Skip to main content

சோ' வை ஏன் மிஸ் பண்ணுகிறார் ரஜினி?

Published on 05/01/2018 | Edited on 05/01/2018
'சோ' வை ஏன் மிஸ் பண்ணுகிறார் ரஜினி?



ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட அன்று, அவர் குறிப்பிட்ட ஒரு மிக முக்கியமான நபர் சோ. அந்த கூட்டத்தில் அவர் கூறியதாவது "நான் இப்போ 'சோ'வ  ரொம்ப மிஸ் பண்றேன், அவர் இருந்திருந்தா எனக்கு பத்து யானைகளோட பலம் இருந்திருக்கும். அவர் ஆத்மா எனக்கு துணையா இருக்கும்." அவர் அப்படி கூறியது சாதாரண வார்த்தைகளாக இல்லை. அப்படி என்னதான் இருந்திருக்கும் இருவருக்குள்ளும்.



ரஜினி, சோ குறித்து நிறைய கூறியுள்ளார். அவற்றுள் சில,
  • என்னுடைய மிகச்சிறந்த நண்பர் அவர்.
  • என் வாழ்க்கையில் நான் முக்கியம் என்று குறிப்பிடும் ஐவரில் ஒருவர் சோ.
  • அவர் உண்மையை மட்டுமே பேசுவார், உண்மையை மட்டுமே எழுதுவார், தனக்கு தெரிந்தவர்கள் என்பதாலோ, தான் சார்ந்தவர் என்பதற்காகவோ பொய் கூறமாட்டார்.
  • அவர் ஒரு மிகப்பெரிய அறிவாளி. அவரால் பயனடைந்தவர்கள்தான் அதிகமே தவிர, அவர் யாராலும் பயனடையவில்லை.
  • சென்னையிலிருந்தால் வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக அவரைப் போய் சந்திப்பேன். 


  ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என இப்போது பலர் கூறினாலும் அதற்கு தொடக்கமாக இருந்தவர்களுள்  சோவும் ஒருவர். ரஜினியின் வாழ்க்கை குறித்த பல சுவாரசியமான சம்பவங்களை அடிப்படையாக வைத்து வெளியான "தி நேம் இஸ் ரஜினிகாந்த்"(THE NAME IS RAJINIKANTH) என்ற ஆங்கில புத்தகத்தை வெளியிட்டவரும் இவர்தான்.  ரஜினி நல்லவர் பணம், புகழ், பதவிக்கு ஆசைப்படாதவர், உண்மையான மனிதர் என அவரை எப்போதும் ஆதரிப்பவர்.



ரஜினி, சோ இவர்களின் நட்பு 1978லிருந்தே இருந்தது. கிட்டத்தட்ட "ஆறிலிருந்து அறுபது வரை" என்ற திரைப்படம் தொடங்கப்பட்ட காலகட்டம்தான் அது. அன்றிலிருந்தே அவர்கள் நட்பு தொடர்ந்தாலும், 1992ல் இன்னும் நெருக்கமானது. 1996 தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ரஜினி ஆதரவு அளிக்க முக்கியமான காரணம் 'சோ'தான். ரஜினியின் முக்கியமான அரசியல் ஆலோசகரும் 'சோ'தான்.  ஜெயலலிதா, ரஜினி இடையே இருந்த பிரச்சனை மறைந்து இருவரும் நட்புடன் இருக்க சோதான் காரணம். இவர்களின் நட்பு ஒரு முக்கோண நட்பாக இருந்தது. ஜெயலலிதா இறக்கும்வரை அது அவ்வாறே தொடர்ந்தது. சோ இறந்தாலும், அவர்கள் நட்பு இன்றும் நிலைக்கிறது.

-கமல் குமார் 

சார்ந்த செய்திகள்