நாட்டின் உச்சபட்ச அதிகாரத்தைக்கொண்டஒன்று உச்சநீதிமன்றம். அந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அளிக்கும் தீர்ப்புகள் சமூகத்தின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும். இந்தப் பதவியை வகித்து வந்த யு.யுலலித்தின் பதவிக்காலம் கடந்த 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி. ஒய். சந்திரசூட் பதவியேற்றுக்கொண்டார். பல முக்கியமான வழக்குகளில்சமரசமில்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ள டி.ஒய் சந்திரசூட்டுக்குதனதுதந்தையின் தீர்ப்பில்முரண்பட்டு நீதியின் மகனாக நின்று தீர்ப்பை மாற்றி எழுதிய தனிச் சிறப்பும் உண்டு. நீதியரசர் டி.ஒய். சந்திரசூட்உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக வருவதற்கு முன்பு இவரின்ஏனைய வழக்குகளின் தீர்ப்பும்,இவர்பதவியேற்பில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வும் இந்தியாவில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
டி.ஒய். சந்திரசூட்டின்தந்தையான ஒய்.வி. சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1978 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் பதவி வகித்த இவரே, அதிக ஆண்டுக்காலம்இந்தப் பதவியிலிருந்த ஒரே நபர் என்ற சிறப்பைப் பெற்றவர். தற்போது அந்தப் பதவியில்இவரதுமகன் டி .ஒய் சந்திரசூட் அமர்ந்துள்ளார். இந்தியாவில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் அமர்வது இதுவே முதல் முறை என்ற வரலாறும் உருவாகியுள்ளது.
யார் இந்த டி.ஒய். சந்திரசூட் ?
மும்பையில்கடந்த1959 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பிறந்த டி.ஒய். சந்திரசூட்,டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளியலில் (ஹானர்ஸ்) இளநிலைப் பட்டம் பெற்றார். அதன்பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப் படிப்பைமுடித்தார்.
அதன்பிறகு உச்சநீதிமன்றத்திலும், மும்பை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட்,1998-ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டுஇந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியிருக்கிறார். 2000 ஆம் ஆண்டுமும்பை உயர்நீதிமன்ற நீதிபதி, 2013 ல் அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, 2016 ல் உச்சநீதிமன்ற நீதிபதியாக அடுத்தடுத்துபதவிகளை வகித்து வந்தடி.ஒய். சந்திரசூட்தற்போதுஉச்சநீதிமன்றதலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று இருக்கிறார்.
முக்கிய வழக்குகளும்;முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளும்
சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம்;தன் பாலின சேர்க்கை குற்றமல்ல;பாலியல் தொழில், பெண்கள் கருக்கலைப்பு உரிமை, ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் டி.ஒய் சந்திரசூட் இடம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அரசியலமைப்பு படி ஆதார் எண் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தபோது, அதை அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த டி.ஒய் சந்திரசூட் மட்டும்அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆதார் எனக் காட்டமாகத்தெரிவித்திருந்தார்.
தந்தையின் தீர்ப்பில்முரண்;மாற்றி எழுதிய டி.ஒய் சந்திரசூட்
இந்தியாவில் 1975ல் இருந்து 77 வரை அவசரக் காலம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதில், அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் உட்படத்தவறாகவும், சட்ட விரோதமாகவும் பலர்சிறை வைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில்76ம் ஆண்டு விசாரணையிலிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக அப்போது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்‘அவசரக் காலத்தில் யாராவதுகைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டால்அது தவறானதாகவோ, சட்ட விரோதமாகவோஇருந்தாலும் கூட அதை எதிர்த்து எந்த உயர்நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர முடியாது’ எனத்தீர்ப்பு அளித்தது. இந்த அரசியல் சாசன அமர்வில்டி.ஒய். சந்திரசூட்டின்தந்தை ஒய்.வி. சந்திரசூட்டும்ஒருவர்.
இந்தத்தீர்ப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு தனிமனித உரிமைகள் தொடர்பான ஒரு வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்தது. அந்த அமர்வில் ஒய்.வி சந்திரசூட்டின்மகன் டி.ஒய். சந்திரசூட் இடம் பெற்றிருந்தார்.
திருமணமான பெண்ணுடன் தகாத உறவுகொள்ளும் ஆண்களைக் குற்றவாளியாக அறிவித்து5 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கும் இந்தியத்தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு செல்லுபடியாகும் என 1985 ஆம் ஆண்டு நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் தீர்ப்பளிக்க, ‘இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நம்முடைய தீர்ப்பில்மாற்றம் செய்ய வேண்டும். அந்தச் சட்டம் பெண்களின்ஆணாதிக்கக் குறியீடு’ எனக் கூறி அதனை ஒய்.வி. சந்திரசூட்டின்மகன் டி.ஒய். சந்திரசூட் ரத்து செய்தார்.
டி.ஒய் சந்திரசூட்டின்பதவியேற்பும்;மோடி பங்கேற்காததும்
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முஉச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்குபதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்அமித்ஷாஉள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்வில் நாட்டின் பிரதமர்மோடி கலந்துகொள்ளவில்லை. இது பெரும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததிலிருந்துமுன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் முதல் யு.யு லலித் வரை தலைமை நீதிபதிகளின் பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருக்கிறார். ஆனால்டி.ஒய் சந்திரசூட்டின்பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பாஜக மூத்ததலைவர்களில் ஒருவரானசுப்பிரமணிய சுவாமி, "எனக்குக் கிடைத்த தகவலின்படிஇன்று(9ம் தேதி) ராஷ்டிரபதி பவனில் நடந்த தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்காதது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் பாரதிய சன்மார்க்கத்துக்கும் எதிரான அவமானம் என்று முடிவு செய்கிறேன். இதற்காக மோடி விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காத வரை அவரது இந்தச் செயல் வருந்தத்தக்கது" என ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை மத்திய பாஜக அரசு விமரிசையாகக் கொண்டாடி வரும் வேளையில், நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்ட அனைத்துத்தரப்பு மக்களாலும் நம்பிக்கை பெற்றுள்ள உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளாததும்பாஜக மூத்த தலைவர் ஒருவரே அதனைக் கடுமையாக விமர்சனம் செய்து பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்று பதிவிட்டிருப்பதும் அரசியலிலும், சமூகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.