Child found on the road; Mother found in Sugarcane Forest - Shocking Details Revealed 20 Days Letter Photograph: (thiruvannamalai)
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணின் உடல் கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், கொலைக்கான காரணம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டிவனத்தில் தனியார் கல்லூரி அருகே இரண்டு வயது ஆண்குழந்தை ஒன்று சாலையில் தத்தளித்தபடி அழுது கொண்டிருந்தது. இதனைப்பார்த்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த குழந்தை திருவண்ணாமலையை சேர்ந்த சக்திவேல்-அம்சா என்ற தம்பதியின் குழந்தை என தெரியவந்தது.
உடனடியாக குழந்தை தந்தை சக்திவேலிடம் ஒப்படைக்கப்பட்டது. திருவண்ணாமலையை சேர்ந்த குழந்தை எப்படி திண்டிவனத்திற்கு வந்தது என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த அதிர்ச்சிகர தகவல் வெளியானது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் உள்ள கழிக்குளம் எனும் கிராமத்தில் வசித்து வந்தவர்கள் சக்திவேல்-அம்சா தம்பதி. கடந்த மாதம் அக்டோபர் 15ஆம் தேதி அம்சா தன்னுடைய இரண்டு வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பேருந்து மூலம் திருவண்ணாமலைக்கு சிகிச்சை அளிப்பதற்காக அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் குழந்தையும் தாயும் வீடு திரும்பவில்லை.
அம்சா எங்கே போனார் என்பது குறித்து பல்வேறு இடங்களிலும் சக்திவேல் மற்றும் அவருடைய உறவினர்கள் தேடி வந்த நிலையில் அவர் கிடைக்கவில்லை. அதனால் காவல்துறையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அம்சாவை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில்தான் இரண்டு வயது குழந்தை மட்டும் திண்டிவனத்தில் ஒரு கல்லூரி அமைந்துள்ள சாலையில் நிர்கதியாக விடப்பட்டது தெரிந்தது.
குழந்தை மீட்கப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று ஒரு ஆண் மற்றும் பெண் என இருவர் இருசக்கர வாகனத்தில் குழந்தையை சாலையில் விட்டுச் சென்ற காட்சியை போலீசார் கைப்பற்றினர். அம்சாவின் கணவர் சக்திவேலிடம் கேட்டபோது அந்த காட்சியில் உள்ள பெண்ணின் பெயர் நேத்ரா, அவர் எனது மனைவி அம்சாவின் தோழிதான் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கீழ்பெண்ணாத்தூரை சேர்ந்த நேத்ரா மற்றும் அவரது நண்பரான கொள்ளைகொட்டாய் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான திருப்பதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
அப்போது அந்த அதிர்ச்சிதரும் உண்மைகள் வெளியாகின. கடந்த மாதம் அக்.15 ஆம் தேதி தன்னுடைய இரண்டு வயது குழந்தைக்கு சிகிக்சை அளிப்பதற்காக திருவண்ணமலைக்கு பேருந்தில் வந்த அம்சா அவலூர்பேட்டை அருகே குழந்தையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் அம்சாவிற்கு முன்னமே பழக்கமாகிய தோழியான நேத்ரா தன்னுடைய நண்பர் திருப்பதியுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது அம்சாவை பார்த்துள்ளார். என்ன விவரம் எனக் கேட்டபோது குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க வந்துள்ளதாக அம்சா தெரிவித்துள்ளார். 'மருத்துவமனைக்கு நான் அழைத்துச் செல்கிறேன் வா' என ஆட்டோவில் ஏறச் சொல்லி இருவரும் அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் ஆட்டோ மருத்துவமனையை நோக்கி செல்லாமல் வேங்கிக்கால் பகுதியில் உள்ள திருப்பதியின் வாடகை வீட்டிற்கு சென்றுள்ளது. அம்சா ஒன்றும் தெரியமால் திகைத்த நிலையில் உள்ளே அழைத்து சென்ற இருவரும் அம்சாவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது கழுத்தில் இருந்த 4 சவரன் நகையை எடுத்துக்கொண்டனர். பின்னர் அம்சாவின் சடலத்தை சாக்குமூட்டையில் கட்டி திருவண்ணாமலை-விழுப்புரம் புறவழிச்சாலையில் உள்ள பள்ளிகொண்டா பட்டு பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தில் வீசியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் போலீசாரிடம் இருந்து தப்பிக்கும் நோக்கிலும், திசைதிருப்பும் நோக்கிலும் சம்பந்தமே இல்லாமல் குழந்தையை திண்டிவனத்தில் உள்ள கல்லூரி அருகே உள்ள சாலையில் நிர்க்கதியாக விட்டு சென்றாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு இருவரையும் அழைத்து சென்ற போலீசார் சாக்கு மூட்டையில் கட்டிய படி கிடந்த அம்சாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நான்கு சவரன் நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி கரும்பு தோட்டத்தில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow Us