Skip to main content

மூர்க்கம், சூடேறிய ரத்தம், வெக்கை, தண்டட்டிக் கிழவி...  மண் சார்ந்த எழுத்துகளும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியும்!

Published on 13/11/2020 | Edited on 01/05/2021

 

Vela Ramamoorthy

 

உலகமயமாக்கல் எனும் பெயரில் உலக மக்கள் அனைவரையும் ஒற்றைக் குடையின் கீழ் திரட்டி, தேசிய இனங்களின் கலை, பண்பாடு, கலாச்சாரம், மண் சார்ந்த வாழ்வியல் உள்ளிட்ட தனித்த அடையாளங்கள் பலியிடப்பட்டு வருகின்றன. இந்நூற்றாண்டு தன்னுடைய 50 வயதை எட்டும் முன், இதற்கான கொள்கை வகுப்பாளர்களின் திட்டம் வெற்றி அடைந்துவிடும் சூழலே நிலவி வருகிறது. மூதாதையர்கள் வாழ்ந்த மண் சார்ந்த சூழலியல் சீர்கேடற்ற வாழ்க்கை, வாழ்விட நிலப்பரப்புக்குள் அவர்கள் கொண்டிருந்த சுயசார்பு, அதன்மூலம் அவர்கள் கண்ட தன்னிறைவு, வாழ்வியலோடு பின்னிப்பிணைந்து இருந்த திருவிழாகொண்டாட்டங்கள்  ஆகியவற்றை எதிர்காலச் சந்ததியினருக்குச் செவிவழி செய்தியாகச் சொல்லக்கூட ஆட்கள் இல்லாத நிலையை அவசரகதியாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கை முறை ஏற்படுத்த இருக்கிறது. இவையெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற வேட்கைக்கு அந்தத் தலைமுறை ஆட்பட்டால், மண் சார்ந்து எழுதப்பட்டு வருகிற தமிழ் இலக்கியங்களே தரவுகளாக எஞ்சியிருக்கும் என்பது திண்ணம். மழைக்காலத்திற்கு உணவு சேகரிக்கும் எறும்புக்கூட்டங்களைப் போலத்தான் மண் சார்ந்து எழுதிவரும் இன்றைய எழுத்தாளர்களைப் பார்க்க வேண்டியுள்ளது. அந்தவகையில், செய்தற்கரிய அத்தகைய பணியைச் செய்துவரும் தமிழ் எழுத்தாளர்களில் வேல ராமமூர்த்தி அதிமுக்கியமானவர்.

 

இவர், ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும்,  குற்றப்பரம்பரை, பட்டத்து யானை, அரியநாச்சி, குருதி ஆட்டம் ஆகிய நான்கு நாவல்களையும் எழுதியுள்ளார். பொதுவாக எழுத்தாளர்கள் கதை கருக்களுக்காக அதிகம் மெனக்கெடுவது உண்டு. ஆனால், வேல ராமமூர்த்திக்கு அத்தேவை இருப்பதில்லையோ என்று அவரது படைப்புகள் நம்மை யோசிக்க வைக்கின்றன. அவர் கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம் கிராமங்களின்  மனிதர்களாகவோ, குடும்ப உறவுகளாகவோ இருப்பதும், கதையில் நிகழும் சம்பவங்களும் நம்மோடு இரண்டறக்கலந்ததாகவுமே உள்ளன. சூழலியல் அடிப்படையிலேயே சற்று வெக்கை மிகுந்த பகுதியான தென்பகுதி மக்களிடையே காணப்பட்ட மூர்க்கத்தனத்தையும், சூடேறிய ரத்தத்தின் வாசனையையும் உண்மைக்கு நெருக்கமாகப் பதிவு செய்த எழுத்தாளர் என்ற மகுடம் தமிழிலக்கிய வரலாற்றில் வேல ராமமூர்த்திக்கு மட்டுமே என்றும் உரியது.

 

இவரது நாவல்களில் மிக முக்கியப் படைப்பாக தமிழிலக்கிய வாசகர்களால் கொண்டாடப்படுவது 'குற்றப்பரம்பரை' எனும் நாவல். ஒரு காலத்தில் களவைத் தொழிலாகக் கொண்டிருந்த சமூகத்தின் வாழ்க்கை முறையை மையப்படுத்தி அதியற்புதமான படைப்பாக குற்றப்பரம்பரையை வடிவமைத்திருப்பார். அக்கதையின் மையக்கதாபாத்திரமான வேயன்னாவின் பாத்திரப்படைப்பு ஏற்படுத்திய தாக்கம் மற்றும் பிரமிப்பில் இருந்து வெளியேற சிரமப்பட்டவர்களும் உண்டு. குடும்ப உறவை மையப்படுத்தி கனக்கச்சிதமான நாவலாக எழுதப்பட்ட அரியநாச்சி, சுதந்திரப் போராட்டக் களத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட பட்டத்துயானை, பழிவாங்கும் படலமாக நீளும் குருதியாட்டம் என ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு ரகம். களவு சமூக பின்னணி கொண்ட இருளப்பசாமியும் 21 கிடாயும், சாதிய மேலாதிக்கத்தைத் தோலுரிக்கும் எங்க ஐயாமாருக்காக, ஆசை தோசை ஆகியன மிக முக்கியமான சிறுகதைகள் ஆகும்.

 

வேல ராமமூர்த்தி படைப்புகளின் அடையாளமாக இருப்பது அவரது கதாபாத்திரங்களிடம் காணப்படும் மூர்க்கத்தனமும், ரத்தம் தெறிக்கத் தெறிக்க அனல் பறக்கும் கதைக்களமும் ஆகும். அதேவேளையில், கூர்ந்து கவனித்தால் அவரது அனைத்துப் படைப்புகளிலும் ஒரு தண்டட்டி காதுக்கார கிழவி உணர்வு ஓட்டத்தைச் சுமப்பது தெரியும். அக்கிழவியின் சொல்பேச்சுக்கு அங்குள்ள பலரும் கட்டுப்படுவது மாதிரியான கதைப்போக்குகள், ‘மூத்தோர் சொல் முதுநெல்லிக்கனி’ என்ற பழமொழி வேரூன்றி இருந்த தமிழ்ச்சமூக வாழ்வின் வரலாற்றை அடையாளப்படுத்துகிறது.

 

வைரமுத்து, நா.முத்துக்குமார் ஆகிய படைப்பாளிகளின் இலக்கியப்படைப்பு நேரத்தை சினிமா விழுங்கியது போல, வேல ராமமூர்த்தியின் படைப்பு நேரமும் விழுங்கப்பட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது எழாமல் இல்லை. ஒரு தனியார் பத்திரிகையில் தொடராக வெளிவந்து, பின் புத்தகமாக வெளியாகிய குருதி ஆட்டம் நாவல் நமக்கு இச்சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. திரை நடிப்பிற்கு இணையான பங்களிப்பை, தமிழ் இலக்கியத்திலும் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்பதே அவரது தீவிர வாசகர்களின் பெரும் விருப்பம் ஆகும். 

 

மண் சார்ந்த இலக்கியங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட வேண்டுமா, மற்ற இலக்கியங்களில் இருந்து எங்கு அவை மேம்பட்டுவிட்டன என்று சிலருக்குத் தோன்றலாம். பல தேசிய இனங்களின் கூட்டமைப்பாக அமையப்பெற்ற இந்தியாவில், மண் சார்ந்த அரசியல் என்பது மிக முக்கியமானது. கடந்த சில நூற்றாண்டுகளாக சாதி எனும் இழிநிலை மூலம் உயர்வு, தாழ்வு கற்பிக்கப்பட்டதில் நிலம் எவ்வளவு பெரிய பங்கு வகித்தது என்பதை நம்மால் அறிய முடிகிறது.

 

இன்று இலக்கியக் கூட்டங்களில் உலக இலக்கியங்கள் என்று ரஷ்ய இலக்கியங்களும், லத்தின் அமெரிக்க இலக்கியங்களும் வெகுவாக கொண்டாடப்பட்டு வருகின்றன. உலக திரைப்படம் என்றால் என்ன என்ற கேள்விக்கு, உள்ளூர் திரைப்படங்களை சரியாக, நேர்மையாக, எதார்த்தமாக எடுத்தாலே அது உலக திரைப்படம் ஆகிவிடும் என்று முன்னர் எங்கோ வாசித்ததை நினைவில் உருட்டுகையில், தமிழக நிலப்பரப்புக்குள் இருக்கும் பன்மயத்தன்மையைத் துல்லியமாகப் புனைவு இலக்கியத்தினுள் புகுத்தினாலே, உலக இலக்கியங்களின் பட்டியலில் தமிழ் இலக்கியங்கள் பெறவிருக்கும் கணிசமான இடங்கள் குறித்தான பிரமிப்பு புருவம் உயரச்செய்கிறது. தமிழக நிலப்பரப்பிற்கு அப்பாற்பட்டு, புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் எழுத்தாளர்கள் அந்நிலப்பரப்பு சார்ந்த வாழ்க்கையைப் புனைவில் புகுத்தும்போது, தமிழ் இலக்கியவெளி பேசாத மனுசப்பாடுகளும், தொடாத நிலப்பரப்பும் இல்லையென்ற சூழல் உருவாகும். உதாரணமாக மலேசியா, இந்தோனேசியாவைக் கதைக்களமாகக் கொண்டு ப.சிங்காரம் எழுதிய கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி ஆகிய நாவல்களைச் செல்லலாம்.

 

இவையனைத்திற்கும் அப்பாற்பட்டு, இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல உலகமயமாகி வரும் இன்றைய சூழலில், நிலத்தின் மீதான உறவிலிருந்து நாம் விலகி வருகிறோம். நானும் திருநெல்வேலிதான், நானும் தூத்துக்குடிதான், நானும் மதுரைதான், நானும் தஞ்சாவூர்தான் என்று வெளியூர் சந்திப்பில் ஊரை மையப்படுத்தி செய்துகொள்ளும் அறிமுகத்தின்போது இருந்த பழைய உற்சாகம் தற்போது குறைந்து வருகிறதோ என்று தோன்றுகிறது. மண் சார்ந்த இலக்கியங்களின் தொடர் வாசிப்பே, இன்று நாம் நிற்கும் காலடி மண்ணிற்காக நம் மூதாதையர்கள் சிந்திய ரத்தம் எவ்வளவு என்பதை நமக்குணர்த்தும். அத்தகைய இலக்கியங்களில் வேல ராமமூர்த்தியின் பங்கு முக்கியமானது. 

 

 

Next Story

கதை திருட்டில் கேப்டன் மில்லர் - ஆதாரத்துடன் புகார்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
vela ramamoorthy complained in regards sangam by saubmit his novel

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 12 ஆம் தேதி வெளியான படம் கேப்டன் மில்லர். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதன் காரணமாக படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜன், தனுஷை நேரில் சந்தித்து மாலை அணிவித்து மகிழ்ந்தார். 

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி பாராட்டு தெரிவித்திருந்தார். தனுஷும் அதற்கு நன்றி தெரிவித்திருந்தார். இப்படம் தற்போது உலக அளவில் ரூ.65 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தெலுங்கு பதிப்பு வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுவந்த சூழலில், எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, தான் எழுதிய ‘பட்டத்து யானை’ நாவலைத் திருடி, கேப்டன் மில்லர் படத்தை எடுத்துள்ளதாகச் சில தினங்களுக்கு முன்பு கூறினார். மேலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் முறையிடப்போவதாகத் தெரிவித்திருந்தார். 

அதன்படி தற்போது, தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் தனது நாவலை வைத்து கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புகார் கொடுத்துள்ளார். மேலும் பட்டத்து யானை நாவலை சங்கத்தில் ஒப்படைத்துள்ளார்.