Skip to main content

ஹிட்லரையே சிரிக்கவைத்த சாப்ளின்! - நினைவுதினப் பகிர்வு

Published on 25/12/2018 | Edited on 25/12/2018
Charlie

 

 

 

லண்டனின் நெரிசலான வீதி ஒன்றில் வந்திறங்கும் ஆடுகளை ஒவ்வொன்றாக கீழிறக்கி, கடைக்குள் அனுப்பிக் கொண்டிருக்கிறான் கசாப்புக் கடைக்காரன். அதில் மிகச்சிறிய குட்டி ஒன்று அவனிடமிருந்து தப்பியோடுகிறது. ஆடுகளை இறக்குவதை விட்டுவிட்டு, தப்பிச்சென்ற குட்டியை விரட்டி ஓடுகிறான் அவன். எப்படியாவது அந்தக் குட்டியைப் பிடிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் ஓடும்போது, பலமுறை தரையில் விழுந்து எழுகிறான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவன் வயிறு குலுங்கச் சிரிக்கிறான். அவனோடு சேர்ந்து அந்த வீதியே சிரிக்கிறது. ஒருவழியாக அந்தக் குட்டியை பிடித்துவிட்ட கசாப்புக் கடைக்காரன், கடைக்குள் தூக்கிச்செல்கிறான். இதையெல்லாம் கண்டு சிரித்தவர்கள் அவரவர் வேலைகளைத் தொடர, அந்தச் சிறுவன் மட்டும் கசாப்புக் கடைக்காரனைப் பின்தொடர்ந்து கடைக்குள் நுழைகிறான். 

அங்கு அந்த ஆட்டுக்குட்டி தலை துண்டாகி துடிதுடித்துக் கிடக்கிறது. இதைக்கண்ட சிறுவன் வாழ்வின் யதார்த்தத்தை உணர்ந்து சிலையாகி நிற்கிறான். இன்னும் சில நிமிடங்களில் தலை துண்டிக்கப்பட்டு இறக்கப்போகும் யதார்த்தத்தை அறிந்து தப்பியோடிய ஆட்டுக்குட்டியின் உயிர்ப்போராட்டம், மக்களைச் சிரிக்க வைத்தது. அதே சிறுவன் பின்னாளில் தன் வாழ்வின் மனவேதனைகளை மறந்து மக்கள் சிரிக்கக் காரணமாகிறான். உலகின் தலைசிறந்த நகைச்சுவைக் கலைஞன் இவன் என உலகமே கொண்டாடுகிறது. வாழ்வின் யதார்த்தங்களை திரைமொழியில் மௌனமாய் பேசிய அந்த ஒப்பற்ற கலைஞன் சாப்ளின்.
 

Charlie


 

 

இறுக்கமான கோட்டும், அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத கிழிந்த பேண்டும், ஒழுகும் மீசையும், கால்களுக்குப் பொருத்தமில்லாத ஷூக்களும், வாத்து நடையும் என சில அடையாளங்களைச் சொன்னதுமே சட்டென நினைவில் தோன்றிவிடுவார் சாப்ளின். அவரது உண்மைத் தோற்றத்தைக் கூட யாரும் நம்பமுடியாத அளவிற்கு திரை சாப்ளினை நம்முள் ஜீவிக்கச் செய்தவர். சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் என்ற இயற்பெயரைக் கொண்ட அவர், தன் நிஜவாழ்வில் தான் அனுபவித்த துயரங்களின் காட்சிகளையே திரையில் காட்டினார். ஏப்ரல் 16, 1889ஆம் ஆண்டு பிறந்த சாப்ளினின் தொடக்ககாலம் அத்தனை சுவாரஸ்யமானதாக இல்லை. குடிக்கு அடிமையான தந்தை பிரிந்து சென்றதால், பாதி மனநிலைக்குறைபாடுள்ள தன் அன்புத்தாய் ஹன்னாவின் அரவணைப்பில் சகோதரன் சிட்னியுடன் வளர்ந்தார் சாப்ளின்.

வறுமை வாழ்வைத் திண்றுகொண்டிருந்த சமயத்தில், அம்மாவின் உழைப்பு மட்டுமே வயிற்றுக்கு ஆதாரம். பாடகியான ஹன்னா ஒருநாள் மக்கள் மத்தியில் பாடிக் கொண்டிருந்தபோது, குரல் உடைந்து பாட முடியாமல் தவிக்கிறார். அதிருப்தியடைந்த மக்கள் கூச்சலிடுகின்றனர். தன் அம்மாவின் இடத்தில் தோன்றிய சாப்ளின் ‘ஜாக் ஜோன்’ பாடலைப் பாடிக்கொண்டே தன்போக்கில் கை, கால்களை அசைக்கிறார். யார் இந்தப் பொடியன் என எண்ணிய பொதுமக்கள் அனுதாபத்தில் காசுகளை வீசுகின்றனர். ஆட்டத்தை நிறுத்திய சாப்ளின் சில்லரைகளைப் பொறுக்கிவிட்டு, மீண்டும் நடனத்தைத் தொடர்கிறார். மக்கள் லேசாக சிரிக்கின்றனர். சில்லரைகளை நிகழ்ச்சி மேலாளர் பொறுக்கும்போது, பாடிக்கொண்டிருந்த சாப்ளின் அவர் கையில் இருந்த சில்லரைகளைப் பிடிங்கிக் கொள்கிறார். மக்கள் ஆரவாரக் கூச்சலிடுகின்றனர். அங்குதான் சாப்ளின் தனக்கான கரவொலிகளைப் பெறத்தொடங்கினார்.

துயரங்களின்  நீண்ட தொடராய் ஹன்னா முழுமையாக மனநோயில் சிக்கிவிட, ஹானிபெல் சிறுவர்கள் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறார் சாப்ளின். வாழ்க்கை தன்பங்கிற்கு வாட்டுகிறது. குறும்புத் தனங்களால் செமத்தியாக அடிவாங்கும் சாப்ளின், அன்னையின் அன்பிற்காக ஏங்குகிறார். சிறுவயதிலேயே பக்குவப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டே, பிடித்த வேலையைத் தேடி அலைந்தார். சில வாய்ப்புகள் வாழ்வைத் தொடங்கும் வாய்ப்பைத் தந்தன. ‘ட்ரேம்’ என்ற நாடகம் அவருக்கான தனித்த அடையாளத்தை உருவாக்கித் தந்தது. கீஸ்டோன் என்ற நாடக நிறுவனத்தில் சேர்ந்து பணம் சேர்க்கத் தொடங்கினார். தனது தனித்த திறமையால் புகழ் தானாக வந்து சேர்கிறது.
 

Charlie


 

 

சினிமாவின் மீது தீராத பித்து கொண்டிருந்தவர் சாப்ளின். அவர் இயக்கும் படங்களின் காட்சிகளிலேயே அது தெரியும். தி கிட், மாடர்ன் டைம்ஸ், சர்க்கஸ், தி கோல்டு ரஸ், சிட்டி லைட்ஸ், தி கிரேட் டிக்டேட்டர் என அவரது திரைப்படங்கள்தான் இப்போதுவரை உலக சினிமாவின் கதைகளுக்கு உரம். அவரது கதைகளில் எளிய மனிதர்களை பிரதிபலித்திருப்பார். வாழ்வின் உண்மைகள் அதனதன் யதார்த்தங்களைப் பேசிக்கொள்வது மாதிரியான கதாப்பாத்திரங்களை வடிவமைத்திருப்பார். தொழிலாளர் ஒற்றுமை, பசி, வறுமை – அதன் நீட்சியான திருட்டு, சோகம், ஏக்கம், காதல், புரட்சி என ஏதொன்றையும் அதன் உச்சபட்ச நிலையோடு உருவப்படுத்தியிருப்பார். இத்தனைக்கும் அவர் படங்களில் வசனம் இருக்காது.

‘டாக்கி (பேசும் படம்) வந்ததும் நடிப்புக்கலை செத்துவிட்டது’ என கவலைப்பட்ட சாப்ளின், முதன்முதலாக தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் நீண்டநெடிய வசனம் ஒன்றைப் பேசியிருப்பார். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த சர்வாதிகாரி ஹிட்லரின் தோற்றத்தில் தோன்றி, உலக அமைதி குறித்து பேசும் வசனம் அது. உலக சமத்துவமும், ஒன்றுகூடுதலின் அவசியத்தையும் உணர்த்தும் அதைப்போன்ற உரை வேறெவராலும் பேசிவிட முடியாத அளவிற்கு சக்திவாய்ந்தவை. சாப்ளினைவிட நான்கு நாட்கள் இளமையான அடால்ப் ஹிட்லர் (ஏப்ரல் 20, 1889) அவரது ரசிகன் என்றும், சினிமா மீது அதீத மோகம் கொண்டிருந்த ஹிட்லர் அந்தப் படத்தை இரண்டு முறை பார்த்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு. இப்படி துயரின் மிச்சமாகவும், புகழின் உச்சமாகவும் வாழ்ந்த சாப்ளின், 1977ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி உயிர்நீத்தார்.

சாப்ளின் உலக சினிமாவின் அடையாளமாக சொல்லப்படுகிறார். உண்மையில் அவர் யதார்த்த வாழ்வின் ஆன்மா. புன்னகை என்னும் கலையில் நீடித்து வாழும் பொக்கிஷம். துன்பம் வரும் வேளையில் சாப்ளினோடு பேசுங்கள். நிச்சயம் ஆறுதல் தருவார். ஹிட்லரையே சிரிக்க வைத்தவரல்லவா அவர்!
 

Next Story

1971ல் வெளிவந்த துக்ளக் இதழ் இதுதான்? பரபரப்பை ஏற்படுத்திய இதழின் பக்கம்... பிரச்சனை முடியுமா?

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

சென்னையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில் மறைந்த சோவின் நெருங்கிய நண்பரான ரஜினி கலந்து கொண்டு பேசியபோது, “1971-ல் உடை இல்லாமல் இருக்கும் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார்.  அன்றைக்கு அதை யாரும் துணிந்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லை. ஆனால், ‘சோ’ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு சிக்கல் உருவானது. இதனால், துக்ளக் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். உடனே கொஞ்சமும் சளைக்காமல் மீண்டும் அச்சடித்து பிளாக்கில் புத்தகத்தை வெளியிட்டார்.  அப்புத்தகம் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனையானது.  அதன் மூலம் பத்திரிகை உலகில் சோ மிகவும் பிரபலமானார்’’என்று பேசினார். 

 

tuklak



இந்த கருத்துக்கு பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று தனது போயஸ்தோட்ட்டம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது ரஜினிகாந்த் அவுட்லுக் என்ற பத்திரிகையின் ஆதாரங்களை காண்பித்து தான் கூறியது சரிதான் என்றும் கூறினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று உறுதியாக கூறினார்.


இந்த நிலையில் தற்போது 1971 ஆம் ஆண்டு வெளிவந்த துக்ளக் இதழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளிவந்துள்ளது. இந்த பத்திரிகையில் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையில் ராமர் சிலைக்கு அவமரியாதை செய்யப்பட்டதாக குறிப்பிட்டதோடு ஒரு புகைப்படமும் அந்த கட்டுரையில் உள்ளது. மேலும் இது போன்ற ஊர்வலத்தை எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நடத்த அனுமதிக்க மாட்டார்கள் என்றும் ஆனால் திமுக ஆட்சி இந்த ஊர்வலத்தை அனுமதித்துள்ளது என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

 

 

Next Story

போலீஸ் ஸ்டேஷனாக மாற உள்ள ஹிட்லரின் வீடு!

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

ஹிட்லர் பிறந்த வீட்டை காவல் நிலையமாக மாற்ற ஆஸ்திரியா அரசு முடிவு செய்துள்ளது. பல யூதர்களை கொன்று குவித்தவர் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர். அவருக்கு சொந்தமான ஆஸ்திரியாவில் பிரனவ் ஆவ் இன் என்னும் நகரத்தில் உள்ள அவரது பிறந்த வீட்டை ஆஸ்திரியா அரசு காவல் நிலையமாக மாற்றவுள்ளது.



முன்னதாக ஆஸ்திரியா அரசு இந்த கட்டிடத்தை மொத்தமாக விலை கொடுத்து வாங்கி அதனை அகதிகளுக்கான மறுவாழ்வு மையமாக மாற்ற முயற்சித்தது. ஆனால் அந்த கட்டிடத்தின் உரிமையாளர் அதற்கு ஒத்துழைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு, கட்டாய விற்பனை உத்தரவின் மூலம் அந்த கட்டிடத்தை 8,10,000 யூரோக்களுக்கு ஆஸ்திரியா அரசு கைப்பற்றியது. இந்நிலையில் தற்போது இதனை காவல் நிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அந்நாட்டு மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.