Skip to main content

இதுதாண்டா மருத்துவம்... சிலிர்க்க வைத்த வைத்தியர்!

Published on 30/08/2018 | Edited on 30/08/2018

கோவை தொண்டாமுத்தூர் மெயின் சாலையில் இருந்து பிரிகிறது மூங்கத்தூர் என்கிற ஒரு கிராமத்தின் ஒரு மண் ரோடு. தென்னை ஓலையில் வாசல் மறைப்பு, உள்ளே ஓடுகளால் ஆன ஒரு சிறிய மண் சுவர் வீடு. ஓரமாய் ஒரு கயித்துக் கட்டில், ஓரமாய்க் கிடக்கும் சில மூலிகை செடிகள். வெள்ளை சட்டை , வெள்ளை வேட்டியுடன் 80 வயதுக்கு மேல் மதிக்கத் தக்க ஒரு முதியவர். சட்டை அணியாத ஒருவரின் இடப்புறக்கையை வழித்து விட்டு எண்ணைக்குள் அமுக்கப்பட்டிருந்த ஒரு துணியை எடுத்து கையை சுற்றிக் கழுத்தோடு இறுக்கிக் கட்டுகிறார்.

 

sidha maruthuvar

 

"இப்ப எப்படி இருக்கு?" - கணீரென்று முதியவர் குரல் அவரைப் பார்த்து கேட்கிறது.

"அய்யா...உங்ககிட்ட வந்த இந்த ரெண்டு நாள்லயே பெரிய மாற்றம் தெரியுதுங்கய்யா... வலி இப்ப ரொம்ப குறைஞ்சுருக்கு..." என்கிறார் அவர்.

"போயிட்டு இந்த எண்ணையை சூடு பண்ணி மேல ஊத்தி விடு. ரெண்டு நாள்ல குணமாகலைன்னா என்னையக் கேளு..." என்கிறார்.

"எவ்வளவுங்கய்யா பீஸ்...?"

"சிவபெருமானுக்கு தர்ற காணிக்கைன்னு சொல்லு. ஐம்பது ரூபா கொடு"

வந்தவர் 'வெறும் அம்பது ரூபாயா?' என்பது போல ஏற இறங்க அவரைப் பார்த்து விட்டு ஐம்பது ரூபாயை பவ்யமாய் கொடுக்கிறார். பின்னர் கழட்டி வைக்கப்பட்டிருந்த சட்டையை ஒரு பக்கமாய் மாட்டிக் கொண்டு ஆட்டோவில் ஏறிக் கிளம்புகிறார்.

ஆச்சர்யத்துடன் நாம் அந்த முதியவரை நெருங்கி நம்மை அறிமுகப் படுத்திக்கொண்டு... "நீங்க பண்றது என்ன வகை மருத்துவம் அய்யா? அதுவும் வெறும் அம்பது ரூபா வாங்கறீங்க?" என்றோம்.

"என் பேரு மாரிமுத்து தம்பி. எங்கப்பாரு சின்னச்சாமி சித்த வைத்தியர். தெலுங்குபாளையம் சித்த வைத்திய சாலையிலதான் வேலை பார்த்தாரு. எனக்கு பத்து வயசு இருக்கும்போதிலிருந்தே அவர் கூடவே போய் அவரோட சித்த வைத்தியத்தின் நுணுக்கங்களை கத்துகிட்டேன். கை மூட்டு, கால் மூட்டு, இடுப்பு எலும்பு முறிஞ்சு வர்ற எத்தனையோ பேரை எப்படி குணப் படுத்தறாங்க, எந்த மூலிகை செடிகளை வச்சு எண்ணை தயாரிக்கிறாங்க என்பதையெல்லாம் எங்கப்பாரு சொல்லாமலே கண்டுபிடிக்கும் ஆர்வத்தை, திறமையை நான் வளர்த்து இருந்தாலும் அப்பாரும் கொஞ்சம் சொல்லிக் கொடுப்பாரு. காடுகளுக்குள் போய் மூலிகைச் செடிகளை பறிக்க கூப்பிட்டுட்டு போவாரு. மாவுக் கட்டு, எண்ணைக் கட்டுன்னு விதம் விதமா எங்கப்பாரு கட்டுப்போட்டு விடறதை ஆச்சரியத்தோடு பார்ப்பேன். படிக்கிறதுல விருப்பமில்லாம கெடைச்ச வேலைக்கு போவேன். அப்படியே பெரியவனான பின்னால கல்யாணம், குழந்தைகன்னு ஆன பின்னாலும் நான் கெடைச்ச வேலைகளைத்தான் செஞ்சுட்டு இருந்தேன்.

 

sidha vaithiyar

 

நாப்பது வயதைக் கடந்த பின்னாடி என் அப்பாரு வயசாயி இறந்த பின்னாடிதான் இந்த சித்த வைத்தியத்துல முழுமையா இறங்கினேன். அப்பத்தான் தெரிஞ்சது. சனங்க நம்ம காலத்து சனங்க  மாதிரியான வலுவான உடம்போட இல்லை. கீழே விழுந்து கை, கால் மூட்டு விலகிக்கிடக்கிற சனங்ககிட்டயிருந்து ஆயிரக்கணக்குல, லட்சக்கணக்குல பணம் புடுங்குற ஆஸ்பத்திரிக இந்த கோயமுத்தூர் ஜில்லா முழுக்க நெறைய வந்துருச்சுன்னு தெரிய வந்துச்சு.

அடப் பாவிகளா... மருத்துவம்ங்கறது கடவுள். ஒரு நோயாளியை உடல் சரி செய்ற அளவுக்கு நீ இருக்கறேன்னா அப்பா அந்தக் கடவுளே உண் மேல இறங்கியிருக்காருன்னுதானே அர்த்தம்? அது யாருக்கும் தெரியறதில்லை. அதுனாலதான் சிவபெருமான் மேல சத்தியம் பண்ணிட்டு என்னைத் தேடி வர்றவங்ககிட்ட காணிக்கையா 50,100 ரூபாய்ன்னுதான் வாங்குறேன். அதுவும் இந்த மூலிகைச் செடிகளைத் தேடி அலையறதுக்கும், எண்ணெய் வாங்குறதுக்கும், ஒரு வேலை சாப்புடறதுக்கும்தான்.

இப்ப என்கிட்டே நீவிட்டுப் போனாரே ஒரு தம்பி... கீழே விழுந்து இந்த இடது கை தோள் மூட்டு கீழயே இறங்கிருக்கு. இங்க கோயமுத்தூர்ல இருக்கற ஒரு தனியார் ஆஸ்பத்திரியில ஆபரேஷன் பண்ணி பத்து நாளா படுத்து இருந்ததாம். எம்பதாயிரம் ரூபாய் ஆச்சாம். ஆனா சரியாகலை. 'வின்னு வின்'னுன்னு வலி தாங்க முடியாம தூக்கமே இல்லையாம். அவுங்க வீட்டுக்கு கட்டுக்கீரை விக்கிற ஒரு கிழவி சொல்லித்தான் இங்கே வந்துச்சாம். இப்ப ரெண்டு நாள் நான் வழிச்சு விட்டதுமே வலி இல்லை. தூக்கம் நல்ல வருதாம்.

அது மட்டுமில்லைங்க தம்பி... இங்க பக்கத்துல பொங்காளியூர்ல இதே போல ஒரு மாசமா ஆபரேசன் பண்ணி கை சரியாகாத ஒரு பையன் ரொம்ப கஷ்டப்படறான்னு நம்ம சொந்தக்காரு ஒருத்தரு சொன்னதைக் கேட்டு வீட்டுக்கே போய் அந்தப் பையனை பார்த்தேன். பெருமைக்கு சொல்லலை தம்பி. நான் ஒரு நாள்ல செய்யற வேலைய அந்த படிச்ச டாக்டரு ஒரு மாசமா செஞ்சுட்டு இருந்திருக்காரு. அடுத்த நாளே அந்தப் பையன் அந்தக் கையால சாப்புட ஆரம்பிச்சான்.

கால் திடீர்னு வராம கீழே விழுந்த ஒரு காலேஜ்ல படிக்கிற பொண்ணுக்கு தண்டு வடத்துல பிரச்சனைன்னு சொல்லி பல லட்சங்கள்ல ஆப்பரேசன் பண்ணியிருக்காங்க. எந்தப் பிரயோஜனமுமில்லை. என்கிட்டே தூக்கிட்டு வந்தாங்க.

கெண்டைக்கால்லயிருந்து பாதத்துக்கு வர்ற ஒரு நரம்பு சுருண்டு கிடந்துச்சு. அதை லாவகமா எண்ணெய் தேய்ச்சு எடுத்து விட்டேன். இங்க இருந்து காருக்கு நடந்தே போச்சு. "எங்க புள்ள நடக்கவே முடியாமப் போயிருவாளான்னு அழுதுட்டு இருந்தோம் அய்யா... இப்ப ஆனந்தத்துல அழுகுறோம்"னு பெத்தவங்க சொன்ன போது வைத்தியனா ஒரு பெருமை வந்துச்சு பாருங்க, அதை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாது என்கிறவரிடம் "ஒரு விளம்பர பலகையாவது மெயின் ரோட்ல வச்ச நாலு பேரு பார்த்து வருவாங்கள்ல அய்யா" என்றோம்.

"எதுக்கு தம்பி? நீங்க போற பக்கம் எல்லாம் பாருங்க, அந்த வைத்திய சாலை, இந்த வைத்திய சாலைன்னு ஏகப்பட்ட பேர் வச்சுட்டுதானே இருக்காங்க? சரி பண்ணினா பரவாயில்லை, இவுங்களும் போனதுமே கை, காலைப் புடிச்சு இழுத்து ஒரு தப்பை வச்சு கட்டி, எண்ணெய் ஊத்திக் கட்டிவிட்டுட்டு  இங்கிலீஷ் டாக்டர்கள் மாதிரியே  அடிக்கடி வரச் சொல்லி ஆயிரக்கணக்குல பணம் புடுங்குறாங்க. அது நமக்கு தேவையில்லை தம்பி. எனக்கான விளம்பரம் என்னைச் சுற்றி உள்ள சனங்களின் உதடுகளில் இருக்கிறது. அதுவே போதும்" என்கிறார் சிரித்தபடியே சித்த வைத்தியர் மாரிமுத்து அய்யா.

மருத்துவம் நாளுக்கு நாள் வணிகமாக பார்க்கப்பட்டு வரும் நாட்களில் இது போன்றவர்கள் நம்பிக்கையளிக்கிறார்கள். ஆனால், வெகுசிலரே இருக்கிறார்கள். அதே நேரம் நாட்டு வைத்தியம், சித்த வைத்தியம் என்று பலரும் புதிது புதிதாக மையங்களைத் திறந்துகொண்டே இருக்கின்றனர். எதை நம்புவது என்பதும் மக்களுக்கு பெரும் அச்சமாக இருக்கிறது. ஆனாலும் ஆங்காங்கே இதுபோன்றவர்களையும் தங்கள் திறமையை வைத்து அதிக பணம் சம்பாதிக்க நினைக்காத அவர்கள் மனநிலையையும் பார்க்கும்போது ஒரு நிம்மதி ஏற்படுகிறது. மருத்துவம் என்பது அந்த மனநிலையையும் சேர்த்துதான். அதனால் 'இதுதாண்டா மருத்துவம்' என்று யாருக்கோ கேட்கும்படி கத்துகிறது மனது.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடரும் சோகம்; வெள்ளியங்கிரி மலையேறுவோர் கவனத்திற்கு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Ongoing Tragedy; Attention Velliangiri Mountaineers

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், தொடர்ந்து சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ளியங்கிரி  மலை  மீது ஏற முயன்ற மூன்று பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (68) வயது. மருத்துவரான இவர் நேற்று நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். இன்று காலை நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இந்த மூன்று பேரின் சடலங்களையும் கீழே கொண்டு வரும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் 3 பேர் இதற்கு முன்னதாகவே இரண்டு பேர் என மொத்தம் 5 பேர் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதயக் கோளாறு, மூச்சுத்திணறல் பாதிப்பு, சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

பாஜக ரோட் ஷோவில் விதிமீறல்; கோவையில் எழுந்த சர்ச்சை

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Violation at BJP road show; Controversy in Coimbatore

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று கோயம்புத்தூர் வந்திருந்த பிரதமர் மோடி ரோட் ஷோவில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நடைபெற கலந்துகொள்ள இருக்கிறார். இந்தக் கூட்டத்தில் தற்பொழுது கூட்டணியில் இணைந்திருக்கும் பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று கோவையில் நடந்த ரோட் ஷோ நிகழ்ச்சியில் விதி மீறலாக பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த பாஜக நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குற்றச்சாட்டுக்கு காரணமாகியது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு தேர்தல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் விசாரணை நடத்தப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.