Chinna Ponnu Interview

கிராமத்தின் வாசனையோடு இசைப் படையல் வழங்கும் நாட்டுப்புறக் கலைஞர் மற்றும் சினிமாவில் வெற்றிகரமான பல பாடல்களைப் பாடிய சின்னப்பொண்ணு உடன் ஒரு சிறப்பு நேர்காணல்...

Advertisment

என்னுடைய எந்த ஒரு மேடை நிகழ்ச்சியையும் நான் தவிர்க்க என்னுடைய குழந்தைகள்ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அவர்களுடன் பழகும் நேரத்தை எனக்காக தியாகம் செய்வார்கள். சினிமாவில் இந்த இடத்திற்கு நான் வந்ததற்கு கடவுளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இந்த இடத்தில் நான் இருப்பதற்கு அறிவுமதி ஐயா அவர்களுக்கு எப்போதும் நன்றி சொல்வேன். இயக்குநர் பி.வாசு சார், இசையமைப்பாளர் வித்யாசாகர் சார் ஆகியோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

Advertisment

சந்திரமுகி படத்தில் நான் பாடிய பாடல் இன்றுவரை எனக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது. பாடுவது மட்டுமல்லாமல் அதில் நடிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த ஷூட்டிங் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. ரஜினி சார் என்னைப் பாராட்டி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த போட்டோவை பேனராக அடித்து அதன் மூலமும் புகழ் கிடைத்தது.

நாட்டுப்புறக் கலைகளை மேம்படுத்த நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் சிலருடைய தவறான செயல்களால் வீணாகிப் போகின்றன. குரூப் டான்ஸ் என்கிற பெயரில் சிலர் ஆபாசமாக நடனமாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த ஆபாசம் தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது. இதைதமிழக அரசு தடை செய்ய வேண்டும். அப்போதெல்லாம் ஆண்களே பெண் வேஷம் போட்டு ஆடுவார்கள். பெண்களும் ஆபாசம் இல்லாமல் ஆடுவார்கள். அவர்களை மக்கள் பார்க்கவில்லையா? குறவன், குறத்தி நடனம் என்கிற பெயரில் ஆபாச நடனமாடி அந்த சமூகத்தை இழிவுபடுத்தாதீர்கள்.

பறையாட்டத்தில் மயங்கித்தான் என்னுடைய கணவரை நான் திருமணம் செய்தேன். என்னுடைய தந்தை ஒரு நாதஸ்வரக் கலைஞர். அவருடைய குடும்பமும் என்னுடைய குடும்பமும் இசைக் குடும்பங்கள் தான். அதுவே எங்களை இணைத்தது என்று நினைக்கிறேன்.ஒருகாலத்தில் திருமணங்களில் நம்முடைய பாரம்பரிய இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன. இப்போது கேரள மற்றும் வடநாட்டு இசைக்கருவிகளையே பலர் விரும்புகின்றனர். நம்முடைய கலைஞர்களே வடநாட்டு ஸ்டைலில் மாறியது தான் இதற்குக் காரணம். அதிக பணமும் கேட்கின்றனர். இடையில் உள்ள ஏஜென்ட்களும் இதற்குக் காரணம். நம்முடைய கலைகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.