Skip to main content

“எனது பிறந்தநாளில் எந்தவித ஆடம்பரமும் வேண்டாம்” - முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Published on 27/02/2023 | Edited on 27/02/2023

 

cm stalin write letter to party members

 

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மார்ச் 1 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், தனது பிறந்தநாளை எந்தவிதமான அலங்காரமும் ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையாகக் கொண்டாட வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் செய்தி மடலில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை முடித்துத் திரும்பிய நிலையில், அங்கு மக்களிடமிருந்து பெற்ற உளப்பூர்வமான உற்சாக வரவேற்பில் கிடைத்த மகிழ்ச்சியுடன் இதனை எழுதுகிறேன். தேர்தல் பரப்புரையின் கடைசி நாளில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் அன்புச் சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களுக்கு ஒருநாள் பரப்புரை செய்யும் திட்டத்துடன் ஈரோட்டுக்குப் பயணமானேன்.

 

முதல்நாள் இரவில் கோவை விமான நிலையத்தில் தரையிறங்கி, ஈரோட்டினை அடையும்போது ஏறத்தாழ இரவு 10.30 மணியாகிவிட்டது. தேர்தல் விதிமுறைகளினால் அந்த நேரத்தில் எந்த நிகழ்ச்சியும் இல்லை என்றாலும், மக்கள் திரண்டு நின்று அன்பைப் பொழிந்தனர். பெண்கள் பலர் கைக்குழந்தைகளுடன் நின்று வாழ்த்தினர். ஆண் ஒருவர் தன் குழந்தையுடன் நின்றார். என்னுடைய வாகனத்தின் வேகம் குறைவதைக் கண்டவுடன் ஆவலுடன் ஓடிவந்து, தன் பெண் குழந்தையின் கையில் ஓர் உணவுப் பொட்டலத்தைக் கொடுத்து, என்னிடம் தரச் சொன்னார்.

 

சென்னையில் பணிகளை முடித்துவிட்டு, கோவை வந்து, அங்கிருந்து ஈரோடு பயணிப்பதால், தொடர்ச்சியான பணிகளுக்கிடையே நான் சாப்பிட்டிருப்பேனோ இல்லையோ என்ற நினைப்பில், ஃப்ரைட் ரைஸ் வாங்கிவைத்து, அதைத் தன் மகள் கையால் கொடுக்கச் செய்த அந்தத் தமிழரின் அன்பினில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் உணர்வைக் கண்டேன்.

 

அவருடைய பெண் குழந்தை என்னிடம் உணவுப் பொட்டலத்தைத் தந்ததுடன், “அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துகள் தாத்தா” என்று வாழ்த்துகளைப் பகிர்ந்த போது நெகிழ்ந்து போனேன். அப்போது அங்கே கூடியிருந்த பெண்களும் குழந்தைகளும் எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை முன்கூட்டியே தெரிவித்து மகிழ்ந்தனர். என்னுடைய பிறந்தநாளை மக்களின் வாழ்த்துகளால் நினைவுபடுத்திக்கொண்டபோது உள்ளத்தில் உற்சாகம் ஊற்றெடுத்தது.

 

1953 மார்ச் 1. உலகம் எப்போதும் போல உதயசூரியனின் ஒளிக்கதிர்களுடன் விடிந்தது. அன்னையார் தயாளு அம்மாளுக்கு அன்று சிறப்பான நாள். அவர் தன்னுடைய இரண்டாவது ஆண் குழந்தையை ஈன்றெடுத்திருந்தார். தாய்மையின் அரவணைப்பில் உலகைக் கண்ட அந்தக் குழந்தை, உங்களில் ஒருவனான நான்தான். தந்தை, கழகத்தின் முன்னணித் தலைவர். பொதுவாழ்க்கைக்கு முதலிடம். இல்வாழ்க்கை இரண்டாவதாகத்தான் என்று வாழ்வியலை அமைத்துக் கொண்டவர். சோவியத் யூனியன் எனும் வல்லரசின் அதிபராக - உலகத்தின் கவனத்தை ஈர்த்த தலைவர் ஜோசப் ஸ்டாலின் மறைவெய்தியதையொட்டி நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பங்கேற்றிருக்கிறார். மகன் பிறந்த விவரம் ஒரு சிறிய தாளில் எழுதித் தரப்படுகிறது. அதனைப் படித்தவர், தன் மகனுக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டுவதாக அந்த மேடையிலேயே அறிவிக்கிறார்.

 

உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உருவானது, பொதுவாழ்க்கைக்கான மேடையில்தான். அதனால், சிறு வயது முதலே பொதுவாழ்வையே முதன்மையாக்கிக் கொண்டேன். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. என்ற அமைப்பைத் தொடங்கி, என் பொதுவாழ்க்கையின் பயணத்தைத் தொடர்ந்தேன். கழகத் தலைவரின் மகன், தமிழ்நாட்டு முதலமைச்சரின் மகன் என்ற அடையாளத்தைப் பின் தள்ளி, இயக்கத்தின் தொண்டன் என்ற முறையிலேயே என்னுடைய பொதுவாழ்க்கை பயணித்தது. 'பொதுவாழ்க்கை என்பது பொழுதுபோக்குக்கான பூங்கா அல்ல; அது ஓய்வில்லாத போர்க்களம்!' என்பதை தலைவர் கலைஞர் அவர்களின் பேச்சுகளாலும் எழுத்துகளாலும் அவரது செயல்களாலும் அப்போதே உணர்ந்துகொண்டேன். அவர் தந்தை பெரியாரிடமும் பேரறிஞர் அண்ணாவிடமும் அதனைப் பயின்றிருந்தார்.

 

தன்னலம் கருதாமல் - நன்றியை எதிர்பாராமல் - பதவிப் பொறுப்புகளுக்கு வராமல் - வசவுகளையும் விமர்சனங்களையும் மட்டுமே சந்தித்து - கல்லடியையும் சொல்லடியையும் கணக்கின்றி எதிர்கொண்டு திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான சமூகநீதியை - சுயமரியாதையை - பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புரை செய்தவர் அறிவாசான் தந்தை பெரியார். அவரிடம் பயின்ற பேரறிஞர் அண்ணா பொதுவாழ்க்கை என்பது பஞ்சு மெத்தை அல்ல, முள் படுக்கை என்பதை உணர்ந்தவர். ஆனாலும், திராவிட சமுதாயத்தை - தமிழ் மொழியை - தமிழினத்தை - தமிழ்நிலத்தை மேம்படுத்த அந்த முள் படுக்கையான பொதுவாழ்க்கையையே அவர் தேர்வு செய்ததுடன், தன் தம்பிகளையும், “மக்களிடம் செல்.. மக்களுடன் பழகு மக்களுக்காக உழைத்திடு” என்று வலியுறுத்தியவர்.

 

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் கழகத்தின் உடன்பிறப்பாக, மக்களுக்கான தொண்டனாக, உங்களில் ஒருவனாக என் பொதுவாழ்வுப் பணியை மேற்கொண்டு வருகிறேன். நெருக்கடிநிலைக் கால மிசா சிறைவாசமும் சித்திரவதைகளும் எனக்கு வெறும் தழும்புகளல்ல; பொதுவாழ்க்கையில் முதன்முதலாக கிடைத்த பரிசுகள் - பதக்கங்கள்! இளைஞரணிச் செயலாளர் பொறுப்பு என்பது பதவியல்ல; கழகம் எனக்குத் தந்த பாடத்திட்டம்! அதனை நல்ல முறையில் தொடர்ந்து பயின்று, தலைவர் கலைஞர் வைத்த தேர்வுகள் அனைத்திலும் வெற்றி பெற்றேன்.

 

பகுதி பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர் எனக் கழகத்திற்காகத் தொடர்ந்து உழைத்து, படிப்படியாக உயர்ந்து, கழகத் துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர் என வளர்ந்து, கழகத் தலைவர் என்ற பொறுப்பினை உங்கள் அன்பாலும் ஆதரவாலும் சுமந்திருக்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர், இரண்டாவது முறையும் மக்கள் வெற்றி பெறச் செய்த மேயர், உள்ளாட்சித் துறை அமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், மூன்று முறை கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் என மொத்தம் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினர் எனப் பயணத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவால் முதலமைச்சர் என்ற பொறுப்பினை வகிக்கிறேன்.

 

கட்சிப் பொறுப்பாக இருந்தாலும், ஆட்சிப் பொறுப்பாக இருந்தாலும் உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு.. என்பதையே எனது செயல்திட்டமாகக் கொண்டுள்ளேன். அதுதான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட விலைமதிப்பில்லாத சொத்து. தலைவர் அவர்களிடமிருந்து பெற்ற பாராட்டுப் பத்திரம். அந்த உழைப்பை இப்போதும் தொடர்கிறேன். என் சக்திக்கு மீறி உழைப்பதில் ஆர்வமாக இருக்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறுவது இடைத்தேர்தல்தான் என்றாலும், அது கழகத்தின் திராவிட மாடல் ஆட்சி பற்றி மதிப்பீட்டிற்கான எடைத் தேர்தல் என்பதால் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளருக்கு மகத்தான வெற்றியை உறுதி செய்திடும் வகையில் உழைப்பு தொடர்ந்தது.

 

எல்லாருக்கும் எல்லாம் என்கிற நமது திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இந்தியா முழுவதும் உற்று நோக்கப்படுகின்றன. இந்தியாவின் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை முன்னேற்றி வருகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக நாம் அயராது உழைக்கிறோம். மக்களின் நம்பிக்கைக்குரிய அரசாக திராவிட மாடல் அரசு இருக்கிறது. ஒன்றரை ஆண்டுக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள், தொடர்ந்து முன்னெடுக்கும் செயல்பாடுகள் இவற்றால் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ வேண்டும் என்பதே என்னுடைய இலக்கு. தமிழ்நாடு அத்தகைய நிலையை அடைவதுடன், இந்திய ஒன்றியத்தின் பன்முகத்தன்மை சிதையாமல், ஒருமைப்பாடு குலையாமல், மதநல்லிணக்கம் மிக்க ஜனநாயகம் தழைத்தோங்கும் நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கமாகும்.

 

என்னுடைய 70-ஆவது பிறந்தநாள் என்பது அதற்கான ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய ஒரு வாய்ப்பு என்பதைத் தவிர, வேறு வகையான ஆடம்பரங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நான் ஒருபோதும் விரும்புவதில்லை. பிறந்தநாள் விழா என்ற பெயரில் பேனர் வைப்பது, அலங்காரங்கள் செய்வது, ஆடம்பர விழாக்களை நடத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும் என்பதை இப்போதல்ல, இளைஞரணிச் செயலாளராக இருந்தபோதிருந்தே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். எளிமையான முறையில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி, ஐம்பெரும் கொள்கை முழக்கமிட்டும், ஏழை - எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோளாகும். கழகத்தினர் எது செய்தாலும், துரும்பைத் தூணாக்கி விமர்சனங்களுக்குக் காத்திருக்கும் எதிர்த்தரப்பினருக்கு கொஞ்சமும் இடம்தராமல் எளிய முறையில் நிகழ்வுகளை நடத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். 

 

கழகத்தின் தலைவர் என்ற முறையில்தான் என்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு உடன்பிறப்புகளாகிய உங்களுக்கு இந்தளவில் அனுமதி வழங்குகிறேன். அரை நூற்றாண்டு காலம் இந்த இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா என்றால் இந்தியாவே அதனை கவனிக்கும். அவரது பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாள் மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டம், ஏடுகளின் தலைப்புச் செய்தியாக மாறும். தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த அன்புச் சகோதரர் ஜெ.அன்பழகன் தலைவரின் பிறந்தநாள் விழாவை எத்தனை சீரும் சிறப்புமாக நடத்துவார் என்பதை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன். நெஞ்சிலே எத்தனையோ நினைவலைகள்!

 

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரை இயற்கை நம்மிடமிருந்து பிரித்தபிறகு, கழகத்தின் தலைமைப் பொறுப்பு என் தோளில் சுமத்தப்பட்டிருக்கும் சூழலில், திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் அரசியல் நிலைப்பாட்டினை இந்திய அளவிலான தலைவர்கள் அறிந்துகொள்ள நினைப்பதும், ஆதரவாக நிற்பதும் இயல்புதான். அந்த வகையில், சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் மார்ச் 1 அன்று மாலையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திற்கு கழகப் பொதுச்செயலாளர் அன்பு அண்ணன் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். கழகப் பொருளாளர் - நாடாளுமன்ற தி.மு.க குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வரவேற்புரை ஆற்றுகிறார்.

 

சிறப்புமிக்க அந்தப் பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமிகு.மல்லிகார்ஜூன கார்கே எம்.பி., ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், பீகார் மாநில துணை முதலமைச்சரும் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் என இந்திய அளவிலான தலைவர்கள் உரையாற்றுகிறார்கள். நாட்டின் ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும், அரசியல் சாசனம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் அதற்கான எதிர்காலச் செயல்திட்டத்தை முன்னெடுக்கும் இந்தப் பொதுக்கூட்டத்தில் நான் ஏற்புரையாற்றுகிறேன். மா.சு. நன்றியுரை ஆற்றுகிறார்.

 

உங்களில் ஒருவனான என்னுடைய 70-ஆவது பிறந்தநாளில் கழக உடன்பிறப்புகளான உங்கள் ஒவ்வொருவரின் அன்பான வாழ்த்துகளையும் மனம் உவந்து ஏற்றுக் கொள்வதுடன், திராவிடக் கருத்தியலின் அடிப்படை நோக்கங்களான சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மாநில உரிமை இவற்றைத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய ஒன்றிய அளவில் நிலைநாட்டிடும் ஜனநாயக அறப்பணியில் நாம் அனைவரும் இணைந்து நின்று, தொடர்ந்து உழைத்திட வேண்டும் என விரும்புகிறேன். நம்முடன் கொள்கைத் தோழமை கொண்டுள்ள இயக்கங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம். “தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம். இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்பாற்றுவோம்” என்பதே உங்களில் ஒருவனான உங்களின் முதன்மைத் தொண்டனான என்னுடைய பிறந்தநாள் செய்தி. அதற்கேற்ப அயராது உழைத்திட ஆயத்தமாக இருக்கிறேன். இலட்சிய உணர்வு கொண்ட உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பையே சிறந்த வாழ்த்துகளாகக் கருதுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.