Skip to main content

ஆடி கார் தந்தது யார்? சித்ராவை சந்தித்த எம்.எல்.ஏ.வா? அமைச்சரா? மீண்டும் மீண்டும் பரபரப்பு!

audicar-chitra

 

சின்னத்திரை நடிகை சித்ரா தங்கியிருந்த ஹோட்டலுக்கு அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பே ஒரு மந்திரியின் கார் வந்து போயிருக்கிறது. விஜய் டி.வியின் ஷூட்டிங் அரங்குகள் நிறைந்த ஈ.வி.பி பிலிம் சிட்டி ஸ்பாட்டுக்கு பக்கத்தில் உள்ள அந்த ஹோட்டலுக்கு அமைச்சரின் கார் அடிக்கடி வரும்.

 

போலீஸ் பாதுகாப்பைத் தவிர்த்து விலையுயர்ந்த காரில் ஆரோக்கியமான மந்திரி அங்கு வருவது வழக்கம். சித்ராவுக்கு ஆடி கார் வரை பிரசண்ட் செய்யப்பட்டதன் பின்னணியிலும் இவர் இருக்கிறாராம்.

 

இந்த செய்தி அரசல் புரசலாக மீடியாக்களில் வெளியானதும், சென்னை மந்திரியை நோக்கி சந்தேக வலை பரவியது. அவரது ஆதரவாளர்கள மறுத்தனர். ஆனாலும், அ.தி.மு.க. சைடிலிருந்தே மீண்டும் மீண்டும் பரபரப்பு கிளம்பியது. அடுத்ததாக, பெரம்பலூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்ச் செல்வன் பெயரை உருட்டினர் சொந்தத் தொகுதி கட்சிக்காரர்களே!

 

2011-ஆம் ஆண்டு சசிகலாவின் அண்ணி இளவரசியின் சகோதரர் கண்ணதாசன் பெரம்பலூரில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அவரது சிபாரிசில் எம்.எல்.ஏ. சீட் வாங்கியவர் இளம்பை தமிழ்ச்செல்வன். 2016-ல் ஜெ.வின் நேரடி சாய்ஸில் சீட் பெற்றார். வாடகை வீட்டிலிருந்து வசதியான வாழ்க்கைக்கு மாறினார். பொள்ளாச்சி காமக்கொடூரங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியானபோது தமிழ்ச்செல்வனும், அவரது ஆட்களும் வேலைக்கு ஆள் எடுக்கிறோம் என்ற பெயரில் பெரம்பலூரில் உள்ள ஹோட்டலில் ரூம்போட்டு அங்கு வேலை தேடிவந்த இளம்பெண்களை ஆபாசமாகப் படமெடுத்து, சமூக வலைத்தளங்களில் பரப்பி, தொடர் டார்ச்சர் தந்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ வாக்குமூலத்தை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த அறம் என்பவர் வெளியிட்டார். ""இது தொடர்பான புகார்கள் எம்.எல்.ஏ. மீது இப்போதும் இருக்கிறது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார்'' அறம்.

 

audicar-chitra

 

இந்நிலையில், வேலை வாங்கித் தருவதாக மோசடி நடந்த அதே பெரம்பலூர் ஹோட்டலில் நடந்த ஒரு விழாவுக்கு நடிகை சித்ராவை அழைத்திருந்தார் தமிழ்ச்செல்வன். 2020-ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகவும் எம்.எல்.ஏ.வின் அழைப்பின் பேரில் சித்ரா பெரம்பலூர் வந்திருக்கிறார். அதற்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் 21- ஆம் தேதி பார்க் ஹவுஸ் என்கிற கிஃப்ட் ஃஷாப்பை திறந்து வைக்க சித்ராவை எம்.எல்.ஏ. அழைத்து வந்துள்ளார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சித்ராவின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் கோவையைச் சேர்ந்த ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியின் நிர்வாகியான தினேஷ் மூலமாகவே சித்ரா தமிழ்ச்செல்வனின் விழாக்களுக்கு வந்துள்ளார்.

 

இது பற்றி தினேஷிடம் கேட்டோம். அவர், ""24 வயதில் ஈவென்ட் மேனேஜ்மேண்ட் துறையில் செயல்படுகிறேன். சித்ராவை எனக்கு தெரியும். அவரை பெரம்பலூருக்கு அழைத்து சென்றது நான்தான். ஆனால், எம்.எல்.ஏ. எனது செல்போன் மூலமாக சித்ராவுக்கு அனுப்பிய குறுந்தகவல்களால்தான் அவருக்கும் அவர் கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு, சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மையல்ல. சித்ராவும் எம்.எல்.ஏ.வும் பேசவேண்டுமென்றால் நேரடியாகவே பேசிக் கொள்வார்கள். எனக்கு ஹேம்நாத்தை சித்ரா பதிவுத் திருமணம் செய்த விபரம்கூடத் தெரியாது'' என்றார்.

 

audicar-chitra

 

இந்த விவகாரம் குறித்து பெரம்பலூர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளரான குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரனிடம் கேட்டோம், ""இளம்பை தமிழ்ச்செல்வன் இதுபோன்ற பெண் விவகாரங்களில் சிக்குவது வாடிக்கை. சித்ரா மரணத்தில் இளம்பை தமிழ்ச்செல்வனுக்கு தொடர்பு இருப்பதாக செய்திகள் மீடியாக்களில் வெளியாகிறது. ஏற்கனவே தமிழ்செல்வன் அத்துமீறி ஒரு பெண்ணிடம் நடந்து கொண்டதாக வந்த புகாருக்கும், சித்ராவுடன் நெருக்கமாக பழகி அவரது தற்கொலைக்கு அவர் காரணமானார் என எழுந்திருக்கும் புகாருக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் எனக்கு போட்டியாக மாவட்ட செயலாளர் பதவியை பெற முயற்சித்தார். அடுத்த முறை எம். எல்.ஏ.வாக அவர் வெற்றி பெற்றால் அவர் அமைச்சர் ஆகிவிடுவார் என்கிற காரணத்தால் நான் சித்ரா விவகாரத்தில் தமிழ்ச்செல்வன் மீது புகார் கிளப்புகிறேன் என அவர் சொல்லி வருகிறார். அவர் அமைச்சரானால் எனக்கு மகிழ்ச்சிதான். என்னை பொறுத்தவரை தமிழ்ச்செல்வன் தனது விவகாரமான செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்'' என்றார்.

 

audicar-chitra

 

இதுபற்றி இளம்பை தமிழ்ச்செல்வனின் கருத்தை அறிய தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றோம். ஆனால் ஃபோனை அவர் எடுக்கவில்லை. வீட்டில் நேரில் சந்திக்க அப்பாயிண்ட் மெண்ட் கேட்டு தொடர்பு கொண்டோம். இரண்டரை மணி நேர காத்திருப்புக்கு பிறகு நம்மை சந்தித்தார். ""முன்பு என் மீது சொல்லப் பட்ட அந்த சர்ச்சைக்குரிய புகார் நான் சார்ந்திருக்கும் அ.தி.மு.க.வினராலேயே ஊதிப் பெரிதாக்கப்பட்டது. அந்த வழக்கு தற்பொழுது முடிந்துவிட்டது. 

 

2020-ஆம் ஆண்டு சித்ரா ஒரு ஹோட்டல் விழாவில் கலந்துகொள்ள பெரம்பலூருக்கு வந்தார். நான் அந்த விழாவில் கலந்து கொள்ள வில்லை. வேண்டுமென்றால் ஹோட்டல் நிர்வாகத்திடம் விசாரித்துக் கொள்ளுங்கள். மற்ற விழாக்களில் சித்ராவுடன் நான் கலந்துகொண்டேன். அவையெல்லாம் வெறும் ஐந்து நிமிட நிகழ்ச்சிகள். சித்ராவுக்கு ஆடி கார் வாங்கித் தர நான் உதவி செய்யவில்லை. நானே வாடகை வீட்டில்தான் இன்னமும் குடியிருக்கிறேன். நான் உபயோகப்படுத்தும் கார் கூட 9 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியது. நான் ஏன் ஒரு நடிகைக்கு மிக விலை உயர்ந்த காரை வாங்கித் தர உதவி செய்ய வேண்டும்'' என்றார்.

 

சித்ராவின் காதல் கணவர் ஹேம்நாத் போலீசுக்கு கொடுத்த வாக்குமூலத்தில் உங்களுக்கும் சித்ராவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறியிருக்கிறாரே என நாம் அவரிடம் கேட்டதற்கு, ""அவையெல்லாம் தவறான செய்திகள். எனது கட்சியில் இருக்கும் பலர் எனக்கு விரோதமாக செயல்படுகின்றனர். சித்ராவுக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பினேன் என்பது பொய். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஒரு நடிகைக்கு குறுஞ்செய்தி அனுப்பி வம்பில் மாட்டிக் கொள்ளமாட்டேன்'' என்றார்.

 

சித்ரா மரணம் குறித்து விசாரிக்கும் போலீஸ் வட்டாரங்கள், சித்ராவுக்கு மேனேஜர் என யாரும் கிடையாது. அவரே அவரது வேலைகளைப் பார்த்துக் கொள்வார் என்கிறார்கள். அதையேதான் நம்மிடம் பேசிய தினேஷும் உறுதி செய்தார். சித்ராவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். அவரது தாயாருக்கும் தெரியும். சித்ரா ஹேம்நாத்தை பதிவுத் திருமணம் செய்து கொண்டது மிக நெருங்கிய உறவினர் களுக்கு மட்டும்தான் தெரியும். சித்ராவுக்கு வரும் மெசேஜ்கள் விவகாரத்தில் அவரது தாயார், சித்ராவுக்கு ஆதரவாக இருந்துள்ளார். அதை அவரது கணவர் ஹேம்நாத் எதிர்த்துள்ளார். இதுதொடர்பாக சித்ராவின் விஜய் டிவி சூட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று ஹேம்நாத் பலமுறை தகராறு செய்துள்ளார். சித்ராவின் தாயார் அதை தட்டிக் கேட்டுள்ளார்.

 

இந்த மோதலில்தான் சித்ரா இறந்துள்ளார். சித்ராவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தற்கொலை எனக் கூறப்பட்டுள்ளது. அதுவே சந்தேகத்திக்குரியது. அந்த பிரேதபரிசோதனை கொஞ்சம் தாமதமாகவே நடந்துள்ளது. அதில் வந்த தற்கொலை முடிவுக்கு ஆளும் அ.தி.மு.க. தரப்பின் நெருக்கடியே காரணம் என்கிறார்கள் சித்ராவுக்கு நெருக்கமான நண்பர்கள். சித்ராவுக்கு பாப்புலாரிட்டி தந்த டி.வி சேனலின் நட்சத்திரங்கள் திருமண வாழ்க்கையில் ஜொலிப்பதில்லை என்ற சென்ட்டிமென்ட்டும் சின்னத் திரை வட்டாரத்தில் நிலவுகிறது. .

 

இதற்கிடையே சித்ராவின் மரணத்தைப் பற்றியும், ஆடி கார் பற்றியும் விசாரிக்க பெரம்பலூருக்கும், புதுக்கோட்டைக்கும் போலீஸ் டீம் அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.