Advertisment

சோழர் படை கட்டிய சிவன் கோயில்; கல்லூரி மாணவி ஆய்வில் தகவல்

chola force build siva temple research scholar discived details

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் சோழர் படையினர் சிவன் கோயில் கட்டிய தகவலை தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி தெரிவித்தார்.

பால்கரையைச் சேர்ந்த ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே. சிவரஞ்சனி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு வழிகாட்டுதலில், தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் வி.டோனிகா, ஸ்ரீவிபின், முகம்மது சகாப்தீன், தீபிகாஸ்ரீ, பார்னியாஸ்ரீ ஆகியோருடன் கள ஆய்வு செய்தபோது, வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள், சோழர்களின் வேளைக்கார மூன்றுகைப் படையினர் கட்டிய சிவன் கோயில் போன்ற வரலாற்றுச் சிறப்புகளைக் கண்டறிந்தார். இதுபற்றி மாணவி வே. சிவரஞ்சனி கூறியதாவது.

பெருங்கருணை என்னும் ஊர்:

இவ்வூர், கி.பி.12 ஆம் நூற்றாண்டில் இராஜராஜ பாண்டி நாட்டில் மதுராந்தக வளநாட்டின் புனைவாயிலிருக்கை பகுதியிலும், கி.பி.16 ஆம் நூற்றாண்டில் சுந்தரபாண்டிய வளநாட்டிலும் இருந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுகளில் இவ்வூர் தடங்கழி, பெருங்கருணைச் சதுர்வேதிமங்கலம், மஹாகருணாகிராமம், சிலைமுக்குய நல்லூர் எனவும், ஆங்கிலேயர் காலத்தில் 'வெள்ளந்துறையாகிய பெருங்கருணை' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் கண்மாய் தடங்கனி என அழைக்கப்படுவதன் மூலம் இவ்வூரின் பழம்பெயர் தடங்கழி சற்று மருவி இன்றும் நிலைத்திருப்பதை அறியமுடிகிறது. இவ்வூர் கோயில் கல்வெட்டுகள் மத்திய தொல்லியல் துறையால் 1907ல் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சோழர் படை அமைத்த சிவன் ஆலயம்:

Advertisment

இவ்வூர் சிவன் தற்போது ஸ்ரீ அகிலாண்ட ஈசுவரர் எனப்படுகிறார். இங்கு இரு கல்வெட்டுகள் உள்ளன. ‘புகழ்மாது விளங்க’ எனத் தொடங்கும் கி.பி.1114 ஆண்டு கல்வெட்டு, முதலாம் குலோத்துங்க சோழனது 44 ஆம் ஆட்சியாண்டு முதல் கறியமுதிற்கும்ஆண்டுதோறும் வரும் நான்கு விஷு அயனங்களுக்கும்மாதந்தோறும் வரும் அமாவாசை பூசைக்கும் வேளாண் காளையவியனான குலோத்துங்கச் சோழ அள்ளுநாடாழ்வான் என்பவர் 11 தடி அளவுள்ள துண்டு நிலங்களை கோயிலுக்குக் கொடையாக வழங்கியுள்ளார் என்கிறது. இதில் அரைசறு கண்டி வயக்கல், மஞ்சளி வயக்கல், பெற்றாள் வயக்கல், செந்தி வயக்கல், சோழன் வயக்கல், தொண்டி வயக்கல், தொளர் வயக்கல் உள்ளிட்ட 12 வயக்கல் நிலங்கள் குறிப்பிடப்படுகின்றன. தரிசு நிலத்தினைச் சீர்படுத்தி, பயிர் செய்வதற்குரிய வகையில் பண்படுத்தப்பட்ட நிலம் வயக்கல் எனப்படும்.

இக்கல்வெட்டில் சிவன் பெயர் திருவேளைக்கார மூன்றுகை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்றுள்ளது. இதன்மூலம் சோழர்களின் வேளைக்கார மூன்றுகைப் படையினர், இக்கோயிலைக் கட்டினர் என்பது உறுதியாகிறது.திருநெல்வேலி மாவட்டம் மணப்படைவீடு என்ற ஊர் சிவன் கோயிலும் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் மூன்றுகை படையால் கட்டப்பட்டது ஆகும். ‘ஈழமுங் கொங்குங் சோழமண்டலமும் கொண்ட’ முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி.1267 ஆம் ஆண்டு கல்வெட்டில், இவ்வூர் சபைக்கு மன்னர் வழங்கிய சலுகையை தொடர்ந்து பெறுவதற்காக உய்யவந்தானான சோழியத்தரையன் என்பவரின் ஏற்பாட்டில் சபை முதலிகள் கூடிய தகவலைத்தெரிவிக்கிறது. இதை இவ்வூர் சிற்பாசிரியன் அழகிய பாண்டிய ஆசாரியன் எழுதியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை என்பது கல்வெட்டில் நாயிற்றுக் கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடைக்காலக் குடியிருப்பு:

chola force build siva temple research scholar discived details

இவ்வூரில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது சிவப்பு, கருப்பு பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், சுடுமண் சக்கரம், மணி செய்யும் கற்கள், கல் குண்டு, இரும்புக் கசடுகள், சங்கு மற்றும் கல் வளையல் துண்டுகள், விலங்கின் பற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இங்கு இரும்பு உருக்காலை இருந்ததை இப்பகுதியில் கிடைத்த இரும்புக் கசடுகள் நிறுவுகின்றன.சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வரலாற்றின் இடைக்காலமான கி.பி.12-14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன.

இவ்வூரில் வரதராஜ பெருமாள், பட்டாபிராமர், ஆயிரவல்லியம்மன் கோயில்களும் உள்ளன. தொல்லியல் தடயங்கள் மூலம் கி.பி.12லிருந்து 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இப்பகுதியில் ஒரு முக்கிய ஊராக இவ்வூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது என அவர் கூறினார்.

Chola Ramanathapuram research temple
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe