்களையே மகளைப் பார்க்க அனுமதிக்காதது ஏன்? என நிறைய கேள்விகள் எழுகின்றன.

இதுபோல் ஒரு சம்பவம் நடந்தால் ஆர்.டி.ஓ., தாசில்தார் விசாரணை செய்வார்கள். ஆனால் இது முழுக்க முழுக்க எஸ்.பி. கட்டுப்பாட்டில் நடந்திருக்கிறது. மாணவியின் பிரேதப் பரிசோதனையின் போது பாலியல்ரீதியாக ஏதும் நடந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்று நான் சொன்னதன் பேரில்தான் ஒரு லேடி டாக்டரையே நியமித்தனர். காவல்துறையும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒரு அமைப்பும் கல்லூரி நிர்வாகத்திடம் பேரம் பேசி 10 லட்ச ரூபாயை பெண்ணின் பெற்றோருக்கு வாங்கிக்கொடுத்திருக்கிறார்கள். பணத்தைக் கொடுத்து உண்மையை மூடிமறைத்திருக்கிறார்கள். முதல்வர் இந்த விஷயத்தில் கவனம்செலுத்தி மாணவியின் சாவை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் தொடர்ந்து ஜனநாயக மாதர் சங்கம் போராடும்” என்றார்.

இந்த குற்றச்சாட்டுகளைப் பற்றி எஸ்.பி. பாஸ்கரனிடம் கேட்டபோது... “கல்லூரி நிர்வாகம்தான் அந்த ஆஸ்பத்திரியில் சேர்த்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவியிடம் நீதிபதியே நேரில் வந்து வாக்குமூலம் பெற்றிருக்கிறார். அந்தக் கல்லூரி விடுதியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்குள் ஏதோ ஈகோ பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. அப்பொழுது அந்த மூன்று மாணவிகள் உன் காதலைப் பற்றி உங்க வீட்டில் சொல்லப் போகிறோம் என்று கூறியிருக்கிறார்கள். மாணவியின் பெற்றோர்களுக்கு விஷயம் தெரிய சத்தம் போட்டிருக்கிறார்கள். அதனால் மனம் உடைந்து அந்த மாணவி, அவங்க அம்மாவுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்திருக்கிறார்.


அந்த மூன்று மாணவிகள் மீதும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம். இதில் நாங்கள் ஏதும் உண்மையை மூடி மறைக்கவில்லை. அதுபோல் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் நிர்வாகத்திடமிருந்து பணம் வாங்கிக் கொடுக்கவில்லை. ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்கள். வேண்டுமென்றால் விசாரணை செய்துகொள்ளட்டும். எங்களைப் பொறுத்தவரை மாணவி சாவில் முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்.


மறைந்த மாணவியின் தந்தையான கன்னியப்பன், “தற்பொழுது பிள்ளையைப் பறிகொடுத்து இருப்பதால் எதுவும் பேச முடியாமல் இருக்கிறோம். ஆனால் பல விஷயங்கள் நடந்திருக்கிறது. கூடிய விரைவில் உங்களைக் கூப்பிட்டு உண்மையைச் சொல்கிறோம்” என்றார்.


சக்தி கல்லூரி சேர்மன் வேலப்பனை சந்திக்க கல்லூரிக்குச் சென்றும் கூட அவர் வெளியே போய்விட்டார் என்று கூறி கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை. அவரது செல்லுக்கு (97509.....) பலமுறை தொடர்புகொண்டும் ஃபோனை அட்டெண்ட் செய்யவில்லை.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT