/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/164_38.jpg)
ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசுக்கு முறையாக தரவேண்டிய நிதியை நேரத்திற்குத் தராமல், அதில் நினைத்த நேரம் கிள்ளிக் கொடுக்கிறது. ஆனாலும் இருப்பதைக் கொண்டு சிறப்பாகச் செயல்படுகிற முதல்வர் ஸ்டாலினைப் போன்றே கேரளா முதல்வர் பினராயி விஜயனும் செயல்படுகிறார் என்கிறார்கள் அக்கட தேசத்து அதிகாரிகள்.
வருங்காலத் தலைமுறையான இளைய வாரிசுகளைக் கல்வியில் தேர்ந்தவர்களாக செதுக்குகிற முயற்சியில் ஈடுபட்ட முதல்வர் பினராயி விஜயனுக்கு மத்திய அரசு கேரளாவுக்குத் தரவேண்டிய நிதியினை முறையாகத் தராமல் ஓரவஞ்சனையில் செயல்பட்டாலும், அதற்காக வளர்ச்சிப் பணிகளில் முடங்கி விடவில்லை என்கின்றனர் கேரள அரசியலை அறிந்தவர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/160_21.jpg)
கேரளாவிலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் கட்டத்தின் கெட்டப்பையே மாற்றிய பினராயி விஜயன் அவைகளை தனியார் மெட்ரிக் பள்ளிகளே வியக்குமளவுக்கு புத்தம் புதிய ஹைடெக் கட்டிடமாக மூன்று நான்கு அடுக்குகளைக் கொண்டவைகளாக அட்டகாசத் தோற்றத்துடன் அமைத்திருக்கிறார். அப்பள்ளிகளின் வகுப்பறைகள் ஏசியுடன் கூடிய குளிரூட்டப்பட்டவைகளாக மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவ மாணவியர்களின் கல்விக்கு உதவுகிற வகையில் ஐ.பி.கேமரா இன்ட்ராக்டிவ் போடியம் டிஜிட்டல் போர்டு, இன்டர் நெட் அமைப்புகள். லேப்டேப், மாணவர்களின் மனதில் படியும்படி கட்சிப்படுத்துகிற வகையில் கற்றுத் தருவதற்கான டிஜிட்டல் புராஜக்டர் வசதிகள் உள்ளிட்ட விஞ்ஞான தொழில் நுட்ப கருவிகளை அமைத்துக் கொடுக்கப்பட்டதால் ஆசிரியர்கள் மிகவும் சுளுவாக டிஜிட்டல் திரை மூலம் வகுப்பெடுத்து வருவது கல்வியில் வல்லிய முன்னேற்றம் என்றார்கள் மலையாள தேசத்து மக்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/158_20.jpg)
மேலும் கூடுதல் வசதியாக எஃப்.எம்.ரேடியோ வசதியும் விரைவில் இணைக்கப்பட உள்ளதாம். அதுமட்டுமல்ல, ஒரு வேளை ஆசிரியர், அல்லது மாணவர்கள் விடுப்பு எடுக்க நேருமாயின், அவர்களின் கல்வி பாதிக்காத அளவுக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஐ.பி.கேமரா மூலம் பாடங்களை வீட்டிலிருந்தபடியே கற்றுக் கொள்ளலாம், காற்றும் தரலாம். தனியார் மெட்ரிக் பள்ளியையும் பின்தள்ளிய வசதி என்பதால் அரசுப் பள்ளியில் மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கிறதாம். கோட்டயம், எரிக்காடு, திருவனந்தபுரத்தின் சிரயின்கீழு ஆகிய பகுதிகளின் அரசுப் பள்ளிகளில் கூடுதல் ஏசி வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சூழலுக் கேற்ற இத்தகைய ஹைடெக் வசதிகள் அரசுப் பள்ளிகளில் மட்டுமல்ல பிற பள்ளிகளும் இதனால் பயனடைந்துள்ளன. கேரளாவின் 7200 அரசுப் பள்ளிகள், 4500 அரசு உதவி பெறும் பள்ளிகள், 863 உதவி பெறாத பள்ளிகள் என்று மொத்தம் 12,563 பள்ளிகள் மேற்படி வகையில் நவீன மயமாக்கப்பட்டதற்கு மொத்தம் 687 கோடி அரசுக்குச் செலவாகியிருக்கிறதாம். வளர்ச்சி தான் முக்கிய நோக்கம் என்று பேசுகிற ஒன்றிய அரசு இந்த வகைக்கு கேரள அரசுக்குத்தரவேண்டிய பங்களிப்பைத் தரவே இல்லையாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/161_26.jpg)
ஆனாலும் மாநில நலன் கருதிய முதல்வர் பினராயிவிஜயன், இதற்கான நிதியைப் பெற மூளையைக் கசக்கியவர் KIlFTI (KERALA INFRASTRUCTURE INVESTMENT FUND) என்கிற நிதிகட்டமைப்பிலிருந்து கடன் பெற்றிருக்கிறார். அதாவது கேரளா மாநிலத்தின் கூட்டுறவு மற்றும் கிராமிய வங்கிகள் மற்றும் பிற வங்கிகளில் பல நூறு கோடிகள் பல வருடங்களாக டெபாசிட்களாக முடங்கியிருக்கின்றனவாம். இதற்கு ஜாமீன்தாரரும், கியாரண்டி கொடுப்பதும் அரசு தான். எனவே வளர்ச்சிக்கான நிதியைக் கடனாகப் பெற்ற அரசு பின்னால் திருப்பித்தர வேண்டும் என்பது விதியாம். இப்படியான வழியில் கல்வியில் ஜீ பூம்பா திட்டத்தை நிறை வேற்றியிருக்கிறாராம் பினராயி விஜயன்.
கேரளா முழுக்க உள்ள பென்சன்தாரர்களுக்கு ஒருவருக்கு 1600 வீதம் மாதம் 55 லட்சம் அரசுக்கு செலவு பிடிக்கிறதாம் இதில் 5 லட்சம் நகரவாசிகளின் பென்ஷனில் மட்டும் ஒருவருக்கு 200 வீதம் ஒன்றிய அரசு தருவது வழக்கம். மாநில அரசு தனது பங்களிப்பான ரூ1400 உடன் மத்திய அரசு தருகிற 200 ஐயும் சேர்த்து 1600 கொடுத்து வந்திருக்கிறது. தற்போது தருகிற 200 ஐயும் நாங்களே பென்ஷன்தாரர்களுக்கு கொடுத்து விடுகிறோம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துவிட மாநில அரசு 1400 மட்டுமே கொடுத்து வருகிறதாம். ஆனால் ஒன்றிய அரசின் ரூ 200 கிடைக்கத் தாமதமாவது பென்ஷன்தாரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் மாநில அரசுக்கு குடைச்சலாகியிருக்கிறது என்கிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/163_34.jpg)
ஒரு பக்கம் மலை, தொடர்ந்து சரிகிற மாதிரியான செங்குத்தான பள்ளத்தாக்கு; மறுபக்கம் கடல் என்று சிறிய தீவு போன்றிருப்பது கேரளா. இந்தச் சிறிய மாநிலத்தின் மக்கள் தொகை தற்போது நான்கு கோடியை எட்டியுள்ளது. மலையும் பள்ளத்தாக்குகளையும் கொண்ட கேரளாவில் உயரும் ஜனத்தொகைக்கேற்ப குடியிருப்புகளுக்கான நிலம் அவ்வளவாக இல்லாத காரணத்தால் இருப்பதற்குள்ளேயே சமாளிக்க வேண்டிய நிலை. நகர வளர்ச்சியின் பொருட்டு ரோடு டெவலப்மெண்ட் எனப்படும் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக யாரும் நிலம் கொடுக்க முன்வராததால் அதற்கான நிலம் கையகப்படுத்த முடியவில்லை என்று தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்தை கைவிட்டு விட்டதாம் கடந்த உம்மன் சாண்டி அரசு. இதனால் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அப்படியே முடங்கியிருந்திருக்கிறது. இதனால் போக்குவரத்து மேம்படாமல் போனதால் நகர வளர்ச்சியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தற்போதைய சூழலில் நகர வளர்ச்சி இன்றிமையாதது என்பதை உணர்ந்த பினராய் விஜயன், நெடுஞ்சாலை ஓரம் கடை மற்றும் நிலம் வைத்திருப்பவர்களை வரவழைத்து அவர்களிடம் பேசியிருக்கிறார். தேசிய நெடுஞ்சாலை அவசியம். அதற்காக உங்கள் நிலத்தைக் கையகப்படுத்தித்தான் ஆகவேண்டும். தேசிய நெடுஞ்சாலை வந்தால் அதில் செல்கிற வாகனங்கள் இடைநிற்காது. நின்றால் தான் உங்கள் கடை வியாபாரமாகும். நிற்காமல் விரைவாகச் சென்று விடுவதால் உங்களுக்குப் பலனில்லை. அதனால், நீங்கள் வைத்திருப்பது 2 சென்ட். அந்தப் பகுதியின் நில மதிப்பீடு சென்ட் 10 லட்சம். அதனால நஷ்டத்த ஈடுகட்ட உங்களின் 2 சென்ட் நிலத்திற்கு 20 லட்சத்திற்குப் பதிலாக 40 லட்சம் பிடியுங்கள். கடைகட்ட 20 பிற வகை என்று 10 ஆக மொத்தம் 70 லட்சம் பிடியுங்கள். இதைக் கொண்டு ஜனங்கள் பகுதியில் கடை கட்டம் கட்டி வியாபாரம் செய்யுங்கள் என்று அவர்கள் நினைத்ததை விட அதிக தொகை நில, கடை உரிமையாளர்களுக்கு கொடுக்க, மறு பேச்சே பேசாமால் பணத்தை வாங்கிக் கொண்டு சாலைக்காக நிலத்தை கொடுத்தவர்கள், சாலைப் பகுதியிலிருந்து தள்ளிப்போய் நிலம் வாங்கி கடை கட்டி லாபகரமாக இருக்கிறார்களாம்.
இந்த வகையில் கொல்லம் பெருவழிச்சாலையில் ஒன்றரை சென்ட் நிலத்தில் சீறிய வீட்டோடு கடை வைத்து மினரல் வாட்டரையே விற்றுத் திணறிக் கொண்டிருந்த ஒரு பாட்டி, அந்த நிலம் கொடுத்த வகையில் 50 லட்சம் பெற்றவர், தற்போது அம்சமாக இருக்கிறார். இப்படி இடம் பெயர்கிறவர்கள் புதிய கட்டிடம் கட்டி வியாபாரம் செய்வதால் அர்பன் ஏரியாவில் புதிய டவுன்ஷிப்கள் உருவாகின்றன என்கிறார்கள். இந்த வகையில் தான் முதல்வர் பினராயிவிஜயன் ஆறு வழிச்சாலையை அமைத்திருக்கிறார். அதற்காக இப்படியான நில எடுப்பு நஷ்டஈடு வகையில் அரசுக்கு ஐந்தாயிரம் கோடி செலவாகியுள்ளதாம். ஆனால் ஒன்றிய அரசோ, கேரளா அரசுக்குத் தரவேண்டிய நிதியைத் தராமல் இழுத்தடிக்கிறதாம். தவிர, வளர்ச்சிக்காக, கேரள அரசு உலக வங்கி, ரிசர்வ் வங்கி வெளிநாடு அமைப்புகளில் கடனாக நிதிபெறக் கூடாது என்று ஒன்றிய அரசு தடை போட்டு விட்டதாம்.
தமிழகம் போன்று கேரளாவிலிருந்து ஜி.எஸ்.டி.வரியாக பல லட்சம் கோடிகள் ஒன்றிய அரசுக்கும் போன பின்பும், நியாயமாக மாநில அரசுக்கு உரிமைப்பட்ட ஜி.எஸ்.டி.பங்குத் தொகையை மத்திய அரசு முழுமையாகத் தராத நிலையில், பெட்ரோலிய வரி, சுற்றுலா, எஸ்டேட், மற்றும் பிறவரி இனங்களில் கிடைக்கிற வருவாயைக் கொண்டு மாநில வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவாம். மேலும் உலக டூரிஸம் சென்டரில் கேரளா 10 வது இடத்தில் இருப்பதோடு, இந்தியாவின் நிதிவளர்ச்சியில் அங்கம் வகிக்கிற டாப் 10 மாநிலங்களில் முதலிடத்தில் கேரளா இருக்கிறது. என்று ரிசர்வ் வங்கியும் அறிவித்துள்ளதாம். இந்த வேளையில் தான், தனக்கான ஒன்றிய அரசின் நிதியினை கேரளா கேட்டு முறையிடுகிற சமயத்தில், நீங்கள் தான் நிதி வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாக ரிசர்வ் வங்கியே அறிவித்துள்ளதே. பிறகு ஏன் நிதி கேட்கிறீர்கள். சமாளியுங்கள் என்று ஒன்றிய அரசு கூறிவிடுகிறதாம். இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு தான் பினராயி விஜயன் அரசு மக்கள் நலப் பணிகளை மேற்கொள்கிறது என்கிறார் அதிகாரி ஒருவர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/165_72.jpg)
இந்த மாற்றம் குறித்து கேரள கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “கேரளா கல்வி மற்றும் சமூக நலனில் அர்ப்பணிப்பு மாநிலம். நன்கு பொருத்தப்பட்ட மற்றும் நவீன உட்கட்டமைப்பு தான் ஒரு வலுவான கல்வி முறையின் அடித்தளம் என்பதை உணர்ந்த முதல்வர் பினராய் விஜயன் பள்ளிகளை மேம்படுத்தியுள்ளார். சமூக பொருளாதார பின்னணியை பொருட்படுத்தாமல் குழந்தைகளுக்கு சம கல்விவாய்ப்பினை உருவாக்குவதில் அரசு அக்கறைகொண்டுள்ளது. அவர்களின் தரமான கல்வியை அரசு உறுதி செய்கிறது. அதனால்தான் இதில் அரசு யோசிக்காமல் உட்கட்டமைப்பை மேம்படுத்த கடந்த 7 ஆண்டுகளில் 3800 கோடி செலவிட்டுள்ளது. டிஜிட்டல் கல்வியறிவிற்கான கதவைத் திறந்துவிட்டிருக்கிறது. அரசியல் நலனுக்காக மத்திய அரசு தவிர்த்த பாடங்களை கேரளா கற்றுக் கொடுக்கிறது. இந்த முறை நவீன வேலை சந்தையில் அவர்களை நிச்சயம் வெற்றிபெற வைக்கும்” என்றார்.
Follow Us