Skip to main content

பள்ளிக் குழந்தைகளை குறிவைத்த ராட்சசன்கள்! -தப்பவிட்ட போலீஸ்! தமிழகத்தை பதறவைக்கும் வாக்குமூலம்! EXCLUSIVE

 

pr-krishna Lalaji Memorial Omega International School

 

 

 “நீ பாய்டா… நான் கேர்ள்… வா நம்ப ரெண்டுபேரும் கட்டிப்பிடிச்சுக்கலாம்” என்று ஒரே பள்ளியில் எல்கேஜி படிக்கும் பெண்குழந்தை இப்படிச்சொல்லிக்கொண்டு பூங்காவில் நெருங்கியபோதுகூட அதிர்ச்சியடையவில்லை அந்த ஆண்குழந்தையின் தாய். அதே, ஆண் குழந்தையும் மற்றொரு ஆண் குழந்தையும் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஆடைகளை அவிழ்த்துவிட்டு ‘நமக்கு இப்போ பாப்பா பொறக்கப்போகுதுடா’ என்று சொல்லிக்கொண்டபோது அதிர்ச்சியடையாமல் இருக்கமுடியவில்லை கிச்சனிலிருந்து வந்துபார்த்த இரண்டு தாய்மார்களுக்கும். ஆனாலும், தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு இப்படி நடந்துகொள்கிறார்களோ என்று நினைத்துக்கொண்டவர்களுக்குத்தான் அடுத்தடுத்த அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

 

 

அயனாவரம் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக புகார் கொடுத்தபோது தமிழமே அதிர்ந்துபோனது. 17 செக்யூரிட்டிகள் அதிரடியாக கைதுசெய்யப்பட்டு இன்றுவரை வெளிவரமுடியாமல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பள்ளிக்கு அனுப்பப்பட்ட சிறுமிகள், சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக சர்ச்சையாகி சென்னை  பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டும் இன்னும் சில உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை என்று நக்கீரனிடம் புகார் கொடுத்து குமுறி வெடிக்கிறார்கள் பெற்றோர்கள். இதுகுறித்து, நாம் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பகீரிடவைக்கிறது.  

 

pr-krishna

                                                                              சேர்மன் பி.ஆர். கிருஷ்ணன்


எல்.கே.ஜி. படிக்கும் குழந்தை பாலியல் வன்புணர்வுக்கு ஆளானது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த பிரபல லாலாஜி மெமோரியல் ஒமேஹா இண்டர்நேஷனல் (Lalaji Memorial Omega International School) பள்ளியின் பெற்றோர் பூர்ணிமா நம்மிடம் கொடுத்த வாக்குமூலம், தமிழகத்தில் இப்படியெல்லாம்கூட நடக்குமா என்று மனதை பதறவைக்கிறது “விளையாட்டு மைதானம் உட்பட குழந்தைகள் படிப்பதற்கான அனைத்து இன்ஃப்ராஸ்ட்ரக்சர்களும் கொண்ட இண்டர்நேஷனல் ஸ்கூல்ங்குறதாலதான் பிரீக்கேஜ் சீட் கிடச்சதும் வீடு மாற்றிக்கிட்டு சென்னை கொளப்பாக்கம் ஏரியாவுக்கே வந்தோம். பிரிக்கேஜ்ங்கிறதால கொழந்தைய ஆட்டோவுலதான் ஸ்கூலுக்கு அனுப்பிக்கிட்டிருந்தோம்.

 

 

அதுக்கப்புறம், எல்கேஜிங்குறதால 2018 ஜூலை -1 ந்தேதியிலிருந்துதான் ஸ்கூல் பஸ்ஸுல அனுப்ப ஆரம்பிச்சோம். குழந்தை வரும்போது இப்படியொரு டயர்டா வந்ததே இல்ல. இன்ஷர்ட் பண்ணி அனுப்புற ட்ரெஸ் எல்லாம் வெளிய எடுத்து இருந்தது. ஆனா… குழந்தை விளையாடிட்டு வர்றதால ரொம்ப டயார்டா இருக்கான் போலிருக்குன்னு நினைச்சுட்டேன். அப்புறம், மோஷன் போற இடத்துல வலிக்குதுன்னு சொன்னான். அடிக்கடி டூ பாத்ரூம் வருதுன்னு அழுதான். ஸ்கூலுக்கு போகமாட்டேன்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சுட்டான். எனக்கு ஒண்ணுமே புரியல. ஆனா, குழந்தை ஏதோ நம்பக்கிட்ட மறைக்கிறான்னு மட்டும் தெரிஞ்சது. ஏன்னா, அவன் ஏதாவது சின்ன தப்பு பண்ணினாலும் அப்பாக்கிட்ட சொல்லாதீங்கன்னு சொல்வான். அதேமாதிரி, அடிக்கடி அப்பாக்கிட்ட சொல்லாதம்மான்னு சொல்லிக்கிட்டே இருந்தான்.

 

 

அதுக்கப்புறம், ஒரு பொண்ணு என்னை ரொம்ப டிஸ்ட்ரப் பண்றாம்மா. என்னை புடிச்சு அமுக்கிடுச்சும்மான்னு ஒரு எல்.கே.ஜி. படிக்கிற குழந்தை நம்மக்கிட்ட சொல்லி அழுதா எப்படியிருக்கும்? ஆனா, என்னென்னு சொல்லல. உடனே, அந்த பெண் குழந்தையோட அம்மாவுக்கு  ஃபோன் பண்ணி, ‘பிரதீப்புக்கும் உங்க பொண்ணுக்கும் ஏதாவது சண்டையா? என்னன்னு கொஞ்சம் விசாரிங்களேன்’னு கேஷுவலாத்தான் சொன்னேன். விசாரிச்சுட்டு வர்றேன்னு சொன்ன அந்த பெண் குழந்தையோட அம்மா எனக்கு ஃபோனும் பண்ணல. ஃபோன் பண்ணினப்பவும் எடுக்கல.  அவங்களோட குழந்தையை கூட்டிக்கிட்டு சொந்த ஊருக்கு போய்ட்டாங்கங்குற விஷயம் தெரியவந்து அதிர்ச்சியானேன்.   

 

surendaran

                                                                                                 சுந்தரேசன்


 

என்னடா ஆச்சு உனக்கு? அம்மாக்கிட்ட சொல்லுடா செல்லம்னு கேட்டப்போ, ‘அதெல்லாம் சொன்னா, ஹார்ட்டு வெடிச்சுடும்மா. ப்ளட்டு வரும்மா. நான், உன்னை சேஃப் பண்ணும்மா’ன்னு பயந்துக்கிட்டே சொன்னான். அவன் சொன்னது எனக்கு உண்மையிலேயே இதயமே வெடிச்சுடும்போல இருந்தது. அப்புறம்தான், கொஞ்ச கொஞ்சமா சொல்ல ஆரம்பிச்சான்.  ‘ஒரு அங்கிள் மேஜிக் பன்றாரும்மா. அது, புழு மாதிரி இருக்கும்மா. சின்னதா இருந்து திடீர்ன்னு பெரிசாகுதும்மா. பார்க்கவே கேவலமா இருக்கும்மா. அதை, வாயில என் வெச்சு’ என்று சொல்லும்போதே பூர்ணிமாவின் கண்கள் குளமாகிறது. ஆசுவாசப்படுத்திக்கொண்டு மீண்டும் சொல்லத்தொடங்கினார், “அங்கிள்னு என் குழந்தை குறிப்பிட்டு ஸ்கூல் பஸ்ஸுல குழந்தைங்களை ஏற்றி இறக்குற அட்டெண்டர் பாஸ்கர்ங்கிறது தெரியவந்தது. குழந்தை சொன்னதையெல்லாம் கேட்டு எனக்கு உடம்பே சரியில்லாம போய்டுச்சு. யார் மேலேயும் தப்பா சந்தேகப்பட்டுடக்கூடாது. ஏன்னா, அவுங்களுக்கும் குடும்பம் இருக்கு. அதனால, உறுதிபடுத்திக்கணும்னு என்னோட அப்பார்ட்மெண்ட்டுல இருக்குற தேவிகாக்கிட்டேயும் விசாரிச்சேன்.

 

advocate kannadasan


                                                                               வழக்கறிஞர் கண்ணதாசன்

 

ஏன்னா, என்னோட பையன் பிரதீப்கூடத்தான் தேவிகாவோட பையன் வினோத் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஒண்ணா பஸ்ஸுல போறதால தேவிகாக்கிட்ட டிஸ்கஸ் பண்ணினேன். அதுக்கப்புறம்தான், உண்மைகள் தெரிய ஆரம்பிச்சது” என்று பெருமூச்சுவிட… அதே பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் வினோத்தின் தாய் தேவிகா நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

 

 

“பிரதீப்போட அம்மா பூர்ணிமா சொல்ற அதே சிம்டம்ஸ் என்னோட பையனுக்கும் இருந்துச்சு. ஆனா, ஒர்க் டென்ஷன்ல கவனிக்காம இருந்துட்டேன். ஆனா, பூர்ணிமா சொன்னபிறகுதான் வினோத்கிட்ட விசாரிச்சப்போ அப்யூஸ் நடந்திருக்குன்னு கன்ஃபார்ம் பண்ணினோம். (அதுவும், நடந்த கொடூரங்களை அக்குழந்தைகள் செய்துகாட்டிய விதம் அச்சிலேற்றமுடியாத கொடூர வேதனைக்குரியது) சின்னக்குழந்தைங்க என்ன பாடுபாட்டிருக்கும்னு  நினைச்சு, நினைச்சு அன்னைக்கு முழுக்க அழுதோம். தினமும் குழந்தைங்கள பஸ்ஸுல கூட்டிக்கிட்டுப்போற பாஸ்கரும் அவன்கூட இருக்கிற இந்திராவும் சேர்ந்து குழந்தைங்கள பாலியல் ரீதியா தொடர்ந்து கொடுமைப்படுத்தியிருக்காங்க. விசாரிச்சப்போதான் நிறைய பெண் குழந்தைங்களும் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.  

police

                 
                        பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனிபேருந்துல மட்டுமில்ல. ஸ்கூல் முதல் தளத்துல இருக்கிற ஸ்டோர் ரூம், பாத்ரூம், மெடிக்கல் ட்ரீட்மெண்ட் ரூம்லேயும் நிறைய குழந்தைங்க அப்யூஸ் ஆகியிருக்கிறாங்க. இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனி விசாரணை செய்யும்போது அந்த அறையை குழந்தைங்க காண்பிச்சாங்க. அந்த அறையில பாஸ்கர் மட்டுமில்ல. வேற சிலரும் வந்து குழந்தைங்கக்கிட்ட தப்பா நடந்திருக்காங்க. முடியைப்பிடிச்சு தூக்கி அடிச்சி கொடுமை படுத்தியிருக்காங்க. வயித்துல எட்டி எட்டி உதைச்சதா குழந்தை சொல்லிக்கிச்சு அழுவுறான். ஆண் குழந்தைங்களையும் பெண்குழந்தைகளை தப்பு தப்பா நடந்துக்கவெச்சி இரசிச்சிருக்கா அந்த லேடி இந்திரா. ஆண்குழந்தைங்களே இவ்வளவு கொடூரங்களை அனுபவிச்சிருக்காங்கன்னா பெண்குழந்தைகள் இவனுங்கக்கிட்ட சிக்கி என்னமாதிரியான வேதனைகளை அனுபவிச்சுதுங்கன்னு யோசிக்கும்போதே வேதனையா இருக்கு. லாலாஜி மெமோரியல் ஆசிரம்ங்குறதால வெளிநாட்டினர்களும் நிறைய பேர் வந்து தங்கியிருக்குறதால அவனுங்களுக்கும் இந்த குழந்தைங்கள இரையாக்கியிருப்பானுங்களோன்னு விசாரணை செய்யணும்.  

 

 

குழந்தைகள் பாலியல் ரீதியா துன்புறுத்தப்பட்டது தெரிய ஆரம்பிச்சதுமே பெற்றோர்கள் எல்லாம் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் பண்ணினாங்க. ஆனா, எல்லோரையும் அலட்சியமா பேசி மிரட்ட ஆரம்பிச்சுட்டார் சேர்மன் பி.ஆர். கிருஷ்ணன். இந்தவேலைக்கு பெண்களை வெச்சாலும் பிரச்சனையா இருக்கு. ஆண்களை வெச்சாலும் பிரச்சனையா இருக்குன்னு சொன்னார். அப்படின்னா, ஏற்கனவே அவருக்கு இப்படியொரு பிரச்சனை நடந்துக்கிட்டிருக்கிறது தெரியும்ங்குற அவரோட வாக்குமூலத்திலேயே வெளிப்பட்டது.

 

 

‘ஆம்பள பசங்கக்கிட்ட சில்மிஷம்தானே பண்ணியிருக்கமுடியும்… வேற என்ன செஞ்சிருக்க முடியும்?’னு ரொம்ப நக்கலா சொல்லி சிரிச்சாரு பி.ஆர்.ஓ. சுப்பிரமணியன். புகார் கொடுத்தபிறகும் ஸ்கூல் பஸ்ஸுல வர்ற பாஸ்கரையும் அவன்கூட வந்த இந்திராவை மட்டும்தான் அரெஸ்ட் பண்ணினாங்க பூந்தமல்லி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனி. ஆனா, உண்மையான குற்றவாளிகளை இன்னும் அரெஸ்ட் பண்ணவே இல்ல. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி புகார் கொடுக்கவந்த பெண் குழந்தையின் பெற்றோரைப்பார்த்து ‘நீங்க புகார் கொடுக்கவேணாம். அசிங்கமாகிடும்… பெண் குழந்தையோட ஃப்யூச்சர் பாதிக்கும்’னு சொல்லி ப்ரைன்வாஷ் பண்ணி புகாரை வாங்காம அனுப்பி ஸ்கூல் மேனேஜ்மெண்டை காப்பாற்றிட்டாங்க இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனி.  பல விதங்களில் எங்களை மிரட்டி நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சாங்க. மெடிக்கல் டெஸ்ட்ங்குற பேர்ல எங்களையும் குழந்தையையும் மரணவேதனை அடையுற அளவுக்கு கொடுமை படுத்தினாங்க. மெடிக்கல் ரிப்போர்ட்ல நெகட்டிவ்ன்னு வந்துடுச்சே அப்புறம் ஏன் மேனேஜ்மெண்டுக்கு எதிரா புகார் கொடுத்து போராட்டம் பண்ணிக்கிட்டிருக்கீங்கன்னு எங்களை உளவியல் ரீதியா காயப்படுத்த ஆரம்பிச்சாங்க மேனேஜ்மெண்ட் ஆட்கள்.  மாஜிஸ்திரேட்டுக்கிட்ட குழந்தைங்க 164 வாக்குமூலம் கொடுக்கிறதிலேயும் வேணும்னே அலைகழிச்சாங்க  இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனி. அதாவது, குழந்தைங்க துங்குறநேரமா பார்த்து வரச்சொன்னாங்க. அப்புறம், மாலை 4 மணிக்கு வரச்சொன்னாங்க. 4 மணிக்கு மாஜிஸ்திரேட்டும் வாக்குமூலம் வாங்க ரெடியாகிட்டாங்க. ஆனா, வீடியோ கேமரா கொண்டுவரலன்னு அசால்ட்டா சொல்றாங்க. ஒரு இன்ஸ்பெக்டருக்கு 164 வாக்குமூலத்தின்போது அதுவும் இந்தமாதிரி சென்சிட்டிவ் கேஸ்ல வீடியோபதிவு வாக்குமூலம் வாங்குவாங்கன்னு தெரியாதா? கேமரா வர்றது ஒன்றரை மணிநேரம் ஆகிடுச்சு. அடுத்தது, மெமரிகார்டு எடுத்துட்டு வரலைன்னு சொன்னாங்க. அதுக்கப்புறம், நாங்களே 1000 ரூபாய் கொடுத்து மெமரிகார்டு வாங்கிக்கொடுத்தோம். அதுல, அரைமணி நேரம்னு ரெண்டு மணிநேரம் ஆகிடுச்சு. இதிலேயே குழந்தைங்க ரொம்ப டயார்டா ஆகிட்டாங்க.

 

நல்ல ஸ்கூல்னு நம்பி பிள்ளைங்கள அனுப்பினா, இப்படி அப்யூஸ் பண்ணினது மட்டுமில்லாம புகார் கொடுத்த எங்களுக்குத்தான் தண்டனை. கைது செய்யப்பட்ட பாஸ்கரும், இந்திராவும்கூட ஒரு மாசத்திலேயே வெளியில வந்து தைரியமா சுத்திக்கிட்டிருக்காங்க. பாஸ்கரும் அந்த பெண்ணும் மட்டும்தான் தப்பு பண்ணினாங்கன்னா ஸ்கூல் மேனேஜ்மெண்ட் ஏன் அவங்க ரெண்டுபேரையும் காப்பாற்றணும்? கெருகம்பாக்கம் ஊராட்சிக்கழக செயலாளர்- தலைவர் சுந்தரேசன் ஆகியோர் அடியாட்களைக்கூட்டிக்கிட்டு வந்து மிரட்டி ஸ்கூல் மேனேஜ்மெண்டுக்கு சார்பா பஞ்சாயத்து பண்ண ஆரம்பிச்சுட்டார். பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சார்பா உங்களையெல்லாம் நாங்க கூப்பிடவே இல்லையே எதுக்கு வந்து பிரச்சனை பன்றீங்கன்னு கேட்டதுக்கு ஒரு பெற்றோரோட சட்டையை பிடிச்சி அடிக்கவந்துட்டார் சுந்தரேசன்.

 

பெற்றோர் போர்வையில் கொளப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் இயேசுபாதம், அபிராமி, செந்தில் என பலரும் அக்யூஸ்ட்டுக்கு ஆதரவா பஞ்சாயத்து பண்ணினாங்க. போலீஸு டாக்டரு எல்லாரையும் விலைக்கு வாங்கிட்டாங்க. இதுக்குப்பின்னால, மிகப்பெரிய நெட் ஒர்க் இருக்குங்க. தப்பு செஞ்சவன்லாம் தைரியமா உலாவுறாங்க. ஆனா, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பிள்ளைங்க ஸ்கூலுக்கு போகாம வீட்டுல இருக்குதுங்க. உளவியல் ரீதியா ரொம்பவே பாதிக்கப்பட்டதால எங்களுக்கும் ரொம்ப வேதனையா இருக்கு. வெளியில தைரியமா புகார் கொடுத்தது நாங்க மட்டும்தான். ஆனா, பாதிக்கப்பட்ட பிள்ளைங்க நிறையபேரு இருக்காங்க. ஸ்கூல் மேனேஜ்மெண்ட்டோட மிரட்டலுக்கு பயந்துக்கிட்டிருக்காங்க. நக்கீரன்தான் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு துணையா இருந்து நீதியை பெற்றுத்தரணும்”என்று கோரிக்கை வைத்து கண்கலங்குகிறார்கள் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள்.

 

 

பாதிப்பட்ட குழந்தைகளுக்கு ஆதரவாக சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் பிரபல வழக்கறிஞர் கண்ணதாசன் நம்மிடம், “போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட அக்யூஸ்ட் 30 நாளில் வெளிவருவந்ததிலிருந்தே இதில் எவ்வளவு சட்டமீறல்களும் அதிகாரவர்க்கமும் துணை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம். அக்யூஸ்ட் வந்ததே எனக்கு தெரியாது என்று இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனி சொல்வதிலிருந்தே எந்தளவுக்கு பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். சம்பவம் நடந்தது செங்கல்பட்டு நீதிமன்ற எல்லைக்குள் வருகிறது. ஆனால், இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின்டேனி வெண்டுமென்றே திருவள்ளூர் மகிளா கோர்ட்டிற்கு வழக்கை மாற்றியுள்ளார். மேலும், குழந்தைகள் பாதிப்பட்டது தொடர்பான பல தடையங்களை அழித்திருக்கிறார். பள்ளி நிர்வாகம் அக்யூஸ்ட்டுக்கு துணையாக இருக்கிறது. வெளிநாட்டினர்கள் வந்து தங்கியிருக்கும் ஆசிரம நிர்வாகம் நடத்தும் பள்ளி என்பதால் குழந்தைகள் மீது பாலியல் இச்சைக்கொண்டிருக்கும் (Pedophilia) கொடூரன்கள் துன்புறுத்தியிருப்பார்களோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  உள்ளே, மாணவ மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியும் உள்ளது.  சிறுமிகள், சிறுவர்கள் என பலக்குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதால் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரியிருக்கிறோம். வழக்கு விசாரணை டிசம்பர்-20 ந்தேதி வந்தது. பத்தாண்டு சிறைதண்டனை பெறக்கூடிய போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அக்யூஸ்ட்டுகள் ஒருமாதத்தில் எப்படி ஜாமீன் பெற்றார்கள்? என்று கேட்ட உயர்நீதிமன்றம் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்திடம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணை வரும்- ஜனவரி 3 ந்தேதி வர இருக்கிறது. சி.பி.சி.ஐ.டிக்கு போறீங்களா? இதுகூட வராது என்று புகாரளித்த தாய்மார்களிடம் நக்கலாக சொல்லிவிட்டு சென்றிருக்கிறார் இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனி. சி.பி.சி.ஐ.டி. விசாரித்தால் இன்னும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்” என்கிறார் அவர். 

 

 

இவ்வளவு குழந்தைங்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக கைது செய்த பாஸ்கரை ஒருமாதத்திலேயே வெளியில் வர நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா? என்று விசாரணை அதிகாரியான பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனியிடம் நாம் கேட்டபோது, “அக்யூஸ்ட்  ஜாமினில் வெளிவருவது குறித்த தகவலே எனக்கு வரவில்லை” என்று ஷாக் கொடுத்தவர், “அக்யூஸ்ட்டை போக்சோ ஆக்டில் கைது செய்துள்ளேன். இந்த வழக்குக்காக ஒரு மாதம் கஷ்டப்பட்டு புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளேன். இதே, திருவள்ளூர் மாஜிஸ்திரேட் 15 வயது பெண் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில்கூட 15 நாட்களிலேயே ஜாமின் கொடுத்துள்ளார். மேலும், 164 வாக்குமூலத்தை பொறுத்துதான் ஜாமினில் ஒருமாதத்திலேயே விட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் சொன்னார்”என்றார்.  

 

baskar

                                                                            கைதான பாஸ்கர்

 

‘164 வாக்குமூலம் பெற வீடியோ கேமரா கொண்டுவரவேண்டும் என்று உங்களுக்கு முன்கூட்டியே தெரியாதா? 4 மணிக்கு வாக்குமூலம் வாங்குவதற்கு பதில் இவ்வளவு தாமதாக வந்து வாக்குமூலம் கொடுத்தால் சோர்ந்துபோயுள்ள குழந்தைகள் எப்படி வாக்குமூலம் கொடுப்பார்கள்?’ என்று மாஜிஸ்திரேட் உங்களை கடிந்துகொண்டாராமே? என்று நாம் கேட்டபோது, “பிரைவேட் கேமராமேன் வரும்போது மெமரிகார்டை மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டார். அதனால், தாமதமாகிவிட்டது” என்று சமாளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சாட்சி சொல்ல வந்த பெற்றோர்களை தொடர்புகொண்டு சம்மன் கொடுப்பேன் என்று மிரட்டினீர்களாமே? என்று நாம் கேட்டபோது, “வழக்கை இன்னும் ஸ்ட்ராங்காக்க வேண்டும் என்றுதான் ஃபோனில் பேசி வரச்சொன்னேன். மிரட்டவேண்டும் என்ற நோக்கம் அல்ல” என்று விளக்கமளித்தார்.


 

indra

                                                                                      கைதான இந்திரா

 

கொளப்பாக்கம் முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவர் இயேசுபாதத்திடம் நாம் கேட்டபோது, “என் குழந்தையும் அப்பள்ளியில் படிக்கிறது. ஆனால், தினமும் நானே கொண்டுபோய் விட்டுவிடுவேன். கைதான பாஸ்கர் எங்கள் ஊரைச்சேர்ந்தவன். அவனுக்கு திருமணமாகி பசங்க இருக்காங்க. பிரச்சனைன்னு தெரிஞ்சதும் நானும் ஒரு பெற்றோராகத்தான் பள்ளிக்கு வந்தேனே தவிர பள்ளி சார்பாக வரவில்லை. அடியாட்களையும் அழைத்துவரவில்லை”என்றவர், “புகார் கொடுத்தவரின் தாய் அப்பள்ளியில் வேலை கேட்டுள்ளார். நிர்வாகம் வேலை தரவில்லை என்பதற்காக இப்படியொரு புகாரை எழுப்புவதாக பள்ளி நிர்வாகம் சொல்கிறது” என்றார். “வேலை கேட்டு கொடுக்காத பள்ளியை பழிவாங்க எந்த ஒரு தாயாவது தன் குழந்தையையே பலிகெடா ஆக்குவாளா? சரி… இன்னொரு தாயும் தனது குழந்தை பாதிக்கப்பட்டிருக்கிறது என்று புகார் கொடுத்திருக்கிறாரே? இவரைப்போன்று இன்னும் பல பெற்றோர்கள்  தங்கள் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டுகிறார்களே? இதெல்லாம் பழிவாங்குவதற்காகத்தான் என்கிறீர்களா?” என்று நாம் கேட்டபோது, “பாஸ்கர் தவறு செய்திருந்தால் நிச்சயம் தண்டிக்கப்படவேண்டியவன்தான்” என்றார்.

 

 

பாலியல் சர்ச்சை குறித்து சென்னை கொளப்பாக்கத்திலுள்ள லாலாஜி மெமோரியல் ஒமேகா இண்டர்நேஷனல் பள்ளியின் பி.ஆர். ஓ. (மக்கள் தொடர்பு அலுவலர்) சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “பெற்றோர் சொல்லும் வாக்குமூலத்தை நம்பாதீங்க. குழந்தைங்க சொல்லட்டும். அதுக்கப்புறம் என்னை தூக்குலகூட போடுங்க’ன்னு சொல்றான் பாஸ்கர். அவனோட ஊர்க்காரங்கதான் அவனைக் காப்பாற்றினார்களே தவிர மேனேஜ்மெண்ட் அவனுக்கு எந்த விதத்திலும் துணை நிற்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவன்மீது பாலியல் குற்றச்சாட்டு வந்ததுமே நாங்கள்தான் அவன்மீது புகார் கொடுக்க முன்வந்தோம். பெற்றோர்களின் புகாரை எடுத்துக்கொண்டது போலீஸ். காவல்துறையில் புகார் கொடுத்த பெண் எங்களிடம் வேலை கேட்டார். அவருக்கு கொடுக்கவில்லை. மேலும், குழந்தையை சீக்கிரம் கிளப்பாமல் பேருந்து வந்து நிற்கும்போது தாமதமாக்கி பாஸ்கருடன் சண்டைபோட்டுள்ளார். குழந்தைகளை கே.எம்.சி. அரசு டாக்டர்கள் பரிசோதித்ததில் எந்த தடயமும் இல்லை என்று வந்துவிட்டது. இதையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது பெற்றோர் வேண்டுமென்றே பொய் புகார் கொடுத்திருக்கிறார்களோ என்று தோன்றுகிறது. இச்சம்பவத்தால், பல்வேறு கிளைகளை பரப்பிய பிரபல இன்ஸ்டிடியூஷனுக்கு கெட்டபெயர் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் வேண்டுமென்றே பழி சுமத்துகிறார்கள்” என்றார் மேனேஜ் தரப்பின் விளக்கமாக.


 

dr sambath kumar

                         

 

                        ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் தடயவியல்துறைத்தலைவர் டாக்டர் சம்பத்குமார்
 

                           பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளதா? என்று ஆய்வு செய்ததில் மெடிக்கல் ரிப்போர்ட் என்ன சொல்கிறது? என்று ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையின் தடயவியல் துறைத்தலைவர் டாக்டர் சம்பத்குமாரிடம் கேட்டபோது, மெடிக்கல் ரெக்கார்டுகளை படித்துப்பார்த்தவர் நம்மிடம், “ஒரு பாலியல் துன்புறுத்தல் என்பது சம்பவம் நடந்த 24 மணிநேரத்திற்குள் பரிசோதித்தால்தான் தடயவியல் பரிசோதனையில் தெரியவரும். அப்படியிருக்க, குழந்தைகள் பாதிக்கப்பட்டு சில நாட்கள் ஆனதால் தடயங்கள் தெரியவில்லை. அதற்காக, இந்த பரிசோதனை ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு பாலியல் வன்புணர்வு சம்பவமே நடக்கவில்லை…. குழந்தைகள் பாதிக்கப்படவில்லை என்று சொல்லிவிடமுடியாது. குழந்தையை பரிசோதித்து பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததற்கான தடயங்கள் இல்லை என்று ரிப்போர்ட் அளித்த  சென்னை கே.எம்.சி. தடயவியல்துறை மருத்துவர் வினோத், எந்த இடத்தில் வலி இருக்கிறது? என்பதை குழந்தைகளிடம் கேட்டு அதையாவது ரிப்போர்ட்டில் பதிவு செய்திருக்கலாம். கே.எம்.சி. மருத்துவமனையின் மனநல மருத்துவர்கள் பரிசோதித்துப்பார்த்ததில் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பதை பதிவுசெய்திருக்கிறார்கள். அதாவது, குழந்தை அடிக்கடி டூ பாத்ரூம் போனது என்று பெற்றோரின் வாக்குமூலத்தை பதிவு செய்திருக்கிறார் மனநல மருத்துவர். ஆக, ஆசனவாய் மூலம் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்திருந்தால்தான் அது விரிவடைந்து அடிக்கடி  டூ பாத் ரூம் வருவதுபோன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனநல மருத்துவர்களின் மருத்துவக்குறிப்பில், குழந்தை பள்ளிக்குச்செல்ல பயந்திருக்கிறது, தாய் அந்த இடத்தை தொட்டுப்பார்ப்பதற்கே பயந்திருக்கிறது, தூக்கமின்மையால் தவித்திருக்கிறது, சாரியாக சாப்பிடுவதில்லை, வீட்டிலுள்ள லைட்லை ஆஃப் செய்தால் பயந்திருக்கிறது, அம்மாவை காப்பாற்றுவேன் என்று சொல்லியிருக்கிறது, அடிக்கடி கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது இதையெல்லாம் வைத்து ஆராய்ந்தபோது அக்குழந்தையின் குடும்பச்சூழலால் எந்தப்பிரச்சனையும் இல்லை. ஆனால், மன உளைச்சலில் இருக்கிறது என்று அரசு கே.எம்.சி. மருத்துவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், குழந்தைக்கு என்ன மன உளைச்சல் இருந்திருக்கும்? பள்ளியில் பாலியல் துன்புறுத்தல்தானே?” என்று அரசு மருத்துவர்களின் ரிப்போர்ட்டை சுட்டிக்காட்டி விளக்கமளித்தார் டாக்டர் சம்பத்குமார்.    

 

 

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உண்மையாக விசாரணை செய்தால்தான் இன்னு பல உண்மைகள் வெளிவரும்.