வணிக நிறுவனங்கள் பலவும் காலையிலேயே ஊரடங்கு மனநிலைக்கு வந்துவிட்டன. வெளியூரிலிருந்து வேலை பார்த்தவர்கள் நேற்றிரவிலிருந்தே கோயம்பேடு, பெருங்களத்தூர் எனக் குவிந்து விட்டனர். காலையிலிருந்தே மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சேவை குறைக்கப்பட்டுவிட்டது. எனவே, 144 நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே சென்னை தன்னை அதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டது. டாஸ்மாக் மட்டும் தனது கடைசி நொடி வரை பரபரப்பாகி பிறகு அமைதியானது.

Advertisment

Chennai

மாலை 6 மணிக்கு 144 தடையுத்தரவு நடைமுறைக்கு வந்தபிறகு, முக்கிய சாலைகளில் போக்குவரத்து இல்லை. சென்னையின் அடையாளமான ஆட்டோ-ஷேர் ஆட்டோ ஆகியவையும் இயங்கவில்லை. படபட சத்தத்துடன் செல்லும் எங்கள் புள்ளீங்கோவின் டூவீலர்களையும் தேட வேண்டியுள்ளது. மாநகரப் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபடி, மக்களுக்கு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

Advertisment

உணவுப்பொருள்கள், காய்கறி, மருந்து, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையகங்கள் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், மெடிக்கல் ஷாப் தவிர மற்ற இடங்களில் கடையின் பெயர்ப்பலகை விளக்குகள் எரியவில்லை. மளிகை கடைகளில் கல்லா அருகே மட்டும் லைட் எரிகிறது. ஜாம்பஜார், ஆதம் மார்க்கெட், திருவல்லிக்கேணி மார்க்கெட் ஆகிய இடங்களில் போலீஸ் வாகனத்தின் சத்தம் கேட்டதும் காய்கறிக் கடைகளின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.

Chennai

அத்தியாவசியப் பொருட்கள் கடைகளைத் திறந்திருந்தாலும் அங்கே கூட்டமாக மக்கள் நின்றால், கொரோனா ஆபத்துக்கு வழி வகுத்துவிடும் என்பதால் இரவு நேரங்களில் வியாபாரத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதே போலீஸ் ரோந்தின் நோக்கமாக இருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் மாஸ்க் அணிந்தபடி வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

ஹோட்டல்களில் பார்சல் உணவு மட்டும் விற்பனை செய்யலாம் எனச் சொல்லப்பட்டிருந்தாலும், பெரிய ஹோட்டல்கள் பலவும் அடைக்கப்பட்டுள்ளன. மெஸ், வீட்டுச்சமையல் வகை உணவகங்களில் பார்சல் வாங்கிச் செல்கிறார்கள். டீக்கடைகளும் பெருமளவு மூடப்பட்டுள்ளன. தள்ளுவண்டியில் பழம் விற்பனை செய்பவர்களை மெயின் ரோட்டில் விற்காமல் பக்கத்தில் உள்ள சந்தில் நிறுத்துமாறு போலீஸ் வாகனங்களிலிருந்து அதட்டல் குரல்கள் ஒலிக்கின்றன.

Chennai

முதல் ஒரு மணி நேரத்தில், சென்னை தன்னை 144க்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இதனிடையே நாட்டு மக்களிடம் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி, நள்ளிரவு முதல் 21 நாட்கள் இந்தியா முடக்கம்.கொரோனா ஆபத்திலிருந்து பாதுகாக்க வேறு வழி இல்லை என கூறியிருக்கிறார். ஓப்பனிங் நன்றாகவே உள்ளது ஃபினிஷிங்கின் பலனை அறிய பொறுத்திருப்போம்.